Tuesday, February 19, 2008
எம்.ஜி.ஆரின் வாக்குவங்கியை கவர முயற்சிக்கும் ஜெயலலிதா
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி விஜயகாந்தின் பக்கம் செல்வதை
வர்மா
உணர்ந்துகொண்ட ஜெயலலிதா, எம். ஜி. ஆர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்துக்கு 11 வருடங்களின்பின்னர் சென்று எம்.ஜி. ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழக அரசியலைப் புரட்டிப்போட்ட ஒப்பற்ற சக்தி எம். ஜி. ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஜெயலலிதா தலைமை ஏற்றதில் இருந்து கழகத்தில் இருந்த எம். ஜி.ஆர். என்ற சொல்தான் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டடிக்கப்பட்டது. எம். ஜி.ஆரின் விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டார்கள். எம். ஜி.ஆரின் விசுவாசிகளிடம் இருந்த பதவிகள் பறிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து இருந்த இடத்தில் அம்மா என்ற மூன்றெழுத்து ஒட்டிக்கொண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் மூத்த தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு மதிப்புக்கொடுக்கத் தொடங்கினர்.
ஜெயலலிதாவின் எம்.ஜி.ஆர் விரோதக் கொள்கையினால் சிலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கி விட்டனர். எம். ஜி.ஆரின் அதிதீவிர விசுவாசியான ஆர். எம். வீரப்பன் எம்.ஜி. ஆர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார்.
எம். ஜி. ஆரின் வழியில் விஜயகாந்த் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். ஜெயலலிதாவினால் ஓரம் கட்டப்பட்ட எம். ஜி. ஆர் ரசிகர்கள் விஜயகாந்தின் கட்சியில் சேரத் தொடங்கினார்கள். விஜயகாந்தின் துரித வளர்ச்சியை ஜெயலலிதா முதலில் கண்டு கொள்ளவில்லை. காலப்போக்கில் விஜயகாந்தின் வளர்ச்சி ஜெயலலிதாவை அச்சப்பட வைத்தது. அதையடுத்து இத்தனை நாட்களாக எம். ஜி. ஆரின் புகழைப் பற்றிப் பேசாமல் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென ஞானோதயம் பிறந்தது.
எம். ஜி. ஆர் உயிருடன் இருந்த போது ராமாவரம் தோட்டம் கலகலப்பாக இருந்தது. அதனை புனித இடமாகக் கருதிய எம். ஜி.ஆரின் ரசிகர்களும், கழகத்தொண்டர்களும் ஒரு முறை ராமாவரம் சென்று தமது ஆதங்கத்தை தெரிவித்தார்கள். எம். ஜி.ஆர் மறைந்த பின்னர் ராமாவரம் தோட்டம் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை. இதுபற்றி பல பத்திரிகைளும் சஞ்சிகைகளும் பல கட்டுரைகளை வெளியிட்டபோதும் கண்டு கொள்ளாத ஜெயலலிதா இப்போதுதான் விழித்துக்கொண்டு ராமாவரம் சென்று எம். ஜி.ஆரை முன்னிலைப்படுத்துகிறார். எம். ஜிஆரின் பிறந்த நாளின் போதும்
நினைவுநாளின் போதும் வேறு எந்தத்
தலைவருக்கும் இல்லாத அளவில் விழாக்கள் நடைபெறும். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாங்களாகவே விழா எடுத்து எம்.ஜி.ஆரின் புகழை வெளிப்படுத்துவார்கள்.
அரசியல் தலைவர்களுக்கு அவர் சார்ந்த கட்சிகள்தான் விழா எடுப்பது வழமை. ஆனால் எம்.ஜி.ஆருக்கு அவரின் ரசிகர்கள் விழா எடுத்து அவரை நினைவுபடுத்துவார்கள். எம்.ஜி. ஆருக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படாமையே அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடையக் காரணம் என்று கருத்து நிலவுகிறது. அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் தோல்வியைப்பற்றி ஆராய்ந்தவர்கள் இதனை ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். எம்.ஜி. ஆரின் பெயரை உச்சரித்தால் வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா ராமாவரத் தோட்டத்துக்கு சென்று எம்.ஜி.ஆரின் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.
எம்.ஜி.ஆரின் பெயரைக் கூறி விஜயகாந் வளர்வதைத் தடுத்து எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு தானே என்பதை தமிழக மக்களுக்கு வெளிப்படுத்தும் முயற்சியில் ஜெயலலிதா வெற்றி பெற்றுவிட்டார்.
நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியை அமைக்க விரும்புகிறார் ஜெயலலிதா. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடனும் தமிழகத்தில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகளுடனும் கூட்டணி வைப்பதில் ஜெயலலிதா அக்கறையாக உள்ளார். வடமாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் பாரதீய ஜனதாகட்சி வெற்றி பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த செல்வாக்கு இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சி விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிடக்கட்சி, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா விரும்புகிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் தமிழகத்தில் செல்வாக்கு உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி தோல்வி அடைவதற்கு விஜயகாந்தின் எழுச்சியும் ஒரு காரணம்.
தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் நாடார் சமூகமும் முக்கியமானது. ஆகையினால் நாடார் சமூகத்தை குறிவைத்து கட்சியை ஆரம்பித்திருக்கும் சரத்குமாரையும் தனது கூட்டணியில் இணைக்க ஜெயலலிதாவிடம் விருப்பம் உள்ளது. இதேவேளை, விஜயகாந்துடனும், சரத்துகுமாருடனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதா தயாரில்லை. பாரதீய ஜனதாகட்சி விஜயகாந்துடனும் சரத்குமாருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சம்மதிக்கவைத்தால் தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி அமைந்து விடும் என்று ஜெயலலிதா எண்ணுகிறார்.
வர்மா
வீரகேசரி வார வெளியீடு, 27.01.2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சிலரைப் பல நாள் ஏமாற்றலாம்
பலரைச் சில நாள் ஏமாற்றலாம்
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்ற முடியுமா?
நடிகரின் உடல் மீது
செருப்புக் காலுடன்
ஏறி மிதித்துத் தாண்டி
அடி வாங்கித் தள்ளப்
பட்டது உண்மையா?
அடித்தவரைப் பதவிக்கு
வந்ததும் படுத்திய பாடு
மற்ற தோழர்களுக்கும் வேண்டுமா?
உங்களுக்குத்தெரிகிறது எனக்குத்தெரிகிறது அடிவருடிகளுக்குத்தெரியவில்லை
Post a Comment