Thursday, December 10, 2009

26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை


இலங்கை இந்திய அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டுவென்டி 20 போட்டியில் இலங்கை 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 215 ஓட்டங்கள் எடுத்தது.
வயிற்றுக் கோளாறு காரணமாக ஸ்ரீசாந்த் விளையாடம்ததால் அவருக்குப் பதிலாக அசோக் திண்டா சேர்க்கப்பட்டார். அசோக் திண்டாவுக்கு இது தான் முதலாவது சர்வதேசப் போட்டியாகும்.
டில்ஷானும் ஜயசூரியவும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களம் புகுந்தனர். இந்திய வீரர்களின் பந்து வீச்சு ஆக்ரோசமாக இருந்ததனால் இலங்கை வீரர்கள் முதலில் தடுமாறினார்கள். நான்கு ஓவர்களில் இலங்கை 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் இலங்கை வீரர்களின் அதிரடியை இந்திய வீரர்களினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜயசூரிய நான்கு ஒட்டங்கள் எடுத்திருந்தபோது கவர் பொயிண்ட் திசையில் நின்ற யுவராஜ் மிக எளிதான பிடியைத் தவற விட்டார். கண்டத்தில் இருந்து தப்பிய ஜயசூரிய தனது வழக்கமான அதிரடியை ஆம்பித்தார். நெஹ்ராவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஐந்து பௌண்டரிகள் அடித்தார்.
அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த ஜயசூரிய, டில்ஷான் ஜோடியை இஷாந்த் பிரித்தார். 20 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்த ஜயசூரிய இஷாந்தின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
13 ஓட்டங்கள் எடுத்தபோது டில்ஷானை ஆட்டமிழக்க கிடைத்த வாய்ப்பை இஷாந்த் சர்மா தவறவிட்டார். இஷாந்த் வீசிய பந்தை டில்ஷான் அடித்தபோது அதனை பிடிக்க இஷாந்த் மூன்று முறை முயற்சித்துப் பிடி நழுவியதால் டில்ஷான் ஆட்டமிழக்காது தப்பினார்.
ஜயசூரிய ஆட்டமிழந்ததும் அணித் தலைவர் சங்கக்கார, டில்ஷானுடன் இணைந்து வாண வேடிக்கை காட்டினார். சங்கக்காரவின் அதிரடி ஆட்டம் விளையாட்டின் போக்கை மாற்றியது. 40 பந்துகளில் 50 ஓட்டங்களைக் கடந்த இலங்கை 28 பந்துகளில் அடுத்த 50 ஓட்டங்களை எட்டியது. சந்தித்த பந்துகளை பௌண்டரி எல்லைவரை விரட்டிய சங்கக்கார 21 பந்துகளில் 20 ஓவர் போட்டியின் நான்காவது அரைச் சதமடித்தார். டில்ஷான், சங்கக்கார ஜோடி 74 ஓட்டங்கள் எடுத்தது. 33 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்த டில்ஷான் ரோஹித் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மஹேல யூசுப் பதானின் பந்து வீச்சில் ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கபுகெதரவும் அதிரடியில் மிரட்டினார். கபுகெதர 13 ஓட்டங்கள் எடுத்தபோது பந்து வீசிய ரோஹித் சர்மா பிடியைத் தவறவிட்டார். கபுகெதர 23 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சுலபமான ரன் அவுட்டை இஷாந்த் சர்மா தவறவிட்டார். 20 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த கபுகெதர நெஹ்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
19 ஆவது ஒவரில் இலங்கை அணி 200 ஓட்டங்களைக் கடந்தது. 19 ஆவது ஓவரை நெஹ்ரா வீசினார். முதல் நான்கு பந்துகளையும் பௌண்டரிக்கு விரட்டினார் கபுகெதர. ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். ஆறாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மத்தியூஸ் நான்கு பந்துகளில் இரண்டு சிக்சர் உட்பட 15 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஆவது ஓவரில் கடைசிப் பந்தில் சங்கக்கார ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 37 பந்துகளைச் சந்தித்த சங்கக்கார இரண்டு சிக்சர் 11 பௌண்டரி அடங்கலாக 78 ஓட்டங்கள் எடுத்தார்.
20 ஆவது ஓவரில் சங்கக்காரவின் இலகுவான பிடியை இஷாந்த் சர்மாவும் மத்தியூஸின் கடினமான பிடியை ஓஜாவும் தவற விட்டன.
இலங்கை அணி 20 ஆவது ஓவரில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் விட்ட தவறுகளினால் இலங்கை அணி பிரமாண்டமான இலக்கை அடைந்தது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அடித்த ஐந்தாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி அடித்த அதிக பட்ச எண்ணிக்கையும் இதுவாகும்.
216 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை எடுத்தது. ஒரு ஓவருக்கு 10.76 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக துடுப்பெடுத்தாடினர்.
கம்பீரும் ஷேவாக்கும் வழமையான அதிரடியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தனர். 2.5 ஓவரில் இந்திய அணி 32 ஓட்டங்கள் எடுத்தபோது முதலாவது விக்கட்டை இழந்தது. குலசேகரவின் பந்தை மத்தியூஸிடம் பிடிகொடுத்த ஷேவாக் ஆட்டமிழந்தார். 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஒரு சிக்ஸர் 3 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்தார்.
டோனி 9, யுவராஜ் சிங் 6, ரோஹித் சர்மா மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
கம்பீர் அதிரடி காட்டியபோது இந்தியாவின் ஓட்ட வீதம் ஒரு ஓவருக்கு 11 ஓட்டங்களுக்கு மேல் சென்றது. யூசுப் பதான் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். 13 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது.
டின்டா 19, நெஹ்ரா 22, ஓஜா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்த இந்திய அணி 186 ஓட்டங்கள் எடுத்து 29 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சந்தித்த தொடர்ச்சியான நான்காவது தோல்வி இது. இலங்கை அணித் தலைவர் சங்கக்கார ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இலங்கை அணி 6.4 ஓவர்களில் 50 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி 4.3 ஓவர்களில் 50 ஓட்டங்களைக் கடந்தது. இலங்கை 11.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்ட இந்திய அணி 9.3 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்தது.

No comments: