Sunday, August 9, 2009

எம்.ஜி.ஆர் விசுவாசிகளூக்கு வலைவீசும் விஜயகாந்த்


தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. முதல்வர் கருணாநிதி இல்லாமல் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றியைத் தேடிக் கொடுத்த துணை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் அழகிரியும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மத்திய, மாநில அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வெற்றிக்காக களத்தில் இறங்கி உள்ளனர்.
விஜயகாந்தும் மனைவி பிரேமலதாவும் தமது கட்சி வேட்பாளருக்காக சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான பர்கூரில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விஜயகாந்தும் மனைவியும் களத்தில் இறங்கி உள்ளனர். விஜயகாந்தின் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு பர்கூரில் முதலில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அவர் சுயேச்சை வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலைப் புறக்கணிப்பதனால் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் சோர்ந்து போயுள்ளது.
இடைத் தேர்தலைப் புறக்கணித்த ஜெயலலிதா, யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று தனது கட்சி ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். இப்போது தனது நிலையில் இருந்து மாறிய ஜெயலலிதா வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற படிவத்தை நிரப்பிக் கொடுக்கும்படி கூறியுள்ளார். வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் ஒரே மேடையில் தோன்றி தமது நிலைப்பாட்டை தொண்டர்களுக்கு எடுத்தியம்ப ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் கூட்டணித் தலைவர்களைச் சந்திக்காத ஜெயலலிதா அவர்களுடன் கைகோர்த்து தனது கருத்தை நியாயப்படுத்தப் போகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா உதாசீனம் செய்கிறார் என்ற கருத்து பரவலாக எழுந்தது. அவற்றுக்கெல்லாம் பதிலளிக்காத ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக கூட்டணித் தலைவர்களின் தயவை எதிர்பார்க்கிறார்.
இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் வாக்காளர்கள் மீது ஜெயலலிதா திணித்த கருத்து வெற்றியா தோல்வியா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளை நம்பி களத்தில் நிற்கும் விஜயகாந்த் அந்த வாக்குககளைக் கவர்வதற்கு புதிய வியூகம் அமைத்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற நப்பாசை விஜயகாந்திடம் உள்ளது.
யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என்று மேடைதோறும் முழங்கிய விஜயகாந்த் தற்போது அடக்கி வாசிப்பது அவர் தன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார் என்பதை வெளிப்படுத் துவதாக சிலர் கருதுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தினால் எம்.ஜி.ஆரின் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சியை விஜயகாந்த் ஆரம்பித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுபவர்களும் வெளியேற்றப்படுபவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் வேண்டுகோளை யாரும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பது வழமை. ஆனால், அழகிரியின் பிரசாரம் சற்று மாறுபட்டதாக இருக்கிறது.
இடைத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று உங்கள் கட்சித் தலைவி கூறுகிறார். தலைவியின் சொல்லுக்கு மதிப்பளித்து வாக்களிக்காதீர்கள் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
விஜயகாந்தும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக களத்தில் காரியமாற்றும் வேளையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தில் மெத்தனமாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றியைப் பெற்றுத் தந்திடும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலரிடம் உள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிட வாசனின் ஆதரவாளர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதனால் கட்சிக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, விஜயகாந்திடம் தோல்வியடையக் கூடாது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் முனைப்புடன் உள்ளனர். பிரசாரப் பேச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணையுடன் தமிழகத் தேர்தல்களைச் சந்தித்து வந்த இடதுசாரிகள் இம்முறை பலம் வாய்ந்த கூட்டணிகளின் ஆதரவு இல்லாமல் இடைத் தேர்தலைச் சந்திக்கின்றனர். தமிழகத்தில் தமது பலத்தைக் காண்பிக்க வேண்டிய சூழ்நிலை இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் சிதறி விஜயகாந்துக்குச் சென்றன. இந்த இடைத்தேர்தலில் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதற்காக தலைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டாம் என்று அழகிரி ஆலோசனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்த பத்து சதவீத வாக்குகளினால், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இடைத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கி இருப்பார்களா என்பதும் தமது பரம வைரியான திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு விஜயகாந்துக்கு வாக்களிப்பார்களா என்பது தேர்தலின்போது தெரிந்து விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 09/08/09

1 comment:

Admin said...

தொடருங்கள் வாழ்த்துக்கள்...