Saturday, June 7, 2008

தமிழக முதல்வரை பாதித்து அவரின் உடலா? மனமா?

என்ன பிரச்சினையானாலும் அசராது அதனை சமாளிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கால் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகையினால் தான் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.


முதல்வரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது உண்மைதான். அதேவேளை அவர் மனதளவிலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார். ""கூட இருந்தே குழிபறிக்கும் தோழமைக் கட்சியினர்'' என்று முதல்வர் தனது மனதில் இருந்த பாரத்தை பகிரங்கப்படுத்தினார்.
முதல்வரிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு வார்த்தை வெளிவரும் என்பதை எதிர்பார்க்காத டாக்டர் ராமதாஸ{ம் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத் தினர். ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு கருணாநிதி முயற்சிப்பதும் மூத்த தலைவர்கள் சிலர் ஸ்டாலின் முதல்வராக வருவதை விரும்பாததும், பாட்டாளி மக்கள் கட்சியின் நெருக்குதலும் முதல்வரை மனதளவில் பாதிக்கச் செய்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியது முதல் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான உரசலும் ஆரம்பித்து விட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் நிம்மதியாக ஆட்சி செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நடவடிக்கையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறது.

திரõவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அறிக்கை வெளியிடும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை ஆதரித்து அவ்வப் போது அறிக்கை விடுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெகு தூரம் விலகி நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நெருங்குவதாக டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக உணர்த்தினார். டாக்டர் ராமதாஸின் இத்தகைய நடவடிக்கைகளை ஜெயலலிதா கண்டும் காணாமலும் இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் பாட்டாளி மக்கள் கட்சியைப் பற்றி மிகவும் தெளிவாகத் தெரிந்து கொண்டமையினால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தாலும் சரி தான் வெளியேறினாலும் சரி அதனால் நன்மையும், பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை முதல்வர் கருணாநிதி நன்றாகத் தெரிந்து வைத்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் பல சமிக்ஞைகளை வெளிப்படுத்தியும் ஜெயலலிதா அவரைக் கணக்கில் எடுக்கவில்லை. முதல்வரும், ஜெயலலிதாவும் தன்னை எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை டாக்டர் ராமதாஸ{ம் நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டியையே முதல்வர் விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி, விஜயகாந்த் என மும்முனைப் போட்டி ஏற்பட்டால் இலகுவாக வெற்றி பெறலாம் என்று முதல்வர் நினைக்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி ஏன் பிரிவதை ஜெயலலிதா விரும்புகிறார்? காங்கிரஸ{ம் விஜயகாந்த்தும் ஜெயலலிதாவுடன் இணையக் கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரு சிலர் விரும்புகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தைகளையும் இவர்கள் நடத்தி முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாக்டர் ராமதாஸின் அறிக்கை போரை ரசிக்கும் மன நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. டாக்டர் ராமதாஸின் அறிக்கைக்குப் பதில் அறிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தெரிவிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் முதல்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் உடன் பிறப்புக்கள் ஒரு கணம் அதிர்ந்து விட்டனர். முதல்வரின் உடல் நிலை பற்றி அறிவதற்காக அமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
ஓய்வு எடுக்க வேண்டிய அவசியத்தை முதல்வர் உணர்ந்துள்ளார். தனக்கு ஓய்வு வேண்டும் என்பதை மறைமுகமாக அரசியல் உலகுக்கு எடுத்தியம்பி உள்ளார் முதல்வர். கூட இருந்தே குழி பறிக்கும் அரசியலில் தனது மகனை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு தந்தை என்ற முறையில் முதல்வருக்கு இருக்கிறது.

இந்தக் களேபரத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று அவர் அறிவித்துள்ளார். தலைவரின் பிறந்த நாளை பெரும் எடுப்பில் கொண்டாட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் அறைகூவல் விடுத்துள்ளார். உற்சாகமான பிறந்த நாள் விழா முதல்வரின் மனதை குளிர்விக்கும் என்பது உண்மையே.

பேராசிரியர் அன்பழகனை முதல்வர் பதவியில் அமர்த்தி ஸ்டாலினுக்கு பயிற்சி கொடுக்கப்படுமா அல்லது ஸ்டாலினை முதல்வராக்கி விட்டு கலைஞர் கருணாநிதி தனது ஓய்வை அறிவிப்பாரõ என்பதை அறிவதற்கு ஆவலாக தமிழக அரசியல் ஆவலாக உள்ளது. எனினும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரை கலைஞர் கருணாநிதி முடிவு எதனையும் வெளியிட மாட்டார்.

வர்மர் வீரகேசரி வார வெளியீடு;25.05.2008

No comments: