Sunday, December 28, 2014

அவர்கள் அழட்டும்

 

அமானுஷ்ய உறைவின்
ஏகாந்த வெளியில்
அவர்கள்
ஒரு தசாப்த நினைவில்
உருகிப்போனர்கள் .
எதுவுமற்ற காற்று வெளியிடையே
அவர்கள்
கண்ணீரின் உப்பு நிறைந்திருந்தது .
விதைப்பு நிலத்தின்
குறும் பரப்பினுள்
மண் திட்டுக்களை
கட்டி அணைத்து
ஓலங்கள் நிறைய முத்தமிட்டுக்
கொண்டிருக்கின்றார்கள் .
ஆறாத மன வடுக்களோடு
ஆழியின் கோரத்தை எண்ணி
நம்பிக்கையீனங்களை நிலையிருத்த்தி
வெந்து கொண்டிருந்தார்கள் .
ஆண்டுகள் ஆனாலும்
உப்பு நிலத்தினிடையே
உருக்குலையாது
உறங்கும் தம் செல்வங்களை
தாலட்டு பாடி செல்லம்
பொழிந்து கொண்டிருக்கின்றாள்
ஓர் அபலைத் தாய் .
அலையாய் இதம் தரினும்
ஆழியின் ஒரு நொடிப்பொழுது
கோரத்தண்டவத்தை
மன்னிக்க முடியாது
ஆழியை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருந்தான்
மூன்று செல்வங்களை
அலைக்கு கொடுத்த ஓர்
ஏழைத் தகப்பன் .
ஓலத்தின் வெளியாகி
உயிர் நிகழ் வெளி
காட்டாற்று துயர அரங்காய்
காட்சியானது .
தயவு செய்து
அழுபவர்களை ஆற்றுப்படுத்தும்
எங்கள் உறவுகளே
விடுங்கள்
தயவு செய்து அவர்களை
நிம்மதியாக தன்னிலும்
அழ விடுங்கள் .
அழுகைகள் கூட
மட்டுப்படும்
நிலவெளியில்
அவர்கள் இன்றாவது அழட்டும் .
அவர்களை தடுக்காதீர்கள்
காரணம்
அவர்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்து
அழுது கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நிம்மதியாய் அழட்டும்
அவர்கள் அழட்டும் .
-----------'''''------------------"""""""--------------
வெற்றி துஷ்யந்தன் 26.11.2014.

No comments: