Sunday, August 8, 2010

அங்கீகாரம் இழந்த கட்சிகள்அந்தரத்தில் தலைவர்கள்





மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரத்தை முறையே தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் ஆணையம் இரத்துச் செய்துள்ளது. கடைசியாக நடந்த தேர்தலில் வெற்றி பெறத் தவறியதாலும் செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகளைப் பெறத் தவறியதாலும் மறுமலர்ச்சி திராவிடக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பம்பரச் சின்னமும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழச் சின்னமும் அடுத்த ஆறு வருடங்களுக்கு நீடிக்கும். ஆறு வருடங்களுக்கு தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிடக் கழகமும், புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகச் செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தகுதியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இழந்துள்ளது.
இதேபோன்றே பாட்டாளி மக்கள் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்ததனால் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது.
தமிழக அரசியலில் மிகப் பெரும் சக்தியாக விளங்குபவர் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சவால் விடுத்தவர். தமிழகத் தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயித்த வைகோவின் கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பந்தா இல்லாது தொண்டர்களின் பலத்தில் கட்சியைக் கட்டி வளர்த்தவர் வைகோ. ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு வைகோவால் ஆபத்து என்பதை உணர்ந்த கருணாநிதியால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர் வைகோ என்ற கருத்து தமிழக அரசியலில் பரவலாக உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தது அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஒன்று. கூட்டணி பேரம் எதிர்பார்த்தது போல் இல்லாமையினால் ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் கைகோர்த்து அரசியலை நடத்துகிறார் வைகோ.
ஜெயலலிதாவின் பாரிய வீழ்ச்சி, வைகோவுக்குப் படுபாதகமாக அமை ந்து விட்டது. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து கருணாநிதியை கடுமையாகத் தாக்கிப் பிரசாரம் செய்த வைகோவின் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது தவிக்கிறது.
தமிழ் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்று. தேர்தல் சின்னங்கள் ஆணையத்தின் படி மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமாகப் பம்பரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படியே அரசியல் கட்சியின் அங்கீகாரம் நீடிக்கப்படுகிறது.
கடைசியாக நடந்த சட்ட சபைத் தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குக் குறையாது பெற்றிருப்பதுடன் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குப் பெற்றிருப்பதுடன் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்ட சபைத் தேர்தலில் மொத்தத் தொகுதிகளில் மூன்று சதவீதத் தொகுதிகளிலோ அல்லது மூன்று தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் பிரகாரம் ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் தேர்தல் ஆணையத்தினால் ஆய்வு செய்யப்படுகின்றன.
தேர்தல் ஆணையகத்தின் ஆய்வின்படி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 3.67 சதவீத வாக்குகளைப் பெற்றது. சட்ட சபைத் தேர்தலில் 5.98 சதவீதவாக்குகளைப் பெற்றதுடன் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையகத்தில் விதிமுறைகளின்படி அக்கட்சி தனது அங்கீகாரத்தை வைத்துக் கொள்ளும் விதிமுறையைப் பூர்த்தி செய்யவில்லை. ஆகையினால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரத்தை ஏன் இரத்துச் செய்யக் கூடாது என்பதற்கான விளக்கம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற வைகோ தனது தரப்பு நியாயங்களை முன் வைத்தார். 5.98 சதவீதத்தை ஆறு சதவீதமாகக் கணிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரத்தைத் தமிழகத்தில் ரத்துச் செய்தது.
இதேவேளை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகப் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 34.29 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. சட்ட சபைத் தேர்தலில் 3.80 வாக்குகளைப் பெற்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாததனால் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் இரத்துச் செய்யக் கூடாது என்று விளக்கம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. புதுச்சேரியில் ஒரே ஒரு தொகுதிதான் உள்ளது. அத்தொகுதியில் வெற்றி பெறா விட்டாலும் இரண்டாவது இடத்துக்கு வந்ததாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பு தேர்தல் சின்ன ஆணை விதிமுறைகளின் பிரகாரம் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றால் மட்டும் போதாது தேர்தல் ஆணைய விதிமுறைகளின் பிரகாரம் ஆறு சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வேண்டும். இதேவேளை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் ஆறு சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளரின் செல்வாக்கு, கட்சியின் செல்வாக்கு என்பனவற்றுடன் கூட்டணிக் கட்சியின் பரிபூரண ஆதரவும் கிடைக்க வேண்டும். வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவருக்கும் ஆறு வருட அவகாசத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த ஆறு வருட காலத்தினுள் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் அபரிமிதமான வெற்றியைப் பெற்று ஆறு சதவீத வாக்குகளுக்கு அதிகமாகப் பெற வேண்டும். வைகோவும், டாக்டர் ராமதாஸும் தமது கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கத் தவறினால் அரசியல் கட்சியின் சின்னத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தமிழக அரசையும் கருணாநிதியையும் தாக்கிப் பேசி கை தட்டல் வாங்குவதிலேயே எதிர்க்கட்சிகள் அனைத்தும் குறியாக உள்ளன. வளர்ந்து விட்ட கட்சியில் செல்வாக்கைத் தக்க வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவறி விட்டன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் பலர் கட்சி தாவினாலும் அக்கட்சியின் செல்வாக்குச் சரியவில்லை. அதனுடைய வாக்கு வங்கியில் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா இழந்த பெருமையை மீண்டும் பெற்றார். ஜெயலலிதாவுடன் கை கோர்த்த இக்கட்சிகள் இருந்ததையும் இழந்து விட்டன.
இந்நிலையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலிலும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளின் பிரகாரம் வாக்குகளைப் பெற்று இழந்து விட்ட தமது கட்சியின் அங்கீகாரத்தை மீளப் பெற வேண்டிய நிலைக்கு வைகோவும், டாக்டர் ராமதாஸும் தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காங்கிரஸின் கோட்டை கருணாநிதியுடனும் காங்கிரஸுடனும் கைகோர்த்து புதுச்சேரியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றது. ஜெயலலிதாவுடன் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது வெற்றியைப் பறிகொடுத்தது. புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால் காங்கிரஸுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் கூட்டணி சேர வேண்டும். ஆகையினால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி வாக்கு வங்கியை உயர்த்துவதற்காக காங்கிரஸினதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் தயவை டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்கிறார்.
வைகோவின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது. தன்னை நம்பி அரசியல் கட்சியை ஆரம்பித்த வைகோ கட்சியின் வெற்றிக்காக ஜெயலலிதாவை நம்பி கட்சியை வழி நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால்தான் இழந்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெற முடியும். ஜெயலலிதாவின் தலைமையிலான இன்றைய கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியையும் விஜயகாந்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. காங்கிரஸ் என்பது விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் இணைந்து தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வைகோவின் செல்வாக்குக் குறைந்து விடும்.
காங்கிரஸுக்கும் விஜயகாந்துக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்கி விட்டு குறைந்த தொகுதிகளே வைகோவுக்கு வழங்கப்படும். குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு இழந்த அங்கீகாரத்தை பெறுவது சற்று சிரமமான காரியம்.
பல சிரமங்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கும் வைகோ, தனது கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதே நிதர்சனம்.


வர்மா


வீரகேசரிவாரவெளியீடு 08/08/10


No comments: