Tuesday, December 1, 2009

உலகக்கிண்ணம்2010



தென்ஆபிரிக்கா
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த தென்னாபிரிக்கா தயாராகி விட்டது. 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு 32 நாடுகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 224 நாடுகள் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடின.
பலம்வாய்ந்த நாடுகளான ஆர்ஜென்டீனாவும், பிரான்ஸும் இறுதிவரை போராடி தமது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உதைப்பந்தாட்டத்தின் பலம் வாய்ந்த நாடுகள் முட்டி மோதி தமது திறமையை வெளிப்படுத்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து 43 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. கானா, ஐவரிகோஸ்ட், கமரூன், நைஜீரியா, அல்ஜீரியா ஆகிய ஐந்து நாடுகள் புள்ளிகளின் அடிப்படையில் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தென் ஆபிரிக்கா உதைபந்தாட்ட ரசிகர்களின் பாராட்டையும் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பீபாவில்
தென்ஆபிரிக்கா சேர்ந்து 15 ஆண்டுகளாகின்றன.
1998, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியை தென் ஆபிரிக்கா பெற்றது. 1996 ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணத்தைக் கைப்பற்றிய தென் ஆபிரிக்கா 1998 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தையும் 2000 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்தையும் பெற்றது.
ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியில் விளையாட தொடர்ச்சியாக ஏழு முறை தென் ஆபிரிக்கா தகுதி பெற்றது.
தென் ஆபிரிக்காவின் பயிற்சியாளரான ஜோ. எல், சாந்தனா கடமையாற்றி வருகிறார். கசிசிடிக்குகோ பென்னி மக்கார்த்தி, கிபுகி சோபென்னி, சியா பெங்கா, ஹொம் விடே ஆகிய வீரர்கள் மீது தென் ஆபிரிக்க ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அண்மையில் விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் பெற்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. தென் ஆபிரிக்கா ஐந்து கோல்கள் அடித்துள்ளது. எதிரணிகள் ஐந்து கோல்கள் அடித்துள்ளன. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 10 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டுள்ளன.
ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: