திராவிட
முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கான
சாதக சமிக்ஞையை வைகோ வெளியிட்டதனால் திராவிட முன்னேற்றக் கழகம்
உற்சாகமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம்
வெளியேறியபின் மெகா கூட்டணி அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியது. அது எதிர்பார்த்த
கட்சிகள் இணையாமையால் படுதோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக்கழகம் மட்டுமல்லாது
பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியும் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மண்னைக்
கெளவியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து தேர்தலில் போட்டியிட்டு
வெற்றிவாகை சூடியது.
திராவிட
முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைப் புறந்தள்ளி
மூன்றாவது அணி தலையெடுக்க முடியாதென்பது யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப்
புரிந்தும் புரியாதமாதிரி பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில் அமைந்த கூட்டணி தமிழகத்தில் பலத்த
அடிவாங்கியது.
இந்தியாவில்
வீசிய காங்கிரஸுக்கு எதிரான பாரதீய ஜனதா அலை தமிழகத்திலும் பலமாக வீசும் என்ற
எதிர்பார்ப்பு தேர்தல் முடிவை புரட்டிப்போட்டது. பாரதீய ஜனதாக்கட்சியில் இருந்து
ராமதாஸும் வைகோவும் வெளியேறினர். மகன் அன்புமணி
எம்பியான சந்தோஷத்துடன் கூட்டணியை முறித்தார் ராமதாஸ். வைகோ வழமைபோன்று வெறும்
கையுடன் வெளியேறினார். கூட்டணியில் இருப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அரசியல்
நடத்துகின்றார் விஜயகாந்த்.
தமிழக அரசியல் தலைவர்களிடம் அரசியல் நாகரிகம்
என்பது மருந்துக்கும் கிடையாது. ஒரு அரசியல் கட்சித்தலைவர் இறந்துவிட்டால் எதிரணி
அரசியல் தலைவர் கலந்துகொள்ளமுடியாத இருண்ட
அரசியல் கலாசாரம் தமிழகத்தில் உள்ளது. திருமண வைபவம் என்றால் அழைப்பிதழ்
அனுப்பமாட்டார்கள். தனது பேரனின் திருமணத்துக்கு எதிர்க்கட்சித்தலைவர்கள்
அனைவரையும் அழைத்துள்ளார் கலைஞர் கருணாநிதி. கருணாநிதியின் உத்தரவுக்கமைய
எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரையும் வீடு தேடிச்சென்று அழைப்பிதழைக் கையில்
கொடுத்தார் ஸ்டாலின்.
மூத்த அரசியல்
தலைவர் என்பதனால் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறார் கருணாநிதி.அரசியல்வாதிகளும்
விமர்சகர்களும் இதனை அரசியல் கண்ணாடிமூலம் பார்த்தனர். மெகா கூட்டணி
அமைக்க கருணாநிதி திட்டம் போடுகிறார் என தலைப்புச்செய்திகள் வெளியாகின.விஜயகாந்த்
தனது வீட்டுக்கு அழைக்காமல் அலுவலகத்தில் சந்தித்தார். ராமதாஸும் அன்புமணியும் ஸ்டாலினை சந்திப்பதை தவிர்க்க முயன்றனர்.
வில்லங்கமான செய்தி வெளியானதால் சந்தித்தனர். ஸ்டாலின் தன்னைச் சந்தித்து
திருமண அழைப்பிதழைக்கொடுத்ததை ஆச்சரியத்துடன் டுவிட்டரில் பகிர்ந்தார்
சுப்பிரமணியன்சுவாமி. இதேவேளை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்கள்
எவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. கருணாநிதி வீட்டுத்திருமண
அழைப்பிதழ் பற்றி நாகரிகமாகவும் அநாகரிகமாகவும் விமர்சனங்கள்
வெளியாகின. பழுத்த அரசியல்வாதியான கருணாநிதி அதனைக்ண்டுகொள்ளவில்லை.
தமிழக சட்டசபைத்தேர்தலுக்கு
இன்னமும் ஒரு வருடம் உள்ளது. இந்தநிலையில் விமர்சகர்கள் எதிர்வு கூறியதைப்போன்று
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சாத்தியம் பற்றி வைகோ சாதகசமிக்ஞை
காட்டி உள்ளார். இதனால் இரண்டு கட்சித்தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வைகோவின்
வளர்ச்சி ஸ்டாலினுக்கு போட்டியாக இருந்தமையினால் அவர் 1993 ஆம் ஆண்டு திராவிட் முன்னேற்றக் கழகத்தில்
இருந்து வெளியேற்றப்பட்டார். கருணாநிதியைக் கொல்வதற்கு புலிகளுடன் சேர்ந்து வைகோ
திட்டம் தீட்டியதற்காகவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காரணம்
கூறப்பட்டது. அக்காரணம் நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை. திராவிட
முன்னேற்றக்கழகத்தில் இருந்து வெளியேறிய
வைகோ, மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். வைகோவுடன் பலர்
வெளியேறியதால் அவருடைய கட்சி பலமடைந்தது. காலப்போக்கில் அரசியல் சதுரங்கத்தில்
வெற்றி பெறமுடியாததனால் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்துடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மாறிமாறி கூட்டணி
சேர்ந்தது.
அரசியல் களத்தில் தனித்து நின்று வெற்றி
பெறமுடியாது என்பதை உணர்ந்த வைகோ பலமான கட்சிகளின் கூட்டணியை நாடினார்.
சிலசமயங்களில் அவருக்கு வெற்றியைக்கொடுத்த கூட்டணி பல சமயங்களில்
காலை வாரியது. திராவிட முன்னேற்றக்க் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு
மாற்றீடாக மூன்றாவது அணி அமைக்கலாம் என்ற நம்பிக்கை கடந்த நாடாளுமன்றத்தேர்தலுடன் தவிடுபொடியாகியதால்
மீண்டும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் பக்கம் சாயத்தயாராகி விட்டார்
வைகோ.1993 ஆம் ஆன்டு பிரச்சினைக்குப்
பின்னர் வைகோவின் வீட்டுக்கு ஸ்டாலின் சென்றதனால் இது சாதகமானது.
கருணாநிதி தலைமையிலான் மெகாகூட்டணியின் முதல்அடியை வைகோ எடுத்து
வைத்துள்ளார். ஜெயலலிதாவின் தலைமையிலான கட்சியை பலவீனப்படுத்துவதற்கு
கருணாநிதி தலைமையில் கூட்டணி அமைப்பதுதான் சரி என்பதை காலம் கடந்து வைகோ
உணர்ந்துள்ளார்.பலவீனமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் சற்று
தெம்பாக உள்ளது. நாடாளுமன்றத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக் கழகம் பலத்த அடி வாங்கினாலும் அதனுடைய வாக்கு வங்கி
தொய்யவில்லை. வைகோவின் அரசியல் கணக்கை ஏனைய தலைவர்களும் புரிந்து கொண்டால்
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்.
No comments:
Post a Comment