Tuesday, April 1, 2014

அரசியல் அநாதையான காங்கிரஸ்


தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று ஆரம்பமானது. ஏப்ரல் 5ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் ஐந்து முனைப்போட்டி என்று ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன. ஆறாவது முனையை ஆம் ஆத்மி கட்சி திறந்துள்ளது. டில்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை படுதோல்வியடையச் செய்து பாரதீய ஜனதாக்கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பறித்தெடுத்த  ஆம் ஆத்மியைப் பற்றி தமிழக அரசியல்வாதிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பத்திரிகையாளர் ஞானி, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமைவகித்த உதயகுமார் ஆகியோர்  ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிடுகின்றனர். இந்தியாவில் ஆம் ஆத்மிக்கு உள்ள செல்வாக்கு சரிந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசியலிலும் கால்  ஊன்ற ஆம் ஆத்மி முயற்சி  செய்துவருகின்றது.

அரசியலில் சரித்திரம் படைக்கப் போவதாக சபதமிட்டு அரசியல் நீரோட்டத்தில் குதித்த விஜயகாந்த் கரையேறுவதற்காக பாரதீய ஜனதாக்கட்சி எனும் துடுப்பைப் பற்றிப் பிடித்துள்ளார். தமிழகத்தில் செல்வாக்கு மிக்க நடிகரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் எனப் பல இடங்களில் இருந்தும் அழுத்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு அரசியலுக்கும் எனக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேயுடன் இணைந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் அற்ற அரசியல் செய்யப் போவதாக பகிரங்கமாக அறிக்கைவிடுத்து டில்லி முதல்வராக அரியணை ஏறினார். ஒருநாள் முதல்வன் போன்று அதிரடியாகப் பல திட்டங்களை முன்னெடுத்த கெஜ்ரிவால் அரசியலைப்  புரிந்துகொண்ட பின்னர் டில்லி முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்தார்.
தமிழக அரசியலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஆம் ஆத்மி தமிழகத்தில் காலூன்ற  முயற்சி செய்துவருகிறது. பழம் பெரும் அரசியல் பெருச்சாளிகள் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டனர். இவர்களுடன் ஆம் ஆத்மியும் தனிக்கட்சியாக அரசியல் அரங்கில் கால் பதித்துள்ளது. அரவணைப்போர்  யாரும் இல்லாது தேர்தலில் குதித்துள்ளது ஆம் ஆத்மி.


தமிழக அரசியலில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அரசியல் அநாதையாக ஏங்கித் தவிக்கிறது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது இலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்றது. காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியுடன் தமிழ் உணர்வாளர்கள் களம் இறங்கினர். காங்கிஸுடன் கூட்டணி சேர்ந்த கருணாநிதிக்கு  எதிராகவும், 2009ஆம் ஆண்டு பலமாக எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூரண ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.
இந்தியாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், இலங்கைப் பிரச்சினையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்தது. ஆனால், காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டது. தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தனர். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதிவிட்டு தனது பணி முடிந்தது என்றுவிட்டுவிட்டார்.

இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக காங்கிரஸ்   அரசு நடந்துகொண்டதனால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது வெற்றிபெற முடியாது என உணர்ந்த கருணாநிதி கூட்டணியிலிருந்து வெளியேறினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையை இழந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தனித்து தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத் தேர்தலில் சகல கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கூட்டணி சேர யாரும் முன்வராததனால் வேறுவழி இன்றி தனித்து தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ் கட்சி.

தேர்தல் நடைபெறும் முன்பே தோல்வியை உறுதிசெய்த காங்கிரஸ் கட்சி, ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணைக்கு நடுநிலை வகித்ததனால்  வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பே தோல்வியை உறுதிப்படுத்தியது. இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என் எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் நடுநிலை வகித்து தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிமிர்த்த முடியாது என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ப.சிதம்பரம் என்ன செய்வதென்று  தெரியாது புலம்பத் தொடங்கிவிட்டார்.

சோனியா, மன்மோகன்சிங் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர் சிதம்பரம். இந்தியா நடுநிலை வகித்ததை அறிந்ததும் தப்பு நடந்துவிட்டது என உணருகிறார். ஜெனிவாவில் உள்ள அதிகாரிகளின் முடிவினால் தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் மிகவும் அவமானமான முறையில் தோல்வியடையும் என மறைமுகமான ஒப்புக்கொண்டுள்ளார் அமைச்சர் ப.சிதம்பரம்.
காங்கிஸ் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறியபோது வீரவனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் படிப்படியாக உண்மையை உணர்ந்து கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மீண்டும் கூட்டுச் சேர வேண்டும் என டில்லியிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்தனர் ஸ்டாலினின் பிடிவாதமே திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்வதற்குத் தடையாக உள்ளது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை தோன்றினால் ஆதரவளிக்கலாம் என்று கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.  ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதனால் இறுதிக்கட்ட வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டதாக கவலைப்படுகிறார்.காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்திருக்கலாம் தானே எனக் கருதியவர்களும் இப்போது வாய்மூடி மௌனமாகிவிட்டனர். ஸ்டாலினின் பிடிவாதம் வெற்றியளித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அழகிரி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  எதிரான கட்சிகள் எல்லாம் அழகிரிக்கு வலை வீசுகின்றன. கருணாநிதியையும், ஸ்டாலினையும் அறவே பிடிக்காத வைகோ வீடுதேடிச் சென்று அழகிரியைச் சந்தித்துள்ளார். மதுரைப் பகுதியில் அழகிரிக்கு செல்வாக்கு உள்ளது. அழகிரியை வளைத்தால் வாக்கு பெறலாம் என்று கருதும் தலைவர்கள் அவரைத் தினமும் சந்திக்கின்றனர்.
கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி  வைக்கப்பட்டிருந்த அழகிரியை ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது திராவிட முன்னேற்றக் கழகம். அழகிரியின் அதிரடி அவரின் அரசியல் வாழ்வுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கிடையேயான  உட் பூசலால் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. விஜயகாந்தின் வேட்பாளர்களை  ஆதரித்து தேர்தல் பிரசாரம்  செய்யப் போவதில்லை என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சிக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்துடன் கூட்டணி சேரப் போவதில்லை என ராமதஸ் பகிரங்கமாக அறிவித்தார். அவரின் மகன் அன்புமணியின் விருப்பத்துக்காக பாதி மனதுடன் கூட்டணிசேர சம்மதித்தார் ராமதாஸ். அன்புமணிக்காக விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்
.
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் என ராமதாஸால் அறிவிக்கப்பட்டவர்கள் சோர்ந்து போயுள்ளனர். தேர்தல் கூட்டணிக்கு முன்பாக சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒரு சில வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் டாக்டர் ராமதாஸ்.  அவர்களில் பலருக்கு தொகுதி இல்லாமல் போனது.  ராமதாஸ்  அறிவித்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மனமுடைந்தவர்கள் கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்துக்கும் , ராமதாஸுக்கும் வட மாநிலங்களில் செல்வாக்கு உள்ளது. இருவரும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தால்தான் வெற்றி பெறலாம். ஒருவர் சறுக்கினால்  தோல்வி  நிச்சயம். இந்நிலையில் கீரியும் பாம்பும் போல இருவரும் எதிரும் புதிருமாக இருப்பதனால் வெற்றி கேள்விக்குரியது.

வைகோவுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்குள்ளது. ராஜீவின் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி  வைகோவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறாராம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த வைகோ இம்மு எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.
ஆகையால் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்யத் தயாராகிவிட்டார் வைகோ.
வர்மா 
சுடர் ஒளி 30/03/14 

No comments: