Sunday, August 30, 2020

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்

 


ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.

முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சும் (செர்பியா), சோபியா கெனினும் (அமெரிக்கா) பட்டம் பெற்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக மே, ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இந்த போட்டி செப்டம்பர் 21-ம் திகதி தொடங்குகிறது. ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற இருந்த விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று 31- ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்குகிறது. 

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாமல் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறையில் நடத்தப்படுகிறது. 

நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) பாதுகாப்பு காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) காயம் காரணமாக இந்தாண்டு இறுதிவரை ஆட மாட்டார் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். 

நடால், பெடரர் இல்லாததால் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. 33 வயதான அவர் 18-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் உள்ளார்.

 ஜோகோவிச்சுக்கு டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), மெட்வதேவ் (ரஷ்யா), ஸ்டேபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), சுவரேவ் (ஜெர்மனி) ஆகியோர் சவாலாக இருப்பார்கள். 

பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பினாகா (கனடா) ஆடவில்லை. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) சோபியா கெனின், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), நமோமி ஒசாகா (ஜப்பான்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 

38 வயதான செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய சாதனை படைக்கும் முயற்சியில் உள்ளார்.  

 

No comments: