Sunday, July 25, 2010

எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்பிசுபிசுத்தது போராட்டம்





தமிழக சட்ட சபை தேர்தலை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்ததனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 2011ஆம் ஆண்டு மே மாதத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலம் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழக சட்ட சபைத் தேர்தலை நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்வார் என்ற கருத்து நிலவியது. அதனை முற்றாக மறுத்த முதல்வர் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் தமிழக சட்ட சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்று அறிவித்தார்.
தமிழக சட்ட சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தும் உத்தேசம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்திருக்கும் இதேவேளை தேர்தலைச் சந்திப்பதற்கான வேலைகளை இப்பொழுதே முடுக்கிவிட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனமாக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலப்படுத்தும் வேலைகள் மறைமுகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்புள்ளிகளுக்குவலை வீசப்படுகிறது. ஒரு சிலர் அதில் வசமாக அகப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டனர். இன்னும் சிலர் இணைவதற்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனமடைந்தால் அதனுடன் கூட்டணி சேர்வதற்கு ஏனைய கட்சிகள் தயக்கம் காட்டும் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலவீனத்தை உணர்ந்து கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளைக் கேட்கும் நிலை ஏற்படலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் தொகுதிகளின் அளவைக் குறைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதற்கு அமைவாகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் புள்ளிகளுக்கு வலை வீசப்படுகிறது.
செம்மொழி மாநாட்டின் பின்னர் முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார். ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படும் என்ற செய்தி பரபரப்பாக அடிபடுகிறது. செம்மொழி மாநாடு முடிந்த கையுடன் ஓய்வு என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் கருணாநிதி. அடுத்த தேர்தலையும் தலைமையேற்று நடத்த சந்திக்க தயாராக இருப்பதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்கு போட்டி ஏற்படும். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையேயான புகைச்சல் வெளிப்பட்டுவிடும். தலைமைப் பதவிக்காக இருவரும் முட்டி மோதுவர். ஸ்டாலின், அழகிரி ஆகியோரின் மோதலினால் கட்சிக்குள் பெரிய பிளவு ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தவர்களை அமைதியாக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. சகோதர யுத்தத்தினால் கட்சி இரண்டாக உடைந்து விடும் என்ற பயத்தினால்தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தை முதல்வர் கைவிட்டுள்ளார் என்ற கருத்தும் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற தேர்தல் வெற்றிகளில் மு.க. அழகிரியின் பங்கு கணிசமானது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் முக்கிய பொறுப்புகளை அழகிரியிடம் கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி தீர்மானித்துள்ளார். அதற்காக மத்திய அமைச்சுப் பதவியை அழகிரி ராஜினாமா செய்வார் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவரிடமும் தேர்தல் தொகுதிகளை மு. கருணாநிதி ஒப்படைப்பார்.
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் தமிழகத்தில் பிசுபிசுத்துவிட்டது. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கடந்த வாரம் நடைபெற்ற போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. எரிபொருள் விலை உயர்வினால் பொது மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை.
ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் முழு மூச்சுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் இந்தப் போராட்டத்தைப் புறக்கணித்து விட்டனர். ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் இணைப்பதற்கான இரகசியப் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களின் முன் தோன்றி தமது எதிர்காலத் திட்டம் பற்றி அறிவிப்பார்கள் என்ற செய்தி வெளியாகியதால் மத்திய, தமிழக அரசுகளுக்கு எதிரான போராட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாததன் காரணம் அறிவிக்கப்படவில்லை.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவராலும் ஒதுக்கப்பட்ட ஒருவராக வலம் வருகிறார் டாக்டர் ராமதாஸ். தமிழகத் தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் சந்தித்த பெரும் தோல்விகளால் அக் கட்சியின் மீது இருந்த மதிப்பு பெருமளவு குறைந்து விட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் விடுத்த தூது அனைத்தும் புறக்கணிக்கப்பட்டதனால் நொந்து போயிருக்கும் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நடைபெற்ற ஹர்த்தாலில் கலந்து கொள்ளவில்லை.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டால் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை தெம்புடன் நடத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டாக்டர் ராமதாஸ் பகிஷ்கரிப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசுக்கு ஆதரவு கொடுத்தபோது தமிழக அரசு விட்ட தவறுகளை வெளிப்படையாக விமர்சித்த டாக்டர் ராமதாஸ் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த போது தமிழக அரசை மிகத் தீவிரமாக எதிர்த்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்வதற்காக டாக்டர் ராமதாஸ் விடுத்த தூதுகள் அனைத்தும் பயனற்றுப் போயின. டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்த வரவேற்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கிடைக்கவில்லை. கருணாநிதி கண்ணசைத்தால்தான் சோனியா சம்மதிப்பார். ஆகையினால் கருணாநிதியைத் திருப்திப்படுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இரகசியமாக நடைபெறும் கூட்டணிப் பேச்சுவார்த்தை பரகசியத்துக்கு வந்துவிடும். விஜயகாந்தையும் ஜெயலலிதாவையும் ஒரே கூட்டணியில் இணைப்பதற்கு திரை மறைவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதேவேளை காங்கிரஸின் வரவை ஜெயலலிதா எதிர்பார்த்துள்ளார். விஜயகாந்த் உள்ளே சென்றால் வைகோவின் நிலை தர்மசங்கடமாகிவிடும். விஜயகாந்துக்கு ஜெயலலிதா கொடுக்கும் முன்னுரிமை வைகோவைப் பின்னுக்குத் தள்ளிவிடும். விஜயகாந்த் முன்னிலை பெற்றால் வைகோ தொடர்ந்தும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு வழங்க மாட்டார்.
காங்கிரஸுடன் ஜெயலலிதா இணைந்தால் ஜெயலலிதாவுக்கு வழங்கி வரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிவிடுவர். காங்கிரஸ் இருக்கும் இடத்தில் இடதுசாரிகள் இருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவுடனான கூட்டணியில் இருந்து வைகோவும் இடதுசாரிகளும் வெளியேறினால் அவர்களை அரவணைப்பதற்கு கருணாநிதி தயாராக உள்ளார்.




வர்மா
வீரகேசரிவாரவெளியீடு11/08/10

No comments: