ஆந்திராவில் இருந்து புறப்பட்ட தெலுங்கானா என்ற புயல் இந்திய அரசியலை பதற வைத்துள்ளது. தெலுங்கானா கிடைக்கும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு காங்கிரஸ் தலைவி சோனியாவின் மனதை உருக்கியதால் தெலுங்கானா பற்றிய பரீட்சைக் காலம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பினால் கர்நாடகா முதல் காஷ்மீர் வரை உறங்கிக் கிடந்த தனி மாநிலப் போராட்டங்கள் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தையும் இரண்டாக்க வேண்டும் என்ற தனது பழைய அறிக்கையை தூசி தட்டி வெளிப்படுத்தினார் டாக்டர் ராமதாஸ். ""தமிழகத்தின் வட பகுதி முன்னேற்றமடைந்துள்ளது. தென் பகுதி இன்னமும் வளர்ச்சி பெறவில்லை. தமிழக அரசின் செயற்திட்டங்கள் தென்பகுதிக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஆகையினால் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு வட தமிழகத்தையும், மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தையும் உருவாக்க வேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தின் தென்பகுதியில் மிக அதிகளவில் இருப்பதனால் தமிழகத்தை இரண்டாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் முனைப்புக் காட்டுகிறார். மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தை உருவாக்கினால் பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் கட்சியாகலாம் அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கு தலைமை வகிக்கலாம் என்ற நம்பிக்கை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் எத்தனை காலத்துக்கு அரசியல் நடத்துவது. பாட்டாளி மக்கள் கட்சியின் தயவில் ஏனைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தைப் பிரிக்கும் யோசனையை முன்வைத்துள்ளார்.
டாக்டர் ராமதாஸின் வேண்டுகோளை தமிழக முதல்வர் கருணாநிதியும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவும் ஒருமித்த குரலில் எதிர்த்துள்ளார்கள். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்ற இவர்களின் குரலால் டாக்டர் ராமதாஸ் குரல் சற்று அடங்கி விட்டது. டாக்டர் ராமதாஸுக்கு ஆதரவாக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒருவரும் விரும்பவில்லை. ஆகையினால் டாக்டர் ராமதாஸின் கனவு பலிக்காத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதால் ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், அழகிரி ஆகியோர் முனைப்புடன் பிரசாரம் செய்து வருகின்றனர். இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்துக் கூறிய டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்காத வகையில் கட்சிக்குள் இருந்து சலசலப்பு எழுந்துள்ளது.
இதேவேளை, திருச்செந்தூர் வந்தவாசி ஆகிய தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கின்றனர். கட்சி நிறுவுனரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காமல், பாட்டாளி மக்கள் கட்சியின் சில தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் பிரசாரம் செய்வது கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைமைப் பீடத்தின் ஆசியுடன் தான் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியினர் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலமான வாக்கு வங்கியை உடைய ஒரு கட்சியாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனி மரமாக நிற்கிறது.
பலமான கட்சியுடன் கூட்டு சேர்ந்தால்தான் அக்கட்சி வளர்ச்சி அடையும். இல்லையேல் ஒரு கட்சியின் வெற்றி விகிதாசாரத்தைக் குறைத்த பெருமை மட்டும் தான் கிடைக்கும். வெற்றி என்பது எட்டாக்கனி என்பதை டாக்டர் ராமதாஸ் நன்றாக உணர்ந்துள்ளார். ஆகையினால் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தம் டாக்டர் ராமதாஸுக்கு உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்மையில் தாம் வெளியேறியதால் மீண்டும் அக்கட்சியுடன் இணைவதற்குரிய சாத்தியக் கூறு இல்லை. இந்தியத் தேசியக் கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் முடங்கிப் போயுள்ளது. பலமில்லாத பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் ஒருபோதும் விரும்ப மாட்டார்.
காங்கிரஸுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் பகீரதப் பிரயத்தனம் செய்தார். முதல்வர் கருணாநிதிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள சோனியா தயாராக இல்லாததனால் டாக்டர் ராமதாஸின் முயற்சிகள் பலிக்கவில்லை. கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் காங்கிரஸில் சேரும் திட்டம் டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
நொந்து போயிருக்கும் டாக்டர் ராமதாஸுக்கு அவருடைய "அன்புச் சகோதரியான ' ஜெயலலிதா புதியதொரு தலையிடியை உருவாக்கி உள்ளார். புதுக்கோட்டையிலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 4000 உறுப்பினர்கள் ஒரே நாளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்ததாக வெளியான பத்திரிகைக் குறிப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
இடைத் தேர்தல் சமயத்தில் நடைபெற்ற கட்சி மாற்றம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது போல் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதிகளவில் கட்சி மாறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் வாக்குகளைக் கவர்வதற்காகவும் ஜெயலலிதாவிடமிருந்து நல்ல பெயரைப் பெறுவதற்கு திட்டமிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிலர் நடத்திய மோசடி நாடகம் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது உண்மை. ஆனால் அக்கட்சி அறிவித்தது போல் 4000 பேர் இணையவில்லை.
இதேவேளை, திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையிலான கௌரவப் போட்டியை உருவாக்கி உள்ளது.
திருச்செந்தூரில் ஸ்டாலினின் தலைமையிலும் வந்தவாசியில் அழகிரியின் தலைமையிலும் தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை வந்தவாசி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை. அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் தொகுதி எது என்ற போட்டி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் ஸ்டாலினின் செயற்பாடுகள் உள்ளன. அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பது உறுதியாகி விட்டது. கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார்.
கருணாநிதி ஓய்வு பெற்றதும் ஸ்டாலின் முதல்வராகி விடுவார். ஸ்டாலினுக்கு இணையான ஒரு பதவியை தமிழகத்தில் பெறுவதற்கு அழகிரி முயற்சி செய்கிறார். ஆகையினால் திருச்செந்தூரைவிட அதிக பெரும்பான்மையுடன் வந்தவாசியில் வெற்றி பெற வேண்டும் என்று அழகிரி சபதமெடுத்துள்ளார்.
அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போட்டி ஆரோக்கியமானதாக இருந்தால் இருவருக்கும் நல்லது.
வர்மா
No comments:
Post a Comment