Thursday, April 24, 2008

கூட்டணியை குழப்ப இரகசியத் திட்டங்கள்




வர்மா

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு மிக மிக இறுக்கமான நிலையை அடைந்துள்ளது. பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் தி.மு.கவும் காங்கிரஸும் என்று கூறும் வகையில் இரு கட்சிகளும் பின்னிப்பிணைந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையேயான பிணைப்புக்குக் காரணம் இரு கட்சிகளினது கொள்கைகள் அல்ல. முதல்வர் கருணாநிதிக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் இடையேயான புரிந்துணர்வுதான் இரண்டு கட்சிகளையும் பிணைத்து வைத்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் குற்றம் சாட்டினர். தமிழக அரசில் பங்கு கேட்டு நெருக்குதல் கொடுத்தனர். இப்படிப்பட்ட சலசலப்புகள் எல்லாம் தமிழகத்துக்குள்ளேயே அடங்கிவிட்டன. டில்லியில் இருந்து வரும் சில கூட்டணிகளின் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவர்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே பிரிவினையை உருவாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மாற்றீடாக மிகப் பெரிய கூட்டணியை அமைக்க சில அரசியல் தலைமைகள் முயற்சி செய்கின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்தும் இணைந்தால் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இணையான கூட்டணியாக அது அமையும். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணைந்தால் ஏனைய சிறிய கட்சிகள் பலவும் அவர்களுடன் இணைவதற்கு தயாராக இருப்பார்கள். ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய இருவரும் முதல்வராகும் கனவில் இருப்பதனால் இந்த இணைப்புக்குரிய சாத்தியம் மிக மிகக் குறைவு.
கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் மக்களுடன் தான் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்ற கோஷத்துடன் பவனி வரும் விஜயகாந்த் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதே அவரது கட்சித் தலைவர்களின் ஆசை. அவர்களின் ஆசைக்கு விஜயகாந்த் தடை போட்டு வருகிறார்.
விஜயகாந்துக்கு எதிர்மாறாக உள்ளார் நடிகர் சரத்குமார். சரத்குமாரின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது இன்னும் தெளிவாகவில்லை. சரத்குமார் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவருடைய கட்சி இன்னமும் தேர்தலைச் சந்திக்கவில்லை. ஏனைய எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதே சரத்குமாரின் ஆசை. தேர்தல் சமயத்தில் ஏதாவது ஒரு கட்சியுடன் சரத்குமார் கூட்டணி சேரத் தயாராக உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்பதில் சுப்பிரமணிய சுவாமி மிகவும் ஆர்வமாக உள்ளார். ஜெயலலிதாவைச் சந்தித்து இது தொடர்பாக பல ஆலோசனைகளை சுப்பிரமணிய சுவாமி நடத்தி உள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அதன் பின்னணியில் தான் இருப்பதாக சுப்பிரமணிய சுவாமி பெருமையாகக் கூறுவார்.
முதல்வர் கருணாநிதியை வீழ்த்தும் ஆயுதமாக தயாநிதி மாறனை பிரயோகிக்க சுப்பிரமணிய சுவாமியும், சரத்குமாரும் முயற்சி செய்துள்ளனர். சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியாக சந்திரலேகாவும், சரத்குமாரின் பிரதிநிதியாக அவருடைய கட்சியின் அவைத் தலைவர் முருகேசனும் தயாநிதிமாறனைச் சந்தித்துப் பேசினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப் பெரிய தூண்களில் ஒன்றான முரசொலிமாறனின் மகனான தயாநிதிமாறன் எனது கட்சியில் இருக்கிறார் என்று பெருமையாகக் கூறுவதற்கு இவர்கள் முயற்சி செய்கின்றனர்.
தயாநிதி மாறன் மிகச் சிறந்த அமைச்சர். ஆனால் அவரின் பின்னால் இலட்சக்கணக்கான வாக்கு வங்கி இல்லை. சன் தொலைக்காட்சியும் தினகரன், முரசொலி ஆகிய பத்திரிகைகளும் தயாநிதி மாறனின் பின்னால் உள்ளன. ஊடகங்கள் மூலம் தங்கள் கட்சியை வளர்க்கலாம் என்று இவர்கள் மனப்பால் குடிக்கின்றனர். இவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தயாநிதிமாறன் இப்போதைக்கு இப்படியே இருக்கவே விரும்புகிறார். இன்னொரு கட்சியில் இணைந்து தனது செல்வாக்கை வேறொரு கட்சிக்கு தாரைவார்க்க தயாநிதிமாறன் தயாராக இல்லை.
குடும்பக் கௌரவம், குடும்பப் பாசம், கட்சியின் ஒற்றுமை என்பன அவரைக் கட்டிப் போட்டுள்ளன. முதல்வரின் மகனான மு.க. அழகிரி மட்டும்தான் தயாநிதி மாறன் குடும்பத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார். தயாநிதி மாறனின் பிரச்சினையை பெரிதுபடுத்த கலைஞர் விரும்பவில்லை.
அரசியல் ரீதியாக தயாநிதி மாறன் முடங்கிப் போய் இருந்தாலும் தொழில் ரீதியாக அவரை முடக்க திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. தன்னையும் தனது நிறுவனங்களையும் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளார் தயாநிதி மாறன்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு; 30 .03 .08

No comments: