Tuesday, August 24, 2010

ஜெயலலிதாவின் அரவணைப்பில் சின்னக்கட்சிகள்பெரிய கட்சியைத் தக்கவைக்க கருணாநிதி முயற்சி

தமிழக சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து பொதுக்கூட்டங்களையும், தமிழக அரசுக்கு எதிரான கூட்டங்களையும் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிட் கட்சி ஆகியவற்றின் துணையுடன் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி படுதோல்வியடைந்தது.
செல்வாக்கு மிக்க தலைவர்களுடனும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வியடைந்த ஜெயலலிதா, சிறிய கட்சிகளைத் தன்பக்கம் கொண்டு வருவதில் முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். தமிழக ஆட்சியைத்தக்க வைப்பதற்கு வியூகம் வகுக்கும் முதல்வர் கருணாநிதியை வீழ்த்துவதற்கு கூட்டணியைத் தயார்படுத்துவதில் ஜெயலலிதா மிகவும் ஆர்வமாக உள்ளார்.
கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் போது சுமார் 20 தொகுதிகளில் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தோல்வியடைந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவு இருந்தால் அந்த 20 தொகுதிகளிலும் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல் மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கருதிய ஜெயலலிதா சிறிய கட்சிகளை அன்புடன் அரவணைக்கிறார்.
சாதிக் கட்சிகளும், மதக் கட்சிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றியடைந்துள்ளன. அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, வன்னியர் கூட்டமைப்பு, பார்வேர்ட்பிளக் ஆகியன ஜெயலலிதாவுடன் ஐக்கியமாகி உள்ளன. ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் ஜெயலலிதா உணர்ந்துள்ளார். கூட்டணி சேரத்துடிக்கும் கட்சியின் அமைப்பின் தலைவர்களை ஜெயலலிதாவே நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழு உரிய முறையில் செயற்படவில்லை. அதன் காரணமாகச் சில சிறிய கட்சிகள் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டதாக அக்கட்சிகளின் வாக்குகள் இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று ஜெயலலிதா நம்புகிறார்.
ஜெயலலிதாவைச் சந்திப்பது சிரமம். இடையில் உள்ள தலைவர்களை அல்லது அவர் நியமிக்கும் ஒருசிலரைத் தான் சந்திக்க முடியும். ஜெயலலிதாவுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற அவப்பெயரைத் துடைப்பதற்கு ஜெயலலிதா முயற்சி செய்கிறார். சகல நடவடிக்கைகளும் தன் மூலம் தான் நடைபெறுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்காகவே தன்னுடன் இணைய இருக்கும் தலைவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுகிறார் ஜெயலலிதா.
சிறிய கட்சிகளையும், சாதி அமைப்புகளையும் தனது வலையில் வீழ்த்திய ஜெயலலிதா, காங்கிரஸ், விஜயகாந்த் ஆகிய இரு பெரும் திமிங்கிலங்களுக்காகத் தனது கட்சியின் கதவை அகலத் திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதா பங்குபற்றும் கூட்டங்களில் முதல்வர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தவரையும் குறிவைத்து உரையாற்றுகிறார். சகல கூட்டங்களிலும் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று சூசகமாகத் தெரிவிக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியைப் பிரிக்க வேண்டும் என்பதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளில் முதன்மையானது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியுடன் இணைய உள்ள நம்பிக்கையை மறைமுகமாகத் தொண்டர்களுக்குத் தெரியப்படுத்துகிறார் ஜெயலலிதா.
ஏட்டிக்குப்போட்டியாக கூட்டங்களினால் கோவை குலுங்கியது. தமிழக அரசின் செம்மொழி மாநாட்டினால் கோவை கலகலப்பாகியது. செம்மொழி மாநாட்டுக்கு சபையில் கூடிய கூட்டத்தினரைக் கண்டு பிரமித்த ஜெயலலிதா கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டை நடத்தினார். கோவையில் ஜெயலலிதாவைக் காண்பதற்குத் திரண்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்து திராவிட முன்னேற்றக் கழகம் தனது செல்வாக்கை வெளிப்படுத்த கோவையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார் முதல்வர் கருணாநிதி. மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது கோவை.
திருச்சியில் நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டத்துக்குத் திரண்ட தொண்டர்களைப் பார்த்து உற்சாகமடைந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அணுகுமுறையில் இப்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் மைதானங்களில் எம்.ஜி.ஆரின் படங்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா தனது உரையிலே சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களைப் பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.
ஜெயலலிதாவின் அடுத்த பிரமாண்டமான கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. மதுரை அழகிரியின் கோட்டை, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வாலாட்ட முடியாது. அழகிரியின் விருப்பம்தான் மதுரையில் அரங்கேறும். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கத் தயாராகிறார் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மதுரையில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிகோரிய போது இழுத்தடிக்கப்பட்டது. அழகிரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தத் தயாராகிறார் ஜெயலலிதா. மதுரையில் ஜெயலலிதா கூட்டம் நடத்தத் தயாராகையால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐக்கியமாகின்றனர். இதன் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பு எழத்தொடங்கி உள்ளது. அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவப்போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் தனது கட்சியை பலப்படுத்த தொண்டர்ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை ஜெயலலிதாவுக்கு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேடிச் சிறிய கட்சிகள் செல்வதனால் தொண்டர்கள் மத்தியில் சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை வெளிப்படுத்தவே பெரும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரு பெரும் கட்சிகளின் துணை இன்றி தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தவர்கள் இரண்டு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி சேரத் துடிக்கிறார்கள். கூட்டணியில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பல அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன.
தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தனிமரமாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டு வருகிறார் ஜெயலலிதா. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைத் தன்பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்கிறார். இதேவேளை விஜயகாந்தின் வரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
துணை முதல்வர் பதவியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் கட்சிகள் துணை முதல்வர் பதவிக்குக் குறி வைக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்தால் ஜெயலலிதா வெற்றி பெற முடியும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு
22/08/10

1 comment:

Anonymous said...

முதல்வர் பதவியில் இருந்து அதிகார ருசியை அனுபவித்த ஜெயலலிதா எப்பாடு பட்டேனும் அந்த அதிகாரத்தை அடையத்துடிக்கிறார். அவ்வண்ணமே கருணாநிதியும்....இவர்களுக்கு மக்கள் சேவை,நாட்டு நலன்,தன்னலம் கருதாத எண்ணம் போன்ற எந்த நல்ல கொள்கைகளும் இல்லாத மட்டமான தலைவர்கள்.. அதன் பொருட்டே.. அரசியலில் தங்களது சூழ்ச்சி,தந்திரம்,கருப்புபணம் எனும் அத்தனை தீயவைகளையும் இத்தேர்தலில் எடுத்துவிடுவார்கள். மக்களும் இந்த தீமைகளின் ஓர் அங்கம்.