Monday, June 15, 2009

ஜெயலலிதாவை கைவிட்டகூட்டணித் தலைவர்கள்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி கலகலப்பை இழந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவில் கூட்டணி சேர்ந்த கட்சிகள் தோல்வியின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதற்கு விதி விலக்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாக வைகோ காட்டிக் கொள்கிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயனடைந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த ஏனைய கட்சிகள் உள்ளதையும் இழந்து நொண்டிக் குதிரையாகின.
மின்னணு இயந்திரத்தில் மோசடி, பண விநியோகம், அதிகார பலம் என்பனவற்றினால் தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று தோல்வி அடைந்த கட்சிகள் அனைத்தும் பரவலாகக் குற்றம் சாட்டின. ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசினார்கள். இடதுசாரிகள் கொஞ்சம் அடக்கமாக அறிக்கை விட்டனர்.
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரதராஜன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். ஸ்டாலின் துணை முதல்வரானதும் அன்புமணி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். இறக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற மனுவை சரத்குமார் தமிழக முதல்வரிடம் நேரில் கொடுத்து வலியுறுத்தினார்.
எதிர் அணியில் இருந்தாலும் நல்ல காரியங்களுக்காக ஆளுங்கட்சித் தலைவரைச் சந்திக்கும் நல்லதொரு கலாசாரம் தமிழகத்தில் துளிர்விடத் தொடங்கியுள்ளது. இது உண்மையிலேயே நல்ல அறிகுறியா அல்லது அரசியல் சந்திப்பா என்பது தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலின்போது தான் தெரியவரும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சேகர், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான பேச்சாளர்களில் ஒருவரான நடிகர் முரளி ஆகியோர் துணை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எஸ்.வி. சேகர் வெளியேறப் போகிறார் என்ற செய்தி பலமாக அடிபடும் இவ்வேளையில் துணை முதல்வர் ஸ்டாலினை எஸ்.வி. சேகர் சந்தித்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாரவியின் தாயார் மரணமானபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் கூட மரண வீட்டுக்குச் செல்லவில்லை. ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் தயாராக இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையில் எஸ்.வி. சேகரும் முரளியும் துணை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு அவர்கள் தயாராகி விட்டனர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஓய்வெடுப்பதற்காக ஜெயலலிதா கொடாநாட்டுக் குப் போய்விட்டார். அவர் ஓய்விலிருந்து சென்னைக்குத் திரும்பியதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் கழகத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பேசுகையில் சகலரையும் கண்டித்துப் பேசிய ஜெயலலிதா புதிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சி செய்வார்.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கைவிட்ட நிலையிலும் வைகோ மட்டும் தொடர்ந்தும் ஜெயலலிதாவுடன் இணைந்து உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் முன்னரை விட கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை ஜெயலலிதாவுக்கு ஊட்டிய தலைவர்கள் தோல்வியின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஒன்றாகக் கூடி ஆராயவில்லை. மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அந்த தலைவர்கள் ஆளும் கட்சியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உள்ளனர்.
கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனினும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 12 தொகுதிகளில் தோல்வியடைந்தததற்கான காரணத்தை அறிவதற்கு முயற்சி செய்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். தோல்விக்கான காரணத்தை எதிர்க் கட்சிகள் மீது சுமத்தாது உண்மையை அறிவதற்கு ஸ்டாலின் முயற்சி செய்வது அவரது அரசியல் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பிரசாரம் முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய முடியாத நிலை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டதனால் ஸ்டாலினும் கனிமொழியும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தனர்.
தேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவருக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த முதல்வர் கருணாநிதியால் மகள் கனிமொழிக்கு பதவி ஒன்றைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்கள் பெயர் பட்டியலில் கனிமொழியின் பெயரும் இருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. முதல்வர் கருணாநிதியும் கனிமொழியும் அதனை மறுக்கவில்லை. எனினும் ஒரே குடும்பத்துக்கு மூன்று அமைச்சர்களைக் கொடுப்பதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்ததனால் கனிமொழியின் பெயர் நீக்கப்பட்டது. கனிமொழிக்கு உரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு பங்கு கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசில் காங்கிரஸ் கட்சி பங்கு பற்றும் வேளையில் அதற்கு பிரதி உபகாரமாக கனிமொழிக்கு ஏதாவது ஒரு பதவியை காங்கிரஸ் கட்சியிடமிருந்தே முதலமைச்சர் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் புதிய யுக்தியை வகுத்துள்ளார்கள். காங்கிரஸிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்த ராகுல் காந்தி தமிழக காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்கிறார்.
கலைஞருக்கு பின் ஸ்டாலின் என்ற கோஷத்தை மெய்ப்பிக்கும் வழியில் செயற் படும் ஸ்டாலின், தமிழகக் காங்கிரஸின் வளர்ச்சிக்கு துணை போவாரா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழலில் தமிழக காங்கிரஸ் ஒதுங்க வழி விடுவாரா என்பதை அவரது எதிர்கால நடவடிக்கைகளே வெளிப்படுத்த வேண்டும்
.வர்மா
வீரகேசரி 14/06/2009

1 comment:

Anonymous said...

nalla ging cha adichirukkar...