திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலத்தை இந்திய மத்திய அரசு அறியும் வகையில் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாடு பற்றிய அறிவித்தல் வெளியான உடனேயே ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் பல அரங்கேறின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழி வித்தகர்கள் தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி எடுத்தியம்பினர். தமிழுக்காக எடுக்கப்பட்ட இவ் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலமும் தமிழக முதல்வரின் புகழும் அரங்கமெங்கும் ஒலித்தன.
தேர்தலின் வெற்றிக்காக அமைக்கப்படும் கூட்டணிகள் அனைத்தும் தேர்தல் முடிந்ததும் பின்னர் தொடர்வது அபூர்வம். அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவு எனத் தெரிந்ததும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து கூட்டணிக்குள் பிரிவினை ஏற்பட்டு விடும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி பிரிக்க முடியாதபடி உறுதியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸைப் பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
ஜெயலலிதாவின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்களில் ஒருவர் பிரணாப் முகர்ஜி. செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில் பிரணாப் முகர்ஜியை அழைத்து தனது பலத்தை வெளிக்காட்டி உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் கூடிய கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவி இல்லாமல் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை மறைமுகமாக உணர்த்தி உள்ளது செம்மொழி மாநாடு.
தமிழக முதல்வர் கருணாநிதியும் டாக்டர் ராமதாஸும் செம்மொழி மாநாட்டில் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறிய பின்னர் தமிழக முதல்வர் கருணாநிதியும் டாக்டர் ராமதாஸும் சந்திக்கவில்லை. டாக்டர் ராமதாஸின் அனுமதி பெற்றுத் தான் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் டாக்டர் ராமதாஸின் பெயர் பொறிக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டுக்கு டாக்டர் ராமதாஸ் சென்றிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. செம்மொழி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ளாததனால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லையென்றே தெரிகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தின் இடதுசாரிக் கட்சிகள் ஆகியன செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். டில்லியில் உள்ள இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தன் பக்கம் இருப்பதை தமிழக இடதுசாரிக் கட்சித் தலைவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி உள்ளார் கருணாநிதி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் பதவியும் வழங்கப்படுவதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அடுத்து வெளியேறப் போவது யார் என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுபவர்களைத் தடுக்க முடியாது தடுமாறும் ஜெயலலிதா, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பலர் வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரப் போகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நடவடிக்கையினால் வெறுத்துப் போயிருப்பவர்களின் பட்டியலைத் தயாரித்த திராவிட முன்னேற்றக் கழகம் மெதுவாக அவர்களைத் தன் பக்கம் திருப்பி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஓரம் கட்டப்பட்டவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து விட்டதோ என்ற சந்தேகமே எழுந்துள்ளது.
மத்திய மாநில அமைச்சர்களான ஜெகத் ரட்சகன், காத்தூர் இராமச்சந்திரன், எ.வ. வேலு உட்பட பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவியவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினர்களாகத் தெரிவான செல்வ கணபதி, கே.பி. இராமலிங்கம், தங்கவேல் ஆகியோரும் அணி மாறியவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனிதா இராதாகிருஷ்ணன், கருப்பு சாமி பாண்டியன் உட்பட பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் எதிரியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அணி மாறியவர்களுக்கு பதவியும் மரியாதையும் கொடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணரின் சகோதரர் தா. ராமையா, ஜெனிபர் சந்திரன், கு.ப. கிருஷ்ணன், இன்பத்தமிழன் போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படாமையினால் அவர்களில் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினர்.
நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களின்போது படுதோல்வியடைந்த ஜெயலலிதாவை விட்டுப் பிரியாமல் இருக்கிறார் வைகோ. வெல்லும் கூட்டணியில் சேராது தோல்வியடைவோம் என்ற பயமில்லாது ஜெயலலிதாவுக்கு பக்கத் துணையாக இருக்கும் வைகோவை மறைமுகமாக புகழ்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸ் அல்லது விஜயகாந்த்துடன் கூட்டணி சேரும் ஆவலில் உள்ள ஜெயலலிதா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் அந்தக் கூட்டணியில் வைகோ இணைந்து இருப்பார் என்பது சந்தேகம். இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சியே முழு ஒத்துழைப்பையும் வழங்கியது என்பது வெளிப்படையானது. யுத்த காலத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசிய வைகோ காங்கிரஸ் கட்சியுடன் சேர்வதற்கு விரும்பமாட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவரது அடுத்த தெரிவு திராவிட முன்னேற்றக் கழகம் தான். காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து தான் இலங்கையில் யுத்தத்தை வழி நடத்தின என்று குற்றம் சாட்டிய வை.கோ. திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் இணையமாட்டார். வைகோவின் முடிவை அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர் அவருடைய ஆதரவாளர்கள்.
ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கும் வைகோ, முற்று முழுதாக ஜெயலலிதாவை நம்பவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிதாக இணைந்த இடது சாரித் தலைவர்களுடனும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடந்து அவர்களுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்த பின்பே வைகோவுடன் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடத்தினார். ராஜ்ய சபாத் தேர்தலில் ஜெயலலிதா, வைகோவை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கினார் ஜெயலலிதா.
காங்கிரஸ் அல்லது விஜயகாந்துடன் இணைவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்கிறார். இந்த இணைப்புப் பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் வைகோவின் நிலையில் மாற்றம் ஏற்படும். இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தவறு செய்து விட்டது என்று குற்றம் சாட்டிய வைகோ, காங்கிரஸுடன் இணைந்து போகக் கூடிய வாய்ப்புக் குறைவு. அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கிறார் விஜயகாந்த். வைகோவை விட அதிக தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டால் அக் கூட்டணியில் வைகோ தொடர்ந்தும் இருப்பது சந்தேகம். இந்தச் சூழ்நிலையில்தான் வைகோவை தன் பக்கம் இழுப்பதற்கான சாதக சமிக்ஞைகளை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு வருகிறது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 04/07/10
No comments:
Post a Comment