Wednesday, September 22, 2010

கூட்டணிக்கு விஜயகாந்த் கடைவிரிக்கிறார்தனிவழி போகத் தயாராகின்றார் ராமதாஸ்



தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் போன்றே பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. சிறிய கட்சிகள் தமது இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக பெரிய கட்சிகளுடன் இணையத் தொடங்கி விட்டன.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள உறவை முறிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கங்கணம் கட்டியுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வெளிப்படையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வெளிப்படையாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என்றதொரு நம்பிக்கையை ஊட்டி வருகிறார் ஜெயலலிதா.
எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற கருத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடையே இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. முதல்வர் கருணாநிதிக்குச் சார்பாகவும் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகவும் கருத்து முன்வைக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி விடுமோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் பேச்சு தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இந்தச் சந்தேகங்கள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆஷாத்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணிக்குப் பங்கம் ஏற்படும் விதத்தில் யாரும் கருத்துக் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார் குலாம் நபி ஆஷாத். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவு தான் கூப்பாடு போட்டாலும் கூட்டணி பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் சோனியா காந்தியிடம் உள்ளது என்பதை தமிழக முதல்வர் நன்கு அறிவார். காங்கிரஸ் தலைமை முதல்வர் கருணாநிதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆகையினால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இப்போதைக்கு ஏற்படாது.
ஜெயலலிதா நடத்தும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் வெள்ளம் திராவிட முன்னேற்றக் கழக அரசை தடுமாற வைத்துள்ளது. இது தானாகச் சேர்ந்த கூட்டமல்ல. அழைத்து வரப்பட்ட கூட்டம் என்று தமிழக முதல்வர் கருத்துக் கூறும் வகையில் ஜெயலலிதாவின் உரையை கேட்பதற்கு மக்கள் கூடுகின்றனர். ஜெயலலிதாவின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விவாதிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார் முதல்வர் கருணாநிதி.
மக்களுடன்தான் கூட்டணி என்று முழங்கி வந்த விஜயகாந்த் தனது தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத் தேர்தலில் தனி ஒரு கட்சியால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்கு உணர்ந்துள்ளனர். கூட்டணி இல்லாது அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து கொண்டார். விஜயகாந்தின் கூட்டணி பற்றிய அறிவிப்பு தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் விஜயகாந்துடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் எவையும் இதுவரை முன்வரவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழம் ஆகியவற்றுடன் பேரம் பேசி குழப்பம் ஏற்பட்டால் மட்டுமே விஜயகாந்துடன் சேர்வதற்கு சிறிய கட்சிகள் தயாராக இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை சிறிய கட்சிகளிடம் உள்ளது. விஜயகாந்தின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. ஆனால் தம்மை ஒதுக்கிய கட்சிகளைத் தோல்வியடையச் செய்யலாம் என்ற எண்ணம் சிறிய கட்சிகளிடம் உள்ளது. கூட்டணி இல்லை என்று அடித்துக் கூறிவந்த விஜயகாந்த் அரசியல் நிலைமையை உணர்ந்த கூட்டணிக் கடையை விரித்து விட்டார். அவருடன் பேரம் பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.
கூட்டணிக்காகத் தூது போய் காத்திருந்து அவமானப்பட்ட டாக்டர் ராமதாஸ் தனி வழி போகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் விளங்கியது பட்டாளி மக்கள் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியை வெளியில் விட்டால் தமக்கு தோல்வி என்பதை உணர்ந்த திராவிடக் கட்சிகள் டாக்டர் ராமதாஸின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவர் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி படு தோல்வியடைந்ததன் பின் அதன் நிலை அடியோடு மாறி விட்டது. தோல்வியிலும் துவண்டு போகாத பாட்டாளி மக்கள் கட்சி பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியது. பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது கட்சி பெற்ற வாக்குகள் புதிய பாதையை வகுத்துத் தரும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் எழுச்சியால் முதல்வர் கருணாநிதி மயங்கி விடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து ரோசத்துடன் வெளியேறி, மீண்டும் கூட்டணிக்காக காத்திருந்த டாக்டர் ராமதாஸை முதல்வர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே தனி வழி செல்லத் தீர்மானித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
வன்னியர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட வன்னியர் சங்கம் 1990 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து அரசியலில் புகுந்தது. தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பேராதரவு வழங்கினார்கள். இந்த ஆதரவு தமிழக சட்ட சபையில் இருந்து மத்திய அரசின் அமைச்சரவை வரை பாட்டாளி மக்கள் கட்சியை உயர்த்தியது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள 100 தொகுதிகளை இனம் கண்டு அவற்றில் 60 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அவற்றில் குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று இழந்து போன கட்சியின் செல்வாக்கை மீண்டும் பெற்று விடத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ். பெண்ணாகரம் இடைத் தேர்தலில் எப்படிப் பிரசாரம் செய்தோமோ அதேபோல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலில் வேலை செய்தது போன்று 60 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடியாது என்பது டாக்டர் ராமதாஸுக்கு நன்கு தெரியும். இலவசங்களும், அன்பளிப்புகளும், பணப் பெட்டிகளும் வாக்காளர்களைத் தேடிச் செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இவற்றின் மத்தியில் வெற்றி என்பது எட்டாக் கனி என்பதை சாதாரண கட்சித் தொண்டனும் தெரிந்து வைத்துள்ளான். தமிழகத்தின் பெரிய கட்சிகள் தன்னை அழைத்துப் பேரம் பேச வேண்டும் என்பதற்காகவே டாக்டர் ராமதாஸ் இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் வன்னியர் சமூகம் என்ற போர்வையினால் தன்னை மூடிக்கொண்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/09/10

No comments: