Thursday, October 29, 2009

ஒதுக்கப்பட்ட ட்ராவிட்


இந்திய அணியின் பெருஞ்சுவர், இந்திய அணியில் வெற்றிகள் பலவற்றுக்குக் காரணமாக இருந்தவர். இந்திய கிரிக்கட் அணியின் தலைவராகி பல சாதனைகளுக்கு உரிமையானவர், எதிரணி வீரர்களை கிலிகொள்ளச் செய்தவர் போன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ராகுல் ட்ராவிட்டை இந்திய தேர்வுக்குழு மீண்டும் ஒரு முறை அவமானப்படுத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார். இந்தியக் கிரிக்கட் அணிக்கு புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதனால்
ராகுல் ட்ராவிட் 2007ஆம் ஆண்டு ஒரு நாள் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
134 டெஸ்ட் போட்டி
களில் விளையாடி 10,823 ஓட்டங்களும் 339 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,765 ஓட்டங்களும் எடுத்த ராகுல் ட்ராவிட்டின் அனுபவத்தைப் புறந்தள்ளிய இந்திய தேர்வுக் குழு திடீரென விழித்துக் கொண்டு 2009 ஆம் ஆண்டு ராகுல் ட்ராவிட்டை ஒரு நாள் அணியில்
சேர்த்தது. இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு
தொடர், தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மினி உலகக் கிண்ணம் ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு
தனது திறமை மழுங்கவில்லை என்று ராகுல் ட்ராவிட் நிரூபித்தார். ஐந்து போட்டிகளில் 180 ஓட்டங்கள் எடுத்து தேர்வாளர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த ராகுல் ட்ராவிட்டுக்கு அவுஸ்திரேலியத் தொடரிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷேவாக் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமையினால் ராகுல் ட்ராவிட்டுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஷேவாக் குணமடைந்து அணிக்குத் திரும்பியதும் ராகுல் ட்ராவிட் அணியிலிந்து கழற்றி விடப்பட்டார். யுவராஜ் சிங் அணியில் இல்லாத நிலையில் ராகுல் ட்ராவிட் ஓரங்கட்டப்பட்டது தவறானது என்ற கருத்து உள்ளது. வீராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் மத்திய வரிசையில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தேர்வாளர்கள் கருதினார்கள்.
அவுஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சைச்
சமாளிக்கும் வல்லமை
ராகுல் ட்ராவிடிடம் உண்டு. தென் ஆபிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிவரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார் ராகுல் ட்ராவிட்.

No comments: