தமிழக ஆட்சிøயத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியின் சகவாசத்தால் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை விஜயகாந்துக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், சினிமாத்துறையில் அராஜகம், கட்டப் பஞ்சாயத்துப் போன்றவையே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டின்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியும் தோல்வியின் காரணிகளில் ஒன்று. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதையும் வாக்காளர்கள் தெளிவாகப் புரிய வைத்துள்ளனர்.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஐந்து வருடங்களாக ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியின் தாளத்துக்கு ஏற்ப ஆடி ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தபோதே திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக சிந்தித்துச் செயற்பட்டிருக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலவீனத்தைத் தனது பலமாக மாற்ற முயற்சி செய்த காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்து தானும் குழிக்குள் விழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவன், மணிசங்கர் அய்யர் போன்ற பெருந் தலைவர்கள் தோல்வியடைந்தனர். வெற்றியா தோல்வியா என்ற இழுபறியில் இருந்த சிதம்பரம் கடைசி நேரத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலின்போதே தனது பலவீனத்தை உணர்ந்து கூட்டணிக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் செயற்பட்டிருக்க வேண்டும். தமிழின உணர்வாளர்களின் பிரகாரம் காங்கிரஸ் கட்சிக்குப் பலத்த அடியை கொடுத்துள்ளது.
இலவசங்களும் சலுகைகளும் வெற்றியைத் தேடித் தரும் என்று கருணாநிதி மலைபோல நம்பியிருந்தார். 19 அமைச்சர்களைத் தோற்கடித்த தமிழக மக்கள் அரசின் மீதான தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை நம்பி வந்த சிறிய கட்சிகள் அனைத்தும் மண்ணைக் கௌவின. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சேர்ந்த சிறிய கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது.
ராகுல் காந்தியின் தலையீடு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த சரிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் ராகுல்காந்தி. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்களை வளர்த்தெடுக்க முயற்சி செய்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் இளைஞர் படை படுதோல்வியடைந்தது.
கருணாநிதியைக் கைவிட்டு விட்டு ஜெயலலிதாவுடன் கைகோர்க்க வேண்டும் என்று விரும்பிய காங்கிரஸ்காரர்கள் சட்டமன்றத் தோல்வியைத் தமக்குச் சாதகமாக்க விரும்புகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கூறிய சோனியா காந்தி ஜெயலலிதாவைத் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். ஜெயலலிதா சோனியா காந்தியுடன் இணைந்துவிடுவாரோ என்ற அச்சம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு ஸ்பெக்ரம், விலைவாசி உயர்வு, குடும்ப அசியல், மின்வெட்டு என்பன முக்கிய காரணம். இவை எதிலும் நேரடியாகச்சம்பந்தப்படாத காங்கிரஸின் தோல்விக்கு காங்கிரஸின் உள்ளே உள்ள போட்டியே பிரதான காரணம். 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே முக்கிய காரணம். முதலமைச்சராகப் பதவி ஏற்ற ஜெயலலிதா அதிரடியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். காவல்துறை அதிகாரிகளும் தலைமைச் செயலக அதிகாரிகளும் அதிரடியாக ம்õற்றப்பட்டுள்ளனர். ஆட்சியைப் பிடிக்கும் கட்சி முதலில் செய்வதையே முதலமைச்சர் ஜெயலலிதாவும் செய்துள்ளார். ஓமந்தூரர் அரசினர் கோட்டத்தில் இயங்கும் தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு இடம்மாற்றும் அவரது உத்தரவை தமிழகக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
ஆங்கிலேயர்களால் 1640 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித ஜோர்ஜ் கோட்டை சுமார் 500 ஆண்டுகளாக இக்கோட்டைகள் தமிழ்நாட்டின் அதிகார மையமாகச் செயற்படுகிறது. தலைமைச் செயலகமும் சட்ட சபையும் இயங்குவதற்கு இடவசதி போதாது என்பதால் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராணி மேரி கல்லூரி வளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அன்று அந்த முயற்சிக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. ஆட்சி மாறி கருணாநிதி முதல்வரானதும் ஓமந்தூர் அரசின் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம், சட்ட சபை என்பன அமைக்கப்பட்டன. 600 கோடி ரூபாவுக்கு மதிப்பிடப்பட்டு 1000 கோடி ரூபாவுக்கு கட்டி முடிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் இக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
புதிய தலைமைச் செயலகத்துக்கு போக மாட்டேன் என்று ஜெயலலிதா சபதம் செய்தார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே தலைமைச் செயலகத்தை அவசர அவசரமாக மாற்றுகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பெரு வெற்றியில் வடிவேல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளõர். அவரது பண்ணை வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் விஜயகாந்த் இருப்பதாக வடிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
அழகிரியின் கோட்டையான மதுரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீறு கொண்டெழுந்துள்ளது. அழகியிரின் கல்யாண மண்டபம் அழகிரியின் நெருங்கிய சகாவின் வீடு என்பனவற்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. பழிவாங்கும் படலம் மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. ஊழல் வழக்கு வருமானத்தை மீறிய சொத்துச் சேர்த்தது போன்ற வழக்குகளால் தமிழக அரசியல் பரபரப்பாகும் நிலை தூரத்தில் இல்லை.
கருணாநிதியை ஆட்சியில் இறக்கிவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கியுள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதாவை இறக்கிவிட்டு தான் முதல்வராகும் வரை அமைதி காக்கிறார் விஜயகாந்த்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு22/05//11
No comments:
Post a Comment