பெரும்பான்மை இல்லாது தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடமேறிய திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்து விட்டது. தமிழக அரசின் இரண்டு வருட சாதனைகள் மிகப் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசின் சாதனைகளை சாடி வருகிறது. தமிழக அரசு மக்களுக்கான சாதனை எதனையும் செய்யவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இரண்டு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச காஸ் அடுப்பு, நியாய விலையில் பருப்பு போன்ற கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட சபைத் தேர்தலில் அதிகளவான ஆசனங்களை பெற்றது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கிடைக்கவில்லை. தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பீடமேறியது.
தமிழக காங்கிரஸ் கட்சி அவ்வப்போது தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தது. மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமை முதல்வர் கருணாநிதியின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதால் தமிழகத் தலைவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. தமிழக அமைச்சராவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை முயற்சித்தனர். காங்கிரஸின் தலைமைப் பீடம் அதற்கு இடம் கொடுக்காமையினால் தமிழகத் தலைவர்களின் அமைச்சர்களை கலைந்து விட்டது.
தமிழக அரசை மிகவும் முனைப்புடன் தாக்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவைகூட பாட்டாளி மக்கள் கட்சியை போன்று தமிழக அரசை விமர்சிக்கவில்லை.
இரண்டு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி, இலவச கொடுப்பனவு என்பனவற்றை உடனடியாக கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் பலமுறை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்புகள் எதனையும் தமிழக அரசு கணக்கில் எடுக்கவில்லை.
தமிழக அரசின் சாதனைப் பட்டியல்கள் எதிர்க்கட்சியினை திகைக்க வைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியவற்றை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி மிகவும் சிறப்பாக திட்டமிட்டு செய்து வருகிறது.
2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிப் பீடமேறும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்வு கூறி வருகிறார். அதனை நோக்கமாகக் கொண்டே தமிழக அரசின் சாதனைகளை அவர் சாடுகிறார் என்ற கருத்து உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக ராமதாஸ்தான் முதலில் போர்க் கொடி உயர்த்துகிறார். வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் இது அதிகரிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நெருக்கடி கொடுத்துவரும் இவ்வேளையில் தமிழக அமைச்சரான பூங்கோதை தனது உறவினருக்காக பரிந்து பேசியதால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஊழலில் சிக்கி வழக்கை எதிர்நோக்கி இருக்கும் தனது உறவினரைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த பூங்கோதை தனது பதவியை பறிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லாத அமைச்சர்களை தூக்கி எறிந்து விட்டு புதியவர்களை அமைச்சராக்குவதற்கு முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார் என்று தகவல் கசிந்து வரும் வேளையில் பூங்கோதையின் பிரச்சினை வெளியானது.
பூங்கோதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி அறிக்கை விட்டதும் பூங்கோதை ராஜினாமா செய்து விட்டார். பூங்கோதையின் வேண்டுகோள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. எதிரணியினரின் செல்வாக்கு அரச அலுவலகங்களில் பிரகாசமாக இருப்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
பூங்கோதையின் பிரச்சினையை மையமாக வைத்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சித்த எதிர்க்கட்சிகளின் எண்ணத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. பூங்கோதையின் நடவடிக்கைக்கு தண்டனை கொடுத்தமையினால் தமிழக அரசு இப்போதைக்கு தப்பி விட்டது.
இதேவேளை அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் விஜயகாந்த் தடுமாறுகிறார். விஜயகாந்தை தமது பக்கம் இழுப்பதற்கு பல கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. பாரதீய ஜனதாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவர்களுடனும் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்தின் கட்சியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சி அமைக்கும் பலமுள்ள கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் எண்ணம். பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜயகாந்தை கழற்றி விட்டு விடும்.
காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் முரண்டு பிடித்து வரும் வேளையில் காங்கிரஸுடன் சேர்வதற்கு விஜயகாந்த் தரப்பு ஆர்வம் காட்டவில்லை. இந்தியப் பொதுத் தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸுக்கும் கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் ஆதரவை வாபஸ் வாங்கி விடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மிரட்டுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் பணிந்தது. இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் மீறி கையெழுத்திட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது.
பொதுத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகளை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் காலைவாரினால் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் ஆட்சி ஆட்டம் காணும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகளை விலக்கினால் தமிழகத்திலும் தேர்தல் நடைபெறும். அப்போது ஸ்டாலினை முதல்வராக்குவதற்காக பலமான கூட்டணியை உருவாக்கும் நிலைக்கு முதல்வர் தள்ளப்படுவார். அவ்வேளையில் இலவசங்களும் சலுகைகளும் கைகொடுக்குமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அமைச்சர்களின் அத்துமீறல், மாவட்ட செயலாளர்களின் கைவரிசை என்பன தமிழக அரசுக்கு எதிராக உள்ளன.
என்னதான் பிரச்சினை என்றாலும் அசராது கரும மாற்றும் தமிழக முதல்வர் மிகுதியாக உள்ள மூன்று ஆண்டுகளைச் சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வரின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிய தமிழகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
பெரும்பான்மை இல்லாது இரண்டு வருடங்கள் நிறைவு செய்தது பெரும் சாதனைதன?
வர்மா; வீரகேசரி வார வெளியீடு;18.05.2008
No comments:
Post a Comment