Thursday, April 24, 2008

குடிநீர்ப் பிரச்சினையால் கொந்தளிக்கும் மாநிலங்கள்








தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு முனைப்புக் காட்டிவரும் வேளையில் அதனை எதிர்த்து கர்நாடகத்தில் உள்ள ஒரு குழுவினர் வன்செயலைத் தூண்டி உள்ளனர்.
தமிழ் நாட்டின் பல இடங்களில் நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜப்பான் நாட்டு வங்கியின் உதவியுடன் தமிழக அரசு ஒரு திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது. தமிழ் நாடு கர்நாடக எல்லையில் உள்ள ஒகேனக்கல் என்னும் இடத்தில் காவிரி நதி நீரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் இத்திட்டத்துக்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்துக்கு சொந்தமான நதியில் இருந்து குடிநீரைப் பெறுவது தவறு. அதேவேளை ஒகேனக்கல் பகுதியும் கர்நாடகத்துக்கு சொந்தமானது என்று கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்பு ஒன்று வன்செயலைத் தூண்டி உள்ளது.
கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொருக்கப்பட்டன. அங்கிருந்த தமிழ் பட விநியோகப் பலகைகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டன. தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் எதுவும் கர்நாடகத்தில் இருந்து ஒளிபரப்பக் கூடாது என்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகைக் காரியாலயம் சேதமாக்கப்பட்டது. கர்நாடக தமிழ்ச் சங்க கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கன்னட மொழி மீது தீராத பற்றுக் கொண்ட அந்த அமைப்பின் வெறியாட்டங்களை பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர கலவரக்காரர்களை விரட்டவோ அல்லது கைது செய்யவோ முயற்சிக்கவில்லை.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளது. வன்செயலைத் தூண்டி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் தோல்வி அடைந்து விடும் சூழ்நிலை ஏற்படுமோ என்று அரசியல் கட்சிகள் தயங்குகின்றன.
இந்தியாவின் அறிவியல் துறையின் முன்னோடி நகரமாக விளங்குவது கர்நாடகத் தலைநகர் பெங்களூர். வெளிநாட்டில் உள்ள பல நிறுவனங்கள் பெங்களூரில் முதலீடு செய்துள்ளன. தமிழ் நாட்டுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பெங்களூரின் நற்பெயரைக் களங்கப்படுத்தி உள்ளன.
தமிழர்களுக்கு எதிரான போராட்டம் கர்நாடகத்தில் முன்பும் பலமுறை நடைபெற்றுள்ளன. உலகமே வியந்து போற்றும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சிலையை பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் திறந்து வைப்பதற்கு அங்குள்ள மொழி பெரியார்கள் தடை விதித்துள்ளனர். சுமார் 90 வருட காலமாக திருவள்ளுவர் சிலை கறுப்புத் துணியால் மூடப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைப்பதற்கு கர்நாடக அரசு இதுவரையில் எந்த ஒரு முயற்சியையும் செய்யவில்லை. இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்களில் கன்னட மொழி பேசும் சிலரும் அடங்குகின்றனர்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தமிழக முதல்வரின் உருவப் பொம்மைகளுக்கு தீ வைத்தனர். ஒகேனக்கல் பெங்களூருக்கே சொந்தம் என்று கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். தமிழக மக்களுக்கு எதிராக கர்நாடகத்தில் உள்ள ஒரு சில அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து தமிழக சட்டசபையில் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு 1998 ஆம் ஆண்டு கர்நாடக அரசு ஒப்புதலளித்து கையெழுத்திட்டது. ஆகையினால் கர்நாடக அரசு இத்திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி விட்டது. இந்தத் திட்டம் நிறைவேறுவதற்குரிய சகல ஒத்துழைப்பையும் வழங்க வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது.
கர்நாடகத்தில் நடைபெறும் வன்செயல்களுக்கு போட்டியாக தமிழகத்திலும் ஆங்காங்கே வன்செயல்கள் நடக்கின்றன. மத்திய அமைச்சர் டி. ஆர். பாலுவும், கர்நாடக முன்னாள் முதல்வர் கே. கிருஷ்ணாவும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி உள்ளனர். கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது. மே மாதம் 16, 22 ஆகிய தினங்களில் கர்நாடக சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. கர்நாடகத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை கைதுசெய்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆகையினால் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு முடிவு எடுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 30 இலட்சம் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதைத் தடுக்கும் ஒரு சில குழுவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறினால் மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவு குறைந்து விடும். இரு மாநிலங்களின் பிரச்சினையைத் தீர்க்கும் சக்தி மத்திய அரசிடமே உள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 06.04.2008

No comments: