Friday, February 6, 2009

ஒஸ்காரும் நாமும்


ஆங்கிலத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் அதியுயர் விருது ஒஸ்கார். தமது வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது ஒஸ்கார் விருதைப் பெற்று விட வேண்டும் என்ற ஆசை ஆங்கிலப் பட கலைஞர்களிடம் உள்ளது. ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்படுவதே கௌரவமாக கருதப்படுகிறது. விருது பெறாவிட்டாலும் ஒஸ்கார்வரை சென்ற பெருமையே போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆங்கிலப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒஸ்கார் விருது காலப் போக்கில் ஆங்கிலம் அல்லாத மொழிப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது. பல வருடங்களாக ஒஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஒஸ்கார் விருது இந்தியாவிலும் இலங்கையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதனால் இந்திய, இலங்கை ரசிகர்கள் ஒஸ்காரைப் பற்றி அதிகம் அறிவதற்கு ஆர்வப்பட்டார்கள். சிறு வயதில் இருந்தே இசையையும் ரஹுமானையும் பிரிக்க முடியாது என்பதை அவரை அறிந்தவர்கள் உணர்ந்தனர். தகப்பனின் வழிகாட்டலில் இசையை பயின்ற ரஹுமான் இளையராஜாவின் இசைக்குழுவில் சேர்ந்தார். 300க்கு மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படத் தின் மூலம் இந்திய தேசிய விருதை தட்டிச் சென்ற ரஹ்மான் இசை அமைப்பில் அதிக முறை தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள ரஹ்மானை ஸ்லம்டோக் மில்லியனர் என்ற ஆங்கிலப் படம் ஒஸ்கார் வரை ரஹ்மானை கொண்டு சென்றுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருது பெற்றதால் ஒஸ்கார் விருது அவருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவூட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் விமர்சகர்கள் வழங்கும் விருதே கோல்டன் குளோப் எனப்படுகிறது.
ஸ்லம்டோக் மில்லியனர் படம் ஒஸ்கார் விருதின் 10 பிரிவுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் திரைக்கதை, பாடலாசிரியர், பாடகர் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றில் ஒஸ்கார் விருதை இப்படம் தட்டிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஹ்மானின் பெயர் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒசாயா என்ற பாடலை எழுதிய மாயா அருள் பிரகாசம் இவர் இலங்கையைச் சேர்ந்தவர். தற்போது லண்டனில் வசிக்கிறார். ஜெட் ஹோ என்ற ஹிந்திப் பாடலாசிரியர் குல்சார் ஆகியோரின் பெயர்களுடன் ரஹ்மானின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.விருதுகள் ரஹ்மானின் வீட்டுக் கதவை தட்டிய போதெல்லாம் அவற்றை அடக்கமாகவே பெற்றார். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற கொள்கையை அவர் என்றைக்குமே மறந்ததில்லை. ரஹ்மானின் அபிமானிகள் சற்று உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் வாழ்த்துக் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
ரஹ்மானை தூக்கிப் பிடிக்கும் அவரது இலங்கை அபிமானிகள் இலங்கையரான மாயா அருள்பிரõகாசத்தை கண்டு கொள்ளவில்லை.மேற்கத்தைய இசையில் உச்சக் கட்டத்தை எட்டி இருக்கும் ரஹ்மானின் அண்மைய கால தமிழ்ப் பாடல்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை. ரோஜா, டூயட், ரிதம்,காதலன், ஜென்ரில்மேன் படப் பாடல்கள் கேட்டவுடனேயே மனதை வருடின. இன்றும் அப்பாடல்கள் மனதில் ரீங்காரமிடுகின்றன. அவரின் அண்மைக்கால தமிழ்ப் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போன்ற ஆவலை ஏற்படுத்தவில்லை.தமிழை தப்பில்லாமல் பாடும் ஹிந்திப் பாடகர்களும் தமிழ்ப் பாடகர்களும் இருக்கையில் தமிழ் தெரியாத உதித் நாராயணனை தமிழில் அறிமுகப்படுத்தி தமிழைக் கொல்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.ஹிந்திப் பாடகிகளான ஆஷா போஷ்ஸேயின் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்' சாதனா சர்க்கத்தின் கிருஷ்ணா, முகுந்தா மாதா உன் கோயிலில் (நான் கடவுள்) ஆகிய பாடல்களில் அவர்களின் தமிழ் உச்சரிப்பு அட்சரசுத்தமாக உள்ளன. தமிழ் தெரியாத ஹிந்தி பாடகிகள் தான் அப்பாடலைப் பாடினார்கள் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

தென்னாபிரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பிரதி இந்தியத் தூதுவராக பணியாற்றும் வி.காஸ்ஸ்வரூட் எழுதிய ஏ அண்ட் கியூ நாவலே ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படமாக உருவானது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பணியாற்றிய போது இந்த நாவலை அவர் எழுதினார். தனது நாவலை வெளியிட முயற்சி செய்தார். யாரும் கண்டு கொள்ளவில்லை. புதிதாக பதிப்பகம் தொடங்கிய ஒருவர் வீடு தேடிச் சென்று நாவலை
வெளியிட்டார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் பசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றது. காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசையும் இந்த நாவல் தட்டிச் சென்றது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 36 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டன.
அமிதாப்பச்சனின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குரோர் பதியை மனதில் வைத்தே ஏ அன்ட் கியூ நாவல் எழுதப்பட்டது. மும்பையின் சேரிப் பகுதியில் வசிக்கும் 18 வயதான இளைஞன் குரேரர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை வென்றார். அவனுக்கு பின்னணியில் இருந்து யாரோ மோசடி செய்ததாக சந்தேகப்படுபவர்கள் அவரை பொலிஸில் ஒப்படைக்கின்றனர். தனது அனுபவங்களின் மூலமே விடை சொன்னதாக அவர் விபரிக்கும் போது மும்பையில் உள்ள சில சமூக அவலங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மும்பையின் சேரிப்புற வாழ்
க்கை தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. மும்பையின் மிக மோசமான வாழ்க்கை முறையை உலகுக்கு காட்டி விட்டார்கள் என்று ஒரு சிலர் கொதித்தெழுந்துள்ளனர்.

ஏ அன் கியூ நாவலை எழுதிய விகாஸ்ஸ் வரூப் தமிழ் நாட்டு மர்மக்கதை எழுத்தாளர்களை தமிழ் வாணன், சுபா, ராஜேஸ்குமார், புஷ்பாதங்கத்துரை, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார்.குழந்தை சலீமாக நடித்த அஸார் இஸ்மாயில் லத்திகாவõக நடித்த ரூபைனா ஆகியோர் சேரிப் புறத்தில் வாழ்பவர்கள் படத்திலங் வரும் காட்சி அவர்களது நிஜ வாழ்க்கையாகவுள்ளது. உலகின் தொலைக்காட்சிகளும் பத்திரிகை நிருபர்களும் இவர்களின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.மதர் இந்தியா லகான் ஆகிய ஹிந்தியப் படங்கள்ஒஸ்கார் வரை சென்றாலும் ஸ்லம்டோக் மில்லியனர் போன்று பரபரப்பாகப் பேசப்படவில்லை.ரஹ்மானுக்கு இதுவரை கிடைத்த விருதுகளும் எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் விருதுகளும் தமிழ் இசைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரங்களில் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.
ரமணி
மெட்ரோநியூஸ்
06 02 2009

1 comment:

காரூரன் said...

*\\ரஹ்மானை தூக்கிப் பிடிக்கும் அவரது இலங்கை அபிமானிகள் இலங்கையரான மாயா அருள்பிரõகாசத்தை கண்டு கொள்ளவில்லை\\*
இலங்கையர் என்று சிங்களவர்களை கருத்தில் கொண்டால் அவர்களுக்கு மாயா(M.I.A) ஐ பிடிக்காது. இந்த கட்டுரையை படியுங்கள்.
http://akathy.blogspot.com/2009/02/mia.html