Sunday, December 6, 2009
அ.தி.மு.க.விடம் சரணடைந்த இடதுசாரிகள்கூட்டணியின்றி தனிமரமான பா.ஜ.க.
திருச்செந்தூர் வந்தவாசி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைத்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கிகளை உடைய கட்சிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன வெளியேறின.
நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வியின் பின்னர் பிரிந்து போன இடதுசாரிகள் இடைத் தேர்தலுக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக களமிறங்குகின்றன. நாடாளுமன்ற இடைத் தேர்தலில் மண்ணைக் கௌவிய பின்னர் கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா கணக்கில் எடுக்கவில்லை. தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் உள்ள இந்தியா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
ஐந்து தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பகிஷ்கரித்ததனால் இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தன. திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதனால் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதால் அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தோழமைக் கட்சித் தலைவர்களால் புறக்கணித்த ஜெயலலிதாவைத் தேடிச் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கத் துணிந்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதற்காக தம்மை வெறுத்து ஒதுக்கிய ஜெயலலிதாவின் வெற்றிக்காக பிரசாரம் செய்கின்றன.
ஜெயலலிதா எதிர்பார்க்காத நேரத்தில் தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்களான தா. பாண்டியன், ஆர். நல்லகண்ணு, ஏ.எம். கோபு, சி. மகேந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தமது முடிவை ஒரே நேரத்தில் தெரிவிப்பது வழமை. ஆனால், இம்முறை கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவை முதலில் வெளிப்படுத்தியது. கொம்யூனிஸ்ட் கட்சி தனது முடிவை பகிரங்கமாக அறிவித்ததனால் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுக்கு ஒப்புதலளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி தள்ளப்பட்டது.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி விரும்பியது. கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் தமது செல்வாக்கு குறைந்து விடும் என்று அச்சமடைந்த மார்க்சிஸ்ட் கட்சி வேறு வழியின்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பதற்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக இடதுசாரிகள் களமிறங்கியுள்ளன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளின் செயற்பாட்டையும் இடதுசாரிகள் விமர்சிக்கின்றனர். இரண்டு எதிரிகளில் சிறந்த எதிரி யார் என்பதை இடதுசாரிகள் தெரிவு செய்துள்ளன. சகல அதிகாரங்களுடனும் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் கருணாநிதியை வீழ்த்துவதற்காக தனது ஆட்சிக் காலத்தில் சர்வ அதிகாரத்தையும் பிரயோகித்த ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்புச் சகோதரியுடன் கைகோர்த்து மேடையில் தோன்றிய டாக்டர் ராமதாஸ் அன்புச் சகோதரியின் செயற்பாடு பிடிக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டார். தனி மரமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டும் என்று தலைவர்களும் தொண்டர்களும் விரும்பினார்கள். வந்தவாசியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. வந்தவாசியில் போட்டியிட்டு தமது செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் விரும்பினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி வந்தவாசியில் போட்டியிட்டால் அங்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் வேட்பாளரின் மேலதிக வாக்குகளின் தொகை கணிசமாக குறைந்து விடும். கூட்டணி இல்லாது தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை டாக்டர் ராமதாஸ் மிக நன்றாகப் புரிந்து கொண்டுள் ளார். பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற மாயையும் உடைந்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரும் எண்ணத்தில் உள்ளது. வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சீண்டுவதற்கு டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் பனிப் போர் அம்பலத்துக்கு வந்துள்ளது. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்கு உரிய முன் ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் செய்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகளும் பிரசாரத்தில் இறங்கி உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பின்னர் அதிலிருந்தும் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்த சரத்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியடைந்த சரத்குமார் தனது அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்கு இடைத் தேர்தலைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கு இது முன்னோடியாகக் கருதப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்மைய தேர்தல் வெற்றிகளின் பிரதானமானவராக உள்ள அமைச்சர் அழகிரியிடம் இடைத் தேர்தல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அழகிரி கட்சியை முன்னேற்றுவதில் முழு அக்கறை காட்டுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாரதீய ஜனதாக் கட்சி இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் செல்வாக்கான அரசியல்வாதியாக உள்ள திருநாவுக்கரசர் பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளம்ர். அதன் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சி நல்லதொரு தலைவர் இல்லாது தடுமாறுகிறது. இடைத் தேர்தலில் போட்டியிட்டால் திருநாவுக்கரசர் இல்லாத குறை தெரிந்து விடும் என்பதனால் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை பாரதீய ஜனதாக் கட்சி தவிர்த்துள்ளது.
விஜயகாந்த் வழமை போன்று என் வழி தனி வழி என்று களமிறங்கி உள்ளார். விஜயகாந்தின் கட்சி சந்தித்த தேர்தல்கள் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தது. சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அது விஜயகாந்த்துக்கு கிடைத்த வெற்றியே தவிர அவரது கட்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்று பலரும் கருத்துக் கூறிய பின்னரும் கூட்டணி சேராது தனித்துப் போட்டியிடுகிறார் விஜயகாந்த். காங்கிரஸுடன் கூட்டுச் சேர விஜயகாந்த் விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு வந்தால் கூட்டுச் சேர்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்போதைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் தயாராக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலை பகிஷ்கரித்தபோது 20 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த் இந்த இடைத் தேர்தலில் அந்த வாக்கு விகிதத்தை தக்க வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இடைத் தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என்ற படிவத்தை நிரப்பும்படி பாட்டாளி மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இடைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க விரும்பவில்லை என்ற படிவத்தை நிரப்பும்படி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். இந்தத் தேர்தலில் அதேவேண்டுகோளை டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ளார்.
தேர்தலைப் பகிஷ்கரிக்கும் மன நிலையில் தமிழக வாக்காளர்கள் இல்லை என்பதை டாக்டர் ராமதாஸ் உணரவில்லை.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06/12/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment