Wednesday, May 4, 2011

அதட்டுகிறது காங்கிரஸ்அடங்குகிறது தி.மு.க.

தமிழக சட்ட சபைத் தேர்தல் காரணமாக சற்று அடங்கி இருந்த ஸ்பெக்ரம் விவகாரம் மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டதும் எதிர்க்கட்சிகள் அதனைத் தமது தேர்தல் பிரசாரத்தில் முக்கிய கருப் பொருளாகப் பயன்படுத்தினர். தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிவு வெளிவர இன்னமும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் பதை பதைத்துக் கொண்டிருக்கும் வேளையில் குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயரை சி.பி.ஐ. சேர்த்ததால் கலங்கிப் போயுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்பெக்ரம் ஊழல் குற்றச்சாட்டில் ராசா, சாதிக் பாட்ஷாவின் சகோதரி ஆகியோர் சி.பி. ஐ.யால் கைது செய்யப்பட்டனர். முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்பாள், மகள் கனிமொழி ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பரபரப்பாகத் தகவல் வெளியானது. ஸ்பெக்ரம் விவகõரத்தைப் பற்றிக் கவலைப்படாது தேர்தலைச் சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸ் கட்சியின் நெருக்குதல்களைக் கணக்கில் எடுக்காது கூட்டணி தர்மம் என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸுடன் உறவைத் தொடர்ந்தது தி.மு.க.
ஸ்பெக்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனத்திடம் இருந்து 210 கோடி ரூபாவை கலைஞர் தொலைக்காட்சி கடனாகப் பெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்துடன் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதால் ஸ்பெக்ரம் ஊழலுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது. கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குகள் தயாளு அம்மாளின் பெயரில் உள்ளது. கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோரும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தயாளு அம்மாளின் பெயர் குற்றப் பத்தரிகையில் இல்லை. ஆனால் சாட்சியின் பெயரில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆகையினால் ஸ்பெக்ரம் பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டிருக்கமாட்டார் என்று சி.பி.ஐ. கருதுகிறது.
கூட்டணிக் கட்சிகள் ஊழல் செய்யும்போது அதனைக் கண்டும் காணாதது போல் இருந்து கூட்டணித் தர்மத்தைக் கடைப்பிடித்த வரலாறுகள் உள்ளன. இந்திய மத்திய அரசு கண் அசைத்தால் தான் மேலதிக விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. ஊழலுக்கு எதிரான கட்சி என்ற மாயையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயல்கிறது. அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது. காங்கிரஸுக்கு எதிராகப் பொங்கி எழுந்தால் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்துவிடும் என்ற பயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அடங்கி ஒடுங்கியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல் என்ற பூதத்தைக் காட்டியே தனது விருப்பங்கள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி வருகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிவு வெளிவரும் வரை இறுக்கமான நடவடிக்கை எதனையும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்காது. தமிழக ஆட்சி பறிபோனால் மத்திய அரசின் துணையுடன் தான் தமிழக அரசை எதிர்த்துப் போராட வேண்டும். ஸ்பெக்ரம் விவகாரத்துக்காக அவசரப்பட்டு மத்திய அரசில் இருந்து வெளியேறினால் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் பொங்கி எழாது பொறுமை காட்டுகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்பெக்ரம் விவகாரத்தில் கனி மொழியின் பெயரை சி.பி.ஐ குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டதனால் திராவிட முன்னேற்றக் கழக செயல் திட்டக் குழு அவசரமாகக் கூடியது. அது சம்பிரதாயமான கூட்டமாகவே இருக்கும் காங்கிரஸுக்கு எதிரான எந்தவிதமான எதிர்ப்பும் அங்கு காட்டப்படாது என்று விமர்சகர்கள் எதிர்வு கூறினார்கள். அதேபோன்று சட்டப்படி இப்பிரச்சினையை எதிர்நோக்குவோம். குற்றப் பத்திரிகையில் பெயர் குறிப்பிட்டிருந்தால் குற்றவாளி என்று அர்த்தமில்லை என்று நிலைப்பாட்டை எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்பெக்ரம் குற்றப் பத்திரிகையில் கனி மொழியின் பெயர் சேர்க்கப்பட்டதனால் ரோஷமடைந்து மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் அது பரபரப்பான செய்தியாக இருக்குமே தவிர அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவித இலாபமும் கிடைக்காது. குற்றப் பத்திரிகையில் இருந்து கனிமொழியின் பெயரை தீர்ப்பதற்குரிய வழிவகை இது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் உணர்ந்துள்ளது.
இம்மாதம் 6 ஆம் திகதி கனிமொழியும் சரத்குமாரும் சி.பி.ஐ. முன்னிலையில் ஆஜராக வேண்டும். அப்போது விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா அல்லது கைது செய்யப்படுவார்களா என்று பதைபதைப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரான கட்சி என்பதை வெளிக்காட்டுவதற்காக கொமன்வெல்த் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு பின் அதிரடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகமும் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ராசாவையும் கனிமொழியையும் கை கழுவி விட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தனது முழு அழுத்தத்தையும் பிரயோகித்து நெருக்குதலைச் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சி, ஸ்பெக்ரம் விவகாரம் காரணமாக கனிமொழி கைது செய்யப்பட்டாலும் அதிரடியாக எதனையும் செய்ய முடியாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. தமிழகத் தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கும் அதுவரை பொறுமையைக் கடைப்பிடிக்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தற்காலிகமாக இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கையின் பிரகாரம் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். கனிமொழி மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியதால்தான் ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் கையில் எடுத்துள்ளது.


வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு01/05//11

No comments: