Sunday, May 4, 2008

இலங்கைப் பிரச்சினையால் பரபரப்பான தமிழக அரசியல்




இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியை ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா இரகசியமாகச் சிறையில் சந்தித்ததை ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் கண்டித்துள்ளன. இதேவேளை இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்øசயை ஏற்படுத்தியுள்ளது.
நளினியை பிரியங்கா இரகசியமாகச் சந்தித்தது பற்றிய விபரங்கள் கசியத் தொடங்கியதும் அச்சந்திப்புப் பற்றி பல யூகங்கள் வெளியாகின. ராஜீவ்காந்தி பற்றி பிரியங்கா புத்தகம் ஒன்று எழுதுகிறார். அதற்காகத்தான் நளினியைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார், இந்தியப் பிரதமராக ராகுல்காந்தி வருவதற்கான தடைகளை நீக்குவதற்காகவே இச்சந்திப்பு நடைபெற்றது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன் தனது சிறை அனுபவங்களை புத்தகமாக எழுதி வருகிறார். அதுபற்றிய விபரங்களை அறிவதற்காக பிரியங்கா நளினியைச் சந்தித்தார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் தமது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சிறைச்சாலை விதிகளை மீறியே பிரியங்கா, நளினியைச் சந்தித்தார். கைதிகளைச் சந்திக்கும் பொதுவான இடத்தில் சந்திக்காது பிரத்தியேகமாக ஒரு இடத்தில்தான் இச்சந்திப்பு நடந்துள்ளது. ஆகையால் சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டே இச்சந்திப்பு நடந்துள்ளது என்று ஒரு சிலர் குரல் எழுப்பியுள் ளனர்.
நளினியை பிரியங்கா சந்தித்ததில் எந்தவிதமான சட்டவிதிகளும் மீறப்படவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் விளக்கமளித்துள் ளன.
நளினியை மன்னித்து நளினியின் குடும்பத்தின் மீது பரிவு காட்டும் சோனியா காந்தி ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் மீது அனுதாபம் காட்டவில்லை, இவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை சோனியாவும் அவரது பிள்ளைகளும் மன்னித்தாலும் நாம் மன்னிக்கப் போவதில்லை என்று ராஜீவுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
அரசியல் அரங்கில் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்தும் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, நளினி, பிரியங்கா சந்திப்பை கையில் எடுத்து தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசுக்குத் தெரியாது இச்சந்திப்பு நடைபெற்றிருக்காது. ஆகையால் தமிழக அரசு இதற்கு சரியான பதில் கூறவேண்டும். தமிழக அரசைக் கலைக்கும்வரை ஓயமாட்டேன் என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சூளுரைத்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் இச்சந்திப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இச்சந்திப்பைப் பற்றி மௌனம் காத்து வருகின்றனர்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழக அரசு மிக மெது மெதுவாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய சூழலை இந்திய அரசு ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
விடுதலைப் புலிகளை எதிர்ப்பதையே தமது பிரதான கொள்கையாகக் கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். எந்தப் பிரச்சினையானாலும் கட்சியின் மேலிடம் கூறுவதைத் தமது கொள்கையாகக் கருதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்து உத்தரவின்றி ஆதரவு தெரிவித்திருக்கமாட்டார்கள்.
இலங்கை விவகாரத்தில் ஏதோ ஒரு அணுகுமுறையை இந்தியா கையாள்வதற்கு தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் கால்கோலாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பைக் காரணம் காட்டி அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதி இந்திய மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்று நோர்வே பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த பின்னர் இந்திய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் உள்ளன.
விடுதலைப் புலிகளினால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் எனக்கூறியுள்ளார்.
இந்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிவதற்கு அரசியல் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. இலங்கை விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு காணப்படவேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வைகோ உறுதியாக உள்ளார். நோர்வேயில் அவர் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளõர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கிமூனையும் வைகோ சந்திப்பதற்கு முயற்சி செய்கிறார். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தினால் இந்திய அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
வர்மா
வீரகேசரி வார வெளியீடு; 27.04.2008

No comments: