Wednesday, October 26, 2016

ஜெயலலிதாவின் உடல் நிலையும் தமிழகத்தின் கொந்தளிப்பும்

 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாதம் கடந்து விட்டது.. அவருடைய உடல்நிலை பற்றிய செய்திகளை விட வதந்திகள்தான் அதிகளவில் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் அதரவாளர்களும்  எதிரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கைகளை விட்டவண்ணம் உள்ளனர். ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்பும் காவிரிப்பிரச்சினையும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. தமிழக அரசும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் ஜெயலலிதாவின் உடல் நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் கவிரிப்பிரச்சினையைக் கையில் எடுத்தன.

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளிய கர்நாடகம் தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்க மறுத்து அடம் பிடிக்கிறது. இரண்டு மாநிலங்களுக் கிடையிலான பிரச்சினையைச் சமரசமாகத் தீர்க்க  வேண்டிய  மத்திய அரசு ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகிறது. மத்திய அரசு வஞ்சிப்பதாகத் தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால்,  தமிழக அரசு அதற்கு முன்னுரிமை  கொடுக்காது ஜெயலலிதா மீண்டு வரவேண்டும் என பிரார்த்திக்கிறது தமிழக  விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சினையான காவிரி  நீர்ப் பிரச்சினையில் ஆர்வத்துடன் தலையிடுவதற்கு  தமிழக அரசு தயங்குகிறது.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சினையை விட ஜெயலலிதாவின் உடல் நிலையின் முன்னேற்றம்தான் தமிழக அரசுக்கும்  அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும் முக்கியமானதாக உள்ளது. காவிரிப் பிரச்சினையை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம்.  நீதிமன்றம் அதற்கான தீர்வைப் பெற்றுத்தரும் என தமிழக அரசு நினைக்கிறது. உச்ச நீதி மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு துச்சமாக  மதித்துச் செயற்படுகிறது. நீதி மன்றம் அதைக் கவனிக்கும் என தமிழக அரசு கைகட்டி வாய்பொத்தி காத்திருக்கிறது.காவிரித் தண்ணீரைத் தமிழகத்துக்குக் கொடுக்கக்கூடாது என்பதில் கர்நாடகம் உறுதியாக இருக்கிறது.  கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிகளும் கர்நாடக அரசின்   பின்னால் இருக்கின்றன. தமிழகத்தின் நிலை இதற்கு எதிர்  மாறாக உள்ளது. தமிழக அரசு தனி வழி போகிறது.. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்துகின்றன.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து கர்நாடகத்துக்கு எதிராகப் போராட வேண்டும் எனற எண்ணம் அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்திடம் கிஞ்சித்தும் இல்லை. தமிழக விவசாயிகள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை எதிர்க் கட்சிகளை  அரவணைப்பதில்லை என்பதில்l அது உறுதியாக இருக்கிறது.   தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான இந்த முரண்பாடு அரசியல் ஆதாயம் கொண்டது.அனைத்துக் கட்சிகளும் இணைந்து முடிவெடுப்பதால்  மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என கர்நாடகம் நம்புகிறது. தமிழகத்தில் மற்றைய கட்சிகளை அணைத்துச்செல்ல அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் தயாராக இல்லை.

தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெற்ற   எதிர்ப்பு தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக முறையாக வெடித்தது. அப்பொழுதும் தமிழக அரசு அமைதியாக கடிதம் எழுதியதே தவிர  கிளர்ந்து எழவில்லை.  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. கர்நாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் கட்சி பேதமின்றி டில்லியில் காய்நகர்த்துகின்றனர்.  தமிழக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும்  தனியகச்சென்று பிரதமரைச்சந்திக்க முயற்சி செய்தனர். திராவிட முன்னேற்றக் கழக‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஜனதிபதியைச் சந்தித்து மனுக்கொடுத்தனர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு பிரதர் மோடி தயங்குகிறார்.

