Monday, May 23, 2016

வரலாறு காணாத வெற்றிபெற்ற ஜெயலலிதா


தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வரலாறு காணாத பெரு வெற்றி பெற்ற ஜெயலலிதா ஆறாவது முறையாக முதலமைச்சராக  பதவி ஏற்க உள்ளார். தமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில் ஜெயலலிதாவின் வெற்றி  கேள்விக்குறியானது.  ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற விளம்பரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தின.  தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகளும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளும் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக இருந்தன. இவை எல்லாவற்றையும் தாண்டி ஜெயலலிதாதான் முதலமைச்சர் என்று தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  மாற்றுக்கட்சி தமிழகத்தில் இல்லை என்பதை வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் தவிர ஏனைய தலைவர்கள் அனைஅவரும் படு தோல்வியடைந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகள் தான் தமிழகத்தில் உள்ளன. ஜெயலலிதாவின் விருப்பத்துடன் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்ட மூவர் வெற்ரி பெற்றுள்ளனர். கருணாநிதியின் தயவில் காங்கிரஸ் எட்டு தொகுதிகளிலும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதொகுயிலும் வெற்றி பெற்றன.

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 தொகுதிகலில்வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக அட்சி அமைக்கிறது. 98 தொகுதிகளில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக்கழகம் பலமான எதிர்க் கட்சியாக  இருக்கப்போகிறது. அடுத்த முதலமைச்சர் என்ற பந்தாவுடன் வலம் வந்த அன்புமணி தோல்வியடைந்தார்.  ஜெயலலிதாவின் புண்ணியத்தால் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், தனக்கு அதிக செல்வக்கு இருப்பதாக கனவுகண்டு கட்டுப்பனத்தையும் இழந்து மூன்றாவது இடத்துக்குத்தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது    ஜெயலலிதாவின்கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கருணாநிதியின்கூட்டணிக்கு 39.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கர பந்தாவுடன் வலம் வந்த விஜயகாந்த்தின் கட்சி  கேவலமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியை விட பாரதீய ஜனதாக் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது

 தேசிய முற்போக்குத்  திராவிடக் கட்சித் தலைவ்ரும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் கட்டுப்பணம் இழந்தார்.
பென்னாகரத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்  முதல்வர் வேட்பாளர் அன்புமணி தோல்வியுற்றார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திருச்செந்துாரில்போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை, ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிஇ ஈரோடு கிழக்கில் போட்டியிட்ட மக்கள் தே.மு.தி.க.,தலைவர் சந்திரகுமார்,

ராமநாதபுரத்தில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார் கடலுாரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பெரம்பலுாரில் போட்டியிட்ட சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி ஆகியோர் தோல்வியுற்றனர்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொது செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தவிர மற்ற கட்சி தலைவர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர்.

'தோல்வியை தழுவுவோம்' என்ற பயத்தில் தான் ம.தி.மு.கஇ பொது செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டியில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கி விட்டார் என்று தி.மு.க.இவினர் கூறியதை மெய்யாக்கும் வகையில் அவர் போட்டியிடவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
2016 சட்டசபைத் தேர்தல் இடதுசாரிக் கட்சிகளுக்கு பெரிய சோதனையாக அமைந்துள்ளது. இதுவரை இடதுசாரிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத எந்த சட்டசபையும் தமிழகத்தில் அமைந்ததில்லை. ஆனால் முதல் முறையாக இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளே இல்லாத சட்டசபையை தமிழகம் கண்டுள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இடதுசாரிகள் இடம் பெறாத தேர்தலே கிடையாது. அந்த அளவுக்கு நீக்கமற இருந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பலரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் வெறும் 87 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். இதேபோல் 13 பேர் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். நெல்லை தொகுதியில் திமுகவின் ஏ.எல்.எஸ். லட்சுமணன், அதிமுகவின் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டனர். இதில் திமுