Monday, May 9, 2011

தலைவர்களைத் தடுமாறவைக்கும்கருத்துக்கணிப்புகள்

தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்த காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மிக நெருக்கமாகப் பழகத் தொடங்கி விட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். ஸ்பெக்ட்ரம், தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை ஆகியவற்றினால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சற்றுத் தூர விலகி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் நிலைமை இதற்கு எதிர்மாறாக உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது ஒன்றாகக் குழுமிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கட்சிகள் தமிழக சட்ட சபைத் தேர்தலின் பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாகத் திசை மாறி விட்டன. தேர்தல் நடைபெறும் வரை ஒன்றாக கூடிக் குதூகலித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அமைதியாகி விட்டன.
தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிவு பற்றிய கருத்துக் கணிப்புகள் எதிரும் புதிருமாக உள்ளன. வானிலை அறிக்கை போன்று அடிக்கடி மாறுகின்றன. தேர்தலுக்கு முன்னரான கருத்துக் கணிப்பில் கருணாநிதி தலைமையிலும், ஜெயலலிதாவின் தலைமையிலும் கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. தேர்தலுக்குப் பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகள் கருணாநிதிக்கு சாதகமாக வெளிவந்தன. கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லாத கருணாநிதி, தனக்கு விசுவாசமானவர்களின் மூலம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அந்தக் கருத்துக் கணிப்பு கருணாநிதிக்குச் சாதகமானதாக உள்ளது. வெற்றி பெறும் தொகுதி, தோல்வியடையும் தொகுதி, வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாத தொகுதி என்று மூன்று வகையாகப் பிரித்து நடைபெற்ற இக்கருத்துக் கணிப்பினால் கருணாநிதி உற்சாகமாக உள்ளார்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக நடந்து கொண்டது. அரசின் அதிகார துஷ்பிரயோகம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பண விநியோகம், அன்பளிப்புகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையினால் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் நினைத்தபடி செயற்பட முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அத்துமீறியுள்ளதாகக் கருணாநிதி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஜெயலலிதா பாராட்டினார். தேர்தல் ஆணையம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையகத்தைப் பற்றி காங்கிரஸ் விமர்சனம் எதனையும் முன் வைக்கவில்ø.
மற்றைய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் போது தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மிகக் கண்டிப்பாக நடந்ததாக அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் சிதம்பரத்தின் இக்குற்றச்சாட்டு கருணாநிதிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாதகமாகவும் தேர்தல் ஆணையம் நடந்துள்ளதாக கருணாநிதி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத் தேர்தல் முடிவை அறிவதற்கு மத்திய அரசும் ஆர்வமாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறினால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் நடைபெற்ற கருத்துக் கணிப்புகளில் பெருமளவு முரண்பாடு உள்ளது. கருத்துக் கணிப்புகள் பல சந்தர்ப்பங்களில் காலை வாரிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடம் ஏறும் என்றே பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையினால் கூட்டணி பெரு வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், முடிவு தலைகீழாக மாறியது.
மத்தியில் காங்கிரஸ் அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலை வெற்றியை உறுதி செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக் கட்சிகள் இருந்ததையும் இழந்தது கூட்டணியின் பலத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, கருத்துக் கணிப்பை திராவிட முன்னேற்றக் கழகம் நம்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணிக் கட்சிகளின் உதவி தேவைப்படும்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குவதற்கு முன் வர மாட்டார்கள். கூட்டணித் தலைவர்களுடனான உறவு ஜெயலலிதாவுக்கு என்றைக்குமே சுமுகமாக இருந்ததில்லை.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது ஜெயலலிதாவின் பெயரை விஜயகாந்தும் விஜயகாந்தின் பெயரை ஜெயலலிதாவும் உச்சரிக்கவில்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து கூட்டணி அமைப்பார்களா என்பது சந்தேகமே. தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா, போய் விட்டார். ஏனைய கூட்டணித் தலைவர்களும் தம் வழியில் சென்று விட்டனர். யாரும் ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை. தேர்தல் முடிவு சாதகமானால் இவர்கள் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுவார்கள். வெள்ளிக்கிழமையுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வந்து விடும். தேர்தல் முடிவு வெளியான பின்னர் கருத்துக் கணிப்புகளின் உண்மை தெரிந்து விடும்.

வர்மாசூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு08/05//11

No comments: