Sunday, May 4, 2008


முதல்வர் கருணாநிதியின் முடிவு இராஜதந்திரமா? பின்வாங்கலா?

ஒகேனக்கலில் குடிநீர்த்திட்டம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்ததால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தமிழ் நாட்டுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. கர்நாடகத்தின் இனவெறிக்கு பதிலளிக்கும் வகையில் தமிழகத்திலும் ஆங்காங்கு கர்நாடகத்துக்கு எதிராக வன்செயல்கள் நடைபெற்றன.
கர்நாடகம், தமிழகம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கலவரம் வெடிக்குமோ என்று சகலரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தை ஒத்திவைப்பதாகத் தமிழக முதல்வர் அறிவித்ததால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன.
எலும்பை ஒடித்தாலும் ஓகேனக்கல் குடிநீர்த்திட்டம் நிறைவேறும் என்று வீரவசனம் பேசிய முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக தமிழக மக்களின் குடிநீர்த்திட்டத்தை அடகு வைத்துவிட்டார்.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்
ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்காக ஒற்றுமையாகக் குரல்கொடுத்தன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பரம எதிரியான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், அதன் தோழமைக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கரங்களை வசப்படுத்தின.
தமிழ்த்திரை உலகம் திரண்டு கர்நாடகத்தை மிரட்டியது. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரஜினி, அர்ஜுன், முரளி, ரம்பா ஆகியோர் ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்தில் உள்ள இன வெறிபிடித்தவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.
தமிழகத்தின் ஒற்றுமையின் காரணமாக
ஒகேனக்கல் பிரச்சினைக்கு சாதகமான தீர்ப்புக்கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் முதல்வரின் ஒரு தலைப்பட்சமான அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.கர்நாடக சட்டசபைத் தேர் தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒகேனக்கல் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளன.
தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதீய ஜனதாக் கட்சியும் ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராகவே உள்ளன. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதே இரு கட்சிகளின் நோக்கமாக உள்ளது. ஆகையினால் நியாயத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கர்நாடக வாக்குகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றன.
கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று முதல்வர் கூறி உள்ளார். மேல் நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புக்களைக் கூட துச்சமென தூக்கி எறிந்த கர்நாடகம் பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிவு ஒன்றைத் தரும் என்று எந்த அடிப்படையில் முதல்வர் நம்புகிறார் என்பது தெரியவில்லை.
காவிரி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகம் தப்பு செய்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொண்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு உரிய உரிமைகளை கொடுக்கும்படி மத்திய அரசு இதுவரை கர்நாடக மாநிலத்துக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போதும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் தீர்க்கப்படாத பிரச்சினையை கர்நாடகத்தில் மே மாதம் பதவி ஏற்கப்போகும் அரசு தீர்த்து வைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கனவு காண்கிறார்.
கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது. ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அமைச்சர் ஸ்ராலின்
ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்குக்கான அடிக்கல்லை நாட்டி சம்பிரதாயபூர்வமாக திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அப்போதும் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது பொங்கி எழாத கர்நாடக அரசியல்
வாதிகள் இப்போது பொங்கி எழுவது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.
முதல்வரின் அறிவிப்பால் தமிழக அரசியல் வாதிகளும் மக்களும் கொதித்துப்போயுள்ளனர். கர்நாடக அரசியல்வாதிகள் தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். ஆனால், தேர்தலின் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கர்நாடக அரசியல்வாதிகள் எவரும் கூற வில்லை.
ஒகேனக்கலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர்த்திட்டம் தமிழக அரசு மேற்கொள்ளும் இந்தத் திட்டத்தினால் தமிழ் நாடும், கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மக்களும் பயனடைவார்கள்.
இந்தத்திட்டம் தடைப்பட்டால் தமிழ் நாட்டு எல்லையின் கர்நாடக மக்களும் பயனடைவார்கள். இந்த உண்மையை கர்நாடக அரசியல் வாதிகள் யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை. நகரத்தில் உள்ளவர்களுக்கு குடிநீர்ப் பிரச்சினை பெரிதாகத் தெரிவதில்லை.கிராமத்தில் உள்ள மக்கள் தான் குடிநீருக்கு அலைகிறார்கள்.
ஒகேனக்கல் குடிநீர்த்திட்டம் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது கர்நாடகத்தில் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த நஞ்சகௌடா ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டப்படி அது தமிழ் நாட்டுக்குச் சொந்தமானது. அதனைத் தடுப்பதற்கு கர்நாடகத்தில் உள்ளவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் தெளிவுபடக் கூறி உள்ளார்.
தேசிய ஒற்றுமை, பொறுத்திருப்போம், காத்திருப்போம், நம்பிக்கையுடன் இருப்போம் என்று சொல்லிச் சொல்லியே தமிழக அரசு பல சந்தர்ப்பங்களில் ஏமாந்துள்ளது. மீண்டும் அதேபோன்ற ஒரு தவறை தமிழக முதல்வர் செய்துள்ளார்.
காவிரி நீர்ப்பிரச்சினை பல நூற்றாண்டு காலமாக உள்ளது. கி.பி. 1146 1163 ஆம் ஆண்டு மைசூரை தலைமையிடமாகக் கொண்டு போகா மன்னர்கள் காவிரி நீரைத் தடுக்க முயன்றபோது இரண்டாம் ராஜராஜ சோழன் படையெடுத்து அதனை முறியடித்தான்.
17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மைசூர் அரசன் சிங்க தேவராயன் அணைகட்டி காவிரி நீரை தடுத்த போது அதனை எதிர்த்து ராணிமங்கம்மா படையெடுத்துச் சென்றார். அப்போது பெய்த பெருமழையில் அணை உடைந்ததால் போர் தவிர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. றண்றறறறற1890 ஆம் ஆண்டு மைசூர் சென்னை அரசுகளுக்கிடையே காவிரி நீர்ப்பிரச்சினை உருவானது. மன்னராட்சியில் ஆரம்பித்த காவிரி நீர்ப்பிரச்சினை மக்களாட்சியிலும் தொடர்கிறது.
1956ஆம்ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருவிதாங்கூர் பகுதிகள் கேரளாவுடனும் குடகு, மலபார் பகுதிகள் கர்நாடகாவுடனும் இணைக்கப்பட்டன. குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி, கர்நாடக மாநிலத்தின் மலைகள் குன்றுகளுக்கிடையே 320 கி. மீற்றர் ஓடி தமிழகத்தில் அகண்ட காவிரியாய் 416 கிலோ மீற்றர் சமவெளியில் செல்கிறது.
கர்நாடகம் தமிழகம் ஆகிய இருமாநில எல்லையிலும் 64.கி.மீற்றர் சமவெளியில் காவிரி ஓடுகிறது. இதில் தமிழக எல்லையான ஒகேனக்கல் பகுதியில்தான் தமிழக அரசு குடிநீர்த்திட்டத்தை உருவாக்க அடிக்கல் நாட்டி உள்ளது.
தற்போது அமைதியாக இருக்கும் ஒகேனக்கல் பிரச்சினை கர்நாடகத் தேர்தலின் பின்னர் விஸ்வரூபம் எடுக்கும்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு;13.04.2008

No comments: