2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம், வரும் 16ம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ளது. 10 அணிகளில் உள்ள 77 இடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த ஏலத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் ஆயிரத்து 300-க்கும் அதிகமான வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கான 25 வீரர்களுக்கான ஊதியத்திற்காக 120 கோடி ரூபாய் வரை செலவிடலாம். இந்நிலையில், தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கு ஊதியம் போக, மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகத்திடம் கைவசம் உள்ள தொகை என்ன, நிரப்ப வேண்டிய இடங்கள் எத்தனை என்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் அணிகளின் கைவசம் உள்ள தொகை:
1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
64 கோடியே 30 லட்சத்தை கைவசம் கொண்டுள்ளது. மினி ஏலத்திற்கு முன்பாக வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்து, 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 வீரர்களுக்கான காலி இடத்தை கொண்டுள்ளது.
2. சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த மினி ஏலத்தில் அதிகப்படியான கையிருப்புடன் களம் இறங்கும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. 43 கோடியே 40 லட்சத்தை வைத்துள்ளது. ஏலத்திற்கு முன்பாக சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியிடமிருந்து ட்ரேட் மூலம் வாங்கி, ஜடேஜா மற்றும் சாம் கரனை பரிமாறிக் கொண்டது. இதுபோக சில வீரர்களையும் விடுவித்ததன் மூலம், 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 இடங்களை சென்னை அணி நிரப்ப வேண்டியுள்ளது.
3. சன்ரைசர்ஸ் ஐதராபாத்
25 கோடியே 50 லட்சத்தை கைவசம் கொண்டுள்ளது. இந்த அணி, 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 வீரர்களின் இடத்தை நிரப்ப வேண்டியுள்ளது.
4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிர்வாகத்திடம், ஏலத்திற்காக 22 கோடியே 95 லட்சம் உள்ளது. 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டி உள்ளது.
5. டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி அணி ஏலத்திற்கு முன்பாக 6 வீரர்களை விடுவித்தாலும், வலுவான நட்சத்திர வீரர்களை தக்கவைத்துள்ளது. இதன் காரணமாக அணியில் நிலவும் 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வெற்றிடங்களை நிரப்புவதற்காக, அந்த அணியில் கைவசம் 21 கோடியே 80 லட்சம் உள்ளது.
6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
நடப்பு சம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 16 கோடியே 40 லட்சம் கையிருப்புடன் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளது. 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 8 இடங்களை நிரப்ப இந்த அணி தீவிரம் காட்டுகிறது.
7. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
16 கோடியே 5 லட்சம் கையிருப்புடன் இந்த ஏலத்தில் களமிறங்க உள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 9 வெற்றிடங்களை நிரப்ப அணி நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது.
8. குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணியில், 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 5 வெற்றிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்காக அந்த அணியிடம் 12 கோடியே 90 லட்சம் ரூபாய் கையிருப்பு உள்ளது.
9. பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி, 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 4 வெற்றிடங்களை கொண்டுள்ளது. இதனை நிரப்புவதற்காக அந்த அணியின் வசம் 11 கோடியே 50 லட்சம் உள்ளது.
10. மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ், நடப்பாண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் குறைந்த தொகையுடன் களமிறங்கும் அணியாக உள்ளது. வெறும் 2 கோடியே 75 லட்சத்தை கைவசம் கொண்டுள்ள மும்பை, ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 5 வெற்றிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
நடைபெறுவது மினி ஏலம் என்பதால் அணி நிர்வாகங்களுக்கு RTM ஆப்ஷன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment