வாரிசு அரசியலால் பாமகவில் பூகம்பம்
ராமதாஸ்
பிடிவாதம் அன்புமணி வெளிநடப்பு
தமிழகத்தின்
மிகப் பிரமாதமான சாதிக் கட்சியாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று தேடுவாரற்ற
கட்சியாக இருக்கிறது. கருணாநிதியும், ஜெயலலிதாவும்
பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல்
கூட்டணி வைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.முதலில் ராமதாஸை அழைத்துப் பேசி அவர் விரும்பிய தொகுதிகளைக் கொடுத்த பின்னரே மற்றைய
கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். அந்த நிலை இன்று இல்லை. ராமதாஸ்
கேட்டதை எடப்பாடி கொடுப்பதில்லை. ராமதாஸுடன்
கூட்டணி வைக்க ஸ்டாலின் விரும்பவில்லை.
ராமதாஸ்,
அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக இருந்த மோதல்
பகிரங்கமாகிவிட்டது.
விழுப்புரம்
மாவட்டம் பட்டானூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமகவின் புத்தாண்டு சிறப்பு
பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி
மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்
கலந்துகொண்டனர். அப்போது பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது, முகுந்தன்
என்பவரை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பதாக அறிவித்தார்.
அப்போது
டாக்டர் ராமதாஸுக்கு அருகே அமர்ந்திருந்த அன்புணி ராமதாஸ் குறுக்கிட்டு மைக்கை கையில்
எடுத்து, கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகுந்தனுக்கு பதவியா? அவருக்கு எல்லாம் என்ன
அனுபவம் இருக்கிறது என மேடையிலேயே பகிரங்கமாக எதிர்த்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை
சற்றும் எதிர்பார்க்காத டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகி, இது நான் உருவாக்கிய கட்சி. இங்கு
நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும். நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க
வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்ட போங்க என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையிலேயே நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன்.
விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று கூறி மைக்கை வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
இந்த
சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் திண்டிவனம்
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி கடந்த 29ம் திகதி
நேரில் சந்தித்து பேசினார்.
இருவரும் ஒரே இடத்தில் இருந்த போதும் அன்புமணியின் பக்கம் அராமதாஸ் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவருடைய கோபம் இன்னமும் தணியவில்லை.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி பேசுகையில்,
பாமக ஒரு ஜனநாயக அமைப்பு. பாமகவின் உட்கட்சிப்
பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது
போலத்தான் நடந்தது என்றார் அன்புமணி.இளைஞர்
சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத்
திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத்
தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.
அதன்பின்னர்,
தாத்தா டாக்டர் ராமதாஸை, தனது குடும்பத்தோடு போய் பார்த்த முகுந்தன், தாத்தா எனக்கு
இப்போது எந்தப் பொறுப்பும் வேண்டாம். மாமாவுக்கு (டாக்டர் அன்புமணி) ஆட்சேபனை இருப்பதால்
நான் எந்தப் பொறுப்பையும் வகிக்க விரும்பவில்லை. ஊடகப் பிரிவு பொறுப்பும் கூட வேண்டாம்.
வெறும் தொண்டனாக இருந்து கொள்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் ஏதாவது பொறுப்பு
கொடுத்தால் அதை ஏற்க நான் தயார். இப்போது எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில்,
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்
திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாமக பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன
கடிதத்தை வழங்கிவிட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழுவில்
ஏற்பட்ட பிரச்சினை சரியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்துடன் கூட்டணி சேர
ராமதாஸ் விரும்பினார். ஆனால், பாரதீய ஜனதாவின்
பக்கம் அன்புமணி கையைக் காட்டினார். இதனால் இருவருக்கும் இடையே மனக் கசப்பு நீடித்தது. இருவரும்
பெரிது படுத்தாமல் காலத்தைக் கடத்தினர். வாரிசு அரசியல் என ஏனைய கட்சிகளைக் குற்றம்
சாட்டிக்கொண்டு தனது வாரிசுக்கு முன்னுரிமை கொடுத்ததை அன்புமணி பகிரங்கமாகக் கண்டித்தார்.
வயது
முதிர்வு காரணமாக் கட்சியை அன்புமணியிடம் ஒப்படைத்து விட்டு ராமதாஸ் ஒதுங்கினார்.ராமதாஸைப்
போன்று அன்புமணி சுறுசுறுப்பாகச் செயற்படவில்லை. அதிக அதிகாரங்கள் இருந்தும் அன்புமணியால் பெரிய அளவிலான வெற்றிகளைப் பெற முடியவில்லை.
டாக்டர் ராமதாஸ் இருந்தபோது கட்சி எப்படி ஆக்ரோஷமாக இருந்ததோ, அதே அளவிலான செயல்பாடுகள் அன்புமணி தலைமையில் இல்லை என்பது டாக்டர் ராமதாஸுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாக தெரிகிறது
பாட்டாளி
மக்கள் கட்சித் தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியை
அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை கெளரவத் தலைவராக மாற்றியபோதும் கூட கட்சிக்குள்முணுமுணுப்பு எழுந்தது.
அன்புமணி ராமதாஸ் தலைவரான பிறகு பாமக அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தது. கட்சியின் வாக்கு வங்கியும் சரிந்ததால், தங்களைத்
தேடி கூட்டணி கட்சிகள் வந்த நிலை மாறி, தாங்கள் வெற்றி பெற பெரிய கட்சிகளின் கூட்டணியைத் தேடி போக வேண்டிய நிலை உருவானது.
கடந்த
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி
வைக்க ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் பாஜக பக்கம் போக வேண்டும் என்பதில்
பிடிவாதமாக அன்புமணி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையேயான குழப்பம் காரணமாக தான்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இணைய போவதாக முடிவு செய்து,
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அனைத்தும்
இறுதி செய்ய போகும் கட்டத்தில் கடைசி நிமிடத்தில் பாஜக கூட்டணிக்கு, பாமக செல்ல
வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
பாரதீயஜனதாக் கூட்டணிக்குச் சென்ற பிறகு எதிர்பார்த்த படி பெரிய அளவில் முன்னேற்றம்,
பலன்கள் எதுவும் கட்சிக்கு ஏற்படாததால் டாக்டர் ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக., கூட்டணிக்கு திரும்ப ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும்,
இதற்கு அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொள்ளாமல் போனதே இந்த மோதலுக்கு காரணம் என்றும்
சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, தற்போது ராமதாஸின் பேரனான முகுந்தனுக்கு கட்சியில்
மாநில இளைஞரணி தலைவர் பதவி கொடுத்தால் கட்சி மெல்ல மெல்ல முகுந்தனின் பக்கம் சென்று
விடும். இதனால் அன்புமணியின் பதவிக்கு சிக்கல்
ஏற்பட்டு விடலாம் என்பதாலும் முகுந்தனை கட்சியில் முன்னிலைபடுத்துவதை அன்புமணி விரும்பவில்லை.
தற்போது
அடங்கி இருக்கும் தந்தைக்கும், மகனுக்குமான
பிரச்சனை தேர்தல் நெருங்குகையில் பூகம்பமாக
வெடித்துக் கிளம்பும் அபாயம் உள்ளது.
ரமணி
5.1.25