காவிரிப் பிரச்சினக்காக  தமிழக விவசாயிகள் போராட்டங்களை அறிவித்து முன்னெடுக்கும் போது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தைத் தவிர அனைத்துக் கட்சிகளும் அதற்கு அதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த் தலைவர்களும் தொண்டர்களும் ஜெயலலிதா பூரண  குணமடைவதற்காக கோவில் கோவில் கோவிலாகச்சென்று  யாகம் செய்கின்றனர். விவசாயிகளின் போராட்டம் அவர்களுக்குப் பெரிதாகப்படவில்லை. ஜெயலலிதா பூரணசுகத்துடன் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே இலக்கு.

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய உண்மைத் தகவல் வெளிவராமையால்   வதந்திகள் ரெக்கை கட்டிப் பறந்தன. வதந்திகளால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் கோபமடைந்தனர். அதன் விளைவால்  வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் சுமார் பத்துப் பேர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி,ஸ்டாலின்,  விஜயகாந்த் ஆகியோரைப்பற்றி வதந்திகள்  பரப்பப்பட்டபோது கைகட்டி பார்த்துக்கொண்டிருந்த  பொலிஸார் ஜெயலலிதாவைப் பற்றி வதந்தி பரவியபோது களத்தில் இறங்கி  சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்தனர். தமிழக அரசுக்கு ஆதரவாக பொலிஸார்  செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 நீர்ச்சத்துக் குறைவு காய்ச்சல்  போன்ற நோய்களால்  ஜெயலலிதா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் வேறு நோய்க்குரியவர்கள் என்பதனால் ஜெயலலிதாவின் உடல்  நிலை பற்றிய தகவல்கள்  சந்தேகத்தைக் கிளப்பின.சுவாசம்,பிசியோதெரபி, இதயநோய்,நிரிழிவு, நாளம் இல்லாத சுரபிச்சிகிச்சை உட்டச்சத்து நிபுணர்கள் என பல நோய்கள் பற்றிய அறிக்கைகள்  வெளியாகின.

ராகுல்,ஸ்டாலின் உட்பட அரசியல்தலைவர்கள் பலர் அப்பலோவுக்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரித்து அறிந்தனர்.  மத்திய அமைச்சர்களும் தம் பங்குக்கு அப்பலோவுக்குச் சென்று நலம் விசாரித்தனர். எம்.ஜி .ஆர் நோய்வய்பட்டபோதும் இதே போன்ற நிலை காணப்பட்டது. அது இவ்வளவு பரபரப்பாக இருக்கவில்லை. அன்று எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்கு ஜெயலலிதா அனுமதிக்கப்படவில்லை. இன்று ஜெயலலிதாவைப் பார்க்க யாருமே அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையிலும் கருணாநிதி தனது அரசியலைக் கைவிடவில்லை. முதலமைச்சர் இல்லாமையால் நிர்வாகம் நிலை குலைந்துள்ளது. துணை முதலமைச்சரி நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்களும் வைகோவும் கடுமையாக எதிர்த்தனர்.   நெருக்குதல்   அதிகரித்தமையால் முதலமைச்சரின் பொறுப்புகள் பன்னீர்ச்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் அவருடைய பொறுப்புகள்  அனைத்தும் பன்னீர்ச்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக  ஆளுநர் அலுவலகம் அறிவித்தது. ஜெயலலிதா எப்படி  ஒப்புதளித்தார் என்ற சந்தேகம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. நேரடியாகத் தான் கேட்காது மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என அறிக்கைவிட்டார்.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்தவர்கள் அனைவரும் காணமல் போய்விட்டார்கள்.தமிழகத்தின் முதலமைச்சரை தீர்மானிக்கும் சக்தியாக ஒருகாலத்தில் விளங்கிய வைகோவும்,ராமதாஸும்செல்லாகாசாகஒதுக்கப்பட்டுவிட்டர்கள்.முதலமைச்சருக்கு உரிய சகல தகுதியும் இருக்கும் ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டையாக கருணாநிதியும் அழகிரியும் இருக்கிறார்கள். எந்த  விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இரண்டு முறை தமிழகத்தின் முதலமைச்சரான பன்னீர்ச்செல்வத்துக்கு முன்றாவது முறையாகவும் முதலமைச்சருக்கு இணையான பதவி கிடைத்துள்ளது.

காவிரிப் பிரச்சினைக்கான போராட்டம் இன்றும் தொடருகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் ஜெயலளிதவுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

வர்மா 

No comments: