Tuesday, December 22, 2015

பீகாரின் பாதையில் மேற்கு வங்கம் மம்தா, சோனியா கூட்டணி


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை என்ற உண்மை பீகார் சட்டசபைத் தேர்தலில் நிரூபனமானது. மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலிலும் அந்த உண்மை அரங்கேறும்  நிலை தோன்றி உள்ளது.  பாரதீய ஜனதாக் கட்சியைத்   தோற்கடிப்பதற்காக  இருபத்தைந்து ஆண்டுகால அரசியல் பகையை மறந்து நிதிஷ்குமாரும் லல்லுவும் ஒன்றிணைந்தனர். இவர்களுடன் சோனியாவும் கைகோர்த்ததனால் பாரதீய ஜனதாவின் வெற்றிமாயை அகன்றது. மேற்கு வங்கத்தில் இருதுருவங்களாக இருக்கும் மம்தா பார்னஜியும்  சோனியாவும் இணையும் காலம் தோன்றி உள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல்காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மம்தா பார்னஜி  முதலமைச்சராக  இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த மம்தாவின் தலைமையில்  திரிணாமூல்காங்கிரஸ்  உருவாக்கி ஆட்சியைப் பிடித்தது. அன்றிலிருந்து காங்கிரஸ் கட்சியின்  பகையாளியாக மாறினார் மம்தா. அவரின் செல்வாக்கினால்  மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் செல்வாக்கு  குறைந்தது. மாநிலத்தில் மட்டுமல்லாது மத்திய அரசிலும் காங்கிரஸுக்கு எதிராகவே மம்தா காய்நகர்த்தினார்.  கடந்த மாதம் நடந்த பீகார் சட்டமன்றத்தேர்தலில் இந்தக் காய் நகர்த்தல் முடிவுக்கு வந்தது. பாரதீய  ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்தபோது சோனியாவும் மம்தாவும் ஓரணியில் இருந்தனர். மேற்கு வங்கத்திலும் ஓரணியில் இருப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன.
அரசியல் களத்தில் பகையாளியாக இருக்கும் சோனியாவை கடந்த வாரம் மம்தா சந்தித்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சோனியா ராகுல் ஆகியோர் மீதான நேசன் ஹெரால்ட் குற்றச்சாட்டினால்  இரண்டு நாட்கள் லோக் சபை கூடமுடியாத நிலை இருந்தது. காங்கிரஸ் கட்சியைவிட திரிணாமூல்காங்கிரஸ்  கட்சி உறுப்பினர்களே  மிக அதிகளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். லோக்சபையில் பாரதீய ஜனதாவைவிட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொகை அதிகம். ஆகையினால் பாரதீய ஜனதா லோக் சபையில் அதிகாரம் காட்ட முடியாது.காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் போது மெளநாமாக இருக்கும் திரிணாமூல்காங்கிரஸ் உறுப்பினர்கள் இம்முறை வெகுண்டெழுந்து தமது எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல்காங்கிரஸ் காங்கிரஸ் மிகப்பலத்துடன் இருக்கிறது. இடது சாரிக்கட்சிகள் ஒன்றிணைந்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கின்றன. மம்தாவின் குறைகளை பட்டியலிட்டு ஆட்சியைப்பிடிக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். மம்தாவின் மீது  வெறுப்புள்ளவர்களை வளைத்துப்போட்டு தேர்தலைச்   சந்திக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். இடதுசாரிகளின்  வியூகத்தை உடைப்பதற்காக தனது அரசியல் எதிரியான    சோனியாவின் கையைப் பிடிக்க மம்தா தயாராக உள்ளார்.

சாரதா  சிட் பண்ட ஊழல், நேசன் ஹெரால்ட் ஆகிய வழ்க்குகளில் காங்கிரஸும் திரிணாமூல்காங்கிஸும் சிக்கி உள்ளன. இந்த இரண்டு வழக்குகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால்  சோடிக்கப்பட்டவை என  இரண்டு கட்சிகளும் கூறுகின்றன.இதன் காரணமாக பாரதீய ஜனதாவுக்கு எதிராக இரண்டு கட்சித்தலைவர்களும் ஒன்றிணையத் தயாராகிவிட்டனர். மேற்கு வங்கத்தில் பாரதீய ஜனதா வலுவானதாக இல்லை. மம்தாவும் சோனியாவும் இணைந்தால் பாரதீய ஜனதா செல்லாக்காசாகிவிடும். இடதுசாரிகளும் எதிர்பார்த்த  வெற்றியைப்பெறமுடியாது.
லல்லுவும் நிதிஷ்குமாரும் இணைந்து பீகாரில்  தொகுதிப்பங்கீடு,முதல்வர் வேட்பாளர் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று மம்தாவும் சோனியாவும்  மேற்கு வங்கத்தில் முதல்வர்  வேட்பாளர், தொகுதிப்பங்கீடு என்பனவற்றை வெளிப்படையாக அறிவித்து போட்டியிட்டால் வெற்றிபெறலாம். லோக்சபையில் பாரதீய ஜனதாவின் பலத்தை  மேலும் குறைப்பதே இவர்களின் நோக்கம்.
மேற்கு வங்கத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மம்தாவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த இணைப்பை அவர்கள் விரும்பவில்லை. இடதுசாரிகளுடன் கூட்டணி சேர்ந்து மம்தாவை வீழ்த்த வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இடதுசாரிகளுடன் கூட்டணிசேர விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மீது இடதுசாரித் தலைவர்கள் சுமத்தும் ஊழல்  குற்றச்சாட்டு இந்தக் கூட்டணிக்குத் தடையாக உள்ளது.


கேரளாவின்  முன்னால் முதல்வர் ஆர்.சங்கரின் சிலை திறப்புவிழாவில்  இன்றைய முதல்வர் உம்மன் சாண்டியை கலந்துகொள்ள வேண்டாம் என ஏற்பாட்டாளர் தொலைபேசியில் தெரிவித்ததனால் கீறல மக்கள் கொதித்துப்போய் உள்ளனர் கேரளாவின் கொல்லத்தில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு சார்பில் கேரள முன்னாள் முதல்வர் ஆர். சங்கரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்று சிலையை திறந்து திறந்து வைத்தார். இந்த விழா அழைப்பிதலில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் முதல்வர் உம்மன் சாண்டியை தொடர்புகொண்ட   இந்த விழாவை நடத்தும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவர் வெள்ளாபள்ளி நடேசன், முதல்வர் உம்மன்சாண்டியை தொடர்பு கொண்டு சிலை திறப்பு விழாவுக்கு நீங்கள் வர வேண்டாம் என முகத்தில் அடித்தாற்போல கூறியிருக்கிறார். இதனால் உம்மன்சாண்டி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இது கேரளா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தவர்தான் இந்த வெள்ளாபள்ளி நடேசன்.
இது அப்பட்டமான் அரசியல் பழிவாங்கல் என கேரள மக்கள் நினைக்கின்றனர். இந்த அநாகரிகமான  செயலுக்கு பிரதமர் மோடியும் உடந்தை என்பதால் மக்களின் கோபம் இரட்டிப்பாக உள்ளது. வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக காய் நகேத்திவரும் வேளையில் தென்மாநிலத்திலும் மோடிக்கு எதிராக மக்கள் திரும்பும் நடவடிக்கையை பாரதீய ஜனதாவினரே  செய்து வருகின்றனர்.  சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட மோடி நடந்த சம்பவத்துக்காக போது மக்களிடம் மன்னிப்புகோரினார்.  மோடியின் மன்னிப்பு கோரிக்கையை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று டில்லி அரசைக்கைப்ப்றிய முதல்வர்  கெஜ்ரிவாலின்   முதன்மைச்  செயலரின் அலுவலகம் கடந்த செவ்வாய்கிழமை சி.பி.ஐயினால் சீல்வைக்கப்பட்டது.  கொம்பியூட்டர் வாங்கியதில் ஊழல்  செய்ததாக முதன்மைச் செயலர் ராஜேந்திரகுமார் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. அலுவலகத்திலும் அவரதுவீட்டிலும் சி.பி.ஐ ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. ஊழல் குற்றச்சாட்டில்  முதலமைச்சரின் முதன்மைச் செயலரின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீந்திரகுமாரின் வீட்டிலிருந்து  2.4 இலட்சம் ருபா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதற்குரிய கணக்கு அவரிடம் இல்லையெனவும் சில அசையாச்சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இதே குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஜி.கே.நந்தா அன்பவரின் வீட்டிலிருந்து 10.5 இலட்சம்  ரூபா கைப்பற்றப்பட்டதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது. ராஜேந்திரகுமாரின்  அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைப் பற்றிய விபரங்களை சி.பி.ஐ வெளியிடவில்லை. ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டத்தில் ராஜேந்திரகுமார்  சில நிறுவனங்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
டில்லி மாநில அரசின் இன்னொரு முதன்மைச் செயலரான  சஞ்சை பிரதாப் சிங்க கடந்தவாரம் சி.பி.ஐயினால் கைது செய்யப்பட்டார், இரண்டு இலட்சம்  ரூபா இலஞ்சம் பெற்றதால் அவரை கைது செய்ததாகக்கூறிய சி.பி.ஐ மேலும் சில அதிகாரிகளைக் கைது செய்யபபோவதாக அறிவித்தது.

. கடந்த பத்து மாதங்களில் ஆம் ஆத்மி கட்சியில் மூன்று சட்டசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்சியான பாரதீய ஜனதாவின் அரசியல்  பழிவாங்கல் என கெஜ்ரிவால்  கூறியுள்ளார்.  கெஜ்ரிவாலுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் எந்தக் காலத்திலும் ஒத்து வராது.ஊழல் குற்றச்  சாட்டை இருதரப்புமே அரசியலாகப் பார்க்கின்றன. இதன்காரனமாக் டில்லி அரசியல் சூடாகியுள்ளது.


No comments: