Sunday, December 20, 2015

வடகத்திருடன்



ஐயோ ஐயய்யோ என்ரை லச்சுமியை காணவில்லை என்ற  பாறியின் அவலக்குரலுடன் வேம்படிக்கிராமம்துயிலெழுந்தது.  அவளுக்கு தகப்பன் வைத்த பெயர் பார்வதி.  காலப்போக்கில் பாறுவதியாகி வயதானபின் பாறி ஆச்சியாகச்சுருங்கிவிட்டது. அந்தக் கிராமத்தில் உள்ள பாதிக்கும் அதிகமானவர்கள் பாறியின் வீட்டில் குழுமி விட்டனர். லச்சுமி என்று பாறியினால் செல்லமாக அழைக்கப்பட்ட பசுமாட்டைக் காணவில்லை. தாயைப்பிரிந்த கன்று புதியவர்களைக் கண்டு மிரண்டது.
 கணவன் இறந்தபின்பு தனிக்கட்டையான பார்வதிக்கு  வருமானம் கொடுத்தவைகளில் பசுமாடும் அடக்கம். கணவன் உயிரோடு இருக்கும்வரை பார்வதிக்கு கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாது. கணவன் இறந்தபின்னர்தான் பிள்ளைகள் இல்லாத கொடுமையை உணர்ந்தாள். தோட்டம்,வயல் என்பன இருந்தபடியால் வருமானத்துக்கு குறை இல்லை. சிறிய வருமானத்தைக்கொடுத்த பசுமாடு களவு போய்விட்டது. பசுமாட்டை மிருகம் என்று பார்வதி நினைக்கவில்லை. தன்னுடைய ஒரு உறவாகவே அதனை நினைத்து வளர்த்தாள். அவளது தனிமையைப்போக்க லச்சுமி உதவியது. பசுமாட்டை யார் திருடியது எனத்தெரியாது அனைவரும் கூடிக்குசுகுசுத்தனர்.
வீட்டுக்குளே போன  பார்வதி, ஐயோ என்ரை வடகம் போச்சே எனப்பெருங்குரலெடுத்து குழறினாள்.  வெளியில் நின்ற சிலர் உள்ளே ஓடினார்கள். வடகம் வைத்த சாடி வெறுமையாக இருந்தது. கொஞ்ச வடகம் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
வேறை  என்ன களவு போனதென பாரணை  ஆச்சி ஒரு பெண்மணி கூறினாள். காசு, நகை எதுவும் பாறி ஆச்சியிடம் இல்லை. கத்தி,கோடாலி,மண்வெட்டி, உரல்,உலக்கை போன்றன. அந்தந்த இடங்களிலே  இருந்தன. பாவம் இந்தக்கிழவியின் வீட்டிலே களவெடுத்திருக்கிறானே எனப்பரிதாபப்பட்டனர். வேப்ப மரங்கள் அதிகமாக இருந்தபடியால் வீம்படி என்ற பெயர்  அந்தக்கிராமத்துக்கு நிலைத்துவிட்டது. வேப்பம் பூக்களை சேகரித்தி வடகம் செய்து விற்பனை செய்வது அந்தக் கிராமத்து கைத்தொழில்களின் ஒன்று. பாறி ஆச்சிக்காக அனைவரும் பரிதாபப்பட்டனர்.
  வேம்படிக்கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. ஆகையினால்  பொலிஸில்   அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்தனர். பொலிஸை எதிர்பார்த்து   கிராமத்து மக்கள் காத்திருந்தனர். பிற்பகல் நான்கு மணிக்கு புழுதியைக்கிளப்பியபடி பொலிஸ் வண்டி கிராமத்தினுள் நுழைந்தது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் அதன் பின்னால் போட்டிக்கு ஓடினார்கள். பசுமாடு நின்ற இடம் உட்பட வீடு முழுவதையும் பொலிஸார் சோதனை செய்தனர். பொலிஸார் சோதனை செய்யும்போது என்ரை வடகம் போச்சே என பாறி ஆச்சி அழுதார்.
பொலிஸ் இன்ஸ்பெக்ரர் பாறி ஆச்சியிடம் விசாரணை செய்தார்.
எவளவு காலமாக மாடு வளக்கிறது?.
பத்து வருசமாக
ராத்திரி நாய் குலைச்சு சத்தம் கேட்டதா?
இல்லை  
மாடு கத்தினதா?
இல்லை
யாரிலையும் சந்தேகமா?
இல்லை
கள்ளன் இந்தக்கிராமத்தில் உள்ளவனாக இருக்க வேண்டும் என இன்ஸ்பெக்ரர் கூறினார். அதை ஊரவர்கள் ஏற்கவில்லை. வடகம் களவு போனதே என பாறி ஆச்சி புலம்பியதைக்கேட்ட இன்ஸ்பெக்ரர் வடகத்தைப்பற்றி விசாரித்தார். வடகம் என்றால் என்ன. அதை எப்படிச்செய்வது என ஊரவர்கள் விளக்கினார்கள். வடகத்தைப்பார்க்க வேண்டும் என இன்ஸ்பெக்ரர் கூறியதால் பாறி ஆச்சி வடகத்தைக் காட்டினாள். வேறுயாரிடம் வடகம் இருக்கிறதென இன்ஸ்பெக்ரர் விசாரித்தார். அந்தக்கிராமத்தில் முப்பது குடும்பங்கள் உள்ளன. இருபது குடும்பங்களிடம் வடகம் இருப்பதாகக் கிராமத்தவர்கள் கூறினார்கள்.
பொலிஸாருடன்  ஆலோசனை செய்த இன்ஸ்பெக்ரர் வடகத்தைக் அனைவருக்கும் கட்டளை இட்டார். எல்லோரும் தமது வடகத்தைக் கொண்டுவந்து காட்டினார்கள். வடக்கத்தை மணந்து பார்த்து பரிசோதித்த இன்ஸ்பெக்ரர் இருபது பேரின் வடகத்தில் இருந்து பத்துபத்து வடகங்களை தனித்தனி பைகளில் போட்டு  பெயரை எழுதி பொதி செய்தார். பாறி ஆச்சியின் வடகத்தையும் தனியாக எடுத்தார்.

மாட்டுக்கள்ளனைப் பிடிக்க வந்த இன்ஸ்பெக்ரர் வடகத்தை ச்சுருட்டிக்கொண்டு போய்விட்டார் என கிராமத்தவர்கள் நினைத்தார்கள். பாறி ஆச்சியின் பசுமாடு களவு போய் ஐந்து நாட்களாகிவிட்டது. பொலிஸுக்குப்   போகாமல் விட்டிருந்தால் வடகமாவது மிஞ்சி இருக்கும் என வடகக்தைப் பறி கொடுத்தவர்கள் வருந்தினார்கள்.
பாறி ஆச்சியின் பசுமாடு களவுபோய் பத்து நாட்களாகிவிட்டது. கள்ளனைப்பற்றிய  ஒருதகவலும் ஒரு தகவலும் வெளிவரவில்லை. பாறி ஆச்சியைக்காண்பவர்கள் பசுமாட்டைப் பற்றிக் கேட்டு அவளது கவலையை  மேலும்கூட்டினர். பசுமாட்டுடன் வடகம் களவு போனதையும் பெரும் கவலையுடன் பாறி ஆச்சி கூறுவாள்.  அவளின் வடகம் மிகவும் சுவையானது. மாலை நான்கு மணியளவில் புழுதியைக்கிளப்பிக் வேம்படிக்கிராமத்தினுள் நுழைந்த ஜீப் பாறி ஆச்சியின் வீட்டின் முன் நின்றது. ஜீப்பைத்துரத்திசென்ற சிறுவர்களும் முச்சிரைக்க நின்றனர்.

வேம்படிக்கிராமத்தினுள்  ஜீப் நுழைவதைக்கண்ட  ஊரவர்களும் பாறி ஆச்சியின் வீட்டின் முன்னாள் குழுமிவிட்டனர். சத்தம் கேட்ட  பாறி ஆச்சி வீட்டுக்கு வெளியே வந்தார். ஜீப்பின் முன் ஆசனத்தில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்ரர்  பாறி ஆச்சியைப்பார்த்து சிரித்தார். கலவரத்துடன் இன்ஸ்பெக்ரரைப் பார்த்தார் பாறி ஆச்சி.
ஆச்சி கள்ளனைப்பிடிச்சாச்சு என்றார் இன்ஸ்பெக்ரர்.பாறி ஆச்சியின் முகம் மலர்ந்தது. உண்மையிலேயே கள்ளன் பிடிபட்டு விட்டானா என உள்  மனம் சந்தேகப்பட்டது. அங்கு நின்ற அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.திருடன் யாரென அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர்.இன்ஸ்பெக்ரர் கையைக்காட்டியதும் ஜீப்பினுள் இருந்ததிருடனை  பொலிஸார் இறக்கினர். திருடனைக்கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஆறுமுகம் என சிறுவர்கள் சத்தம் போட்டனர்.

ஆறுமுகம் இப்படிச்செய்வான் என யாரும் நம்பவில்லை. பாறி ஆச்சியின் பசுமாட்டையும்,வடகத்தையும் திருடியது தான்தான் என்று ஆறுமுகம் ஒப்புக்கொண்டான். ஆறுமுகம் எப்படி அகப்பட்டான் என்பதை  அறியாது அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இன்ஸ்பெக்ரரிடம் எப்படிக்கேட்பது என்று தெரியாது தவித்தனர்.
என்னாலை நம்பேலாமல் கிடக்கு. ஆறுமுகம் தான் கள்ளன் எண்டு எப்பிடி கண்டு பிடிச்சியள்?துணிவுடன் இன்ஸ்பெக்ரரிடம் கேட்டாள் பாறி ஆச்சி.
உங்கடை வடகங்களை கொழும்புக்கு அனுப்பினேன். ஆறுமுகம் வீட்டிலை ஆச்சியின் வடகம் இருந்தது. ஆளைபிடிச்சு விசாரிச்சம் உண்மையை ஒப்புக்கொண்டான். என்றார் இன்ஸ்பெக்டர் .

   சூரன்.ஏ.ரவிவர்மா

யாதும் 2014

தமிழ்த்தந்தி 21/12/15

No comments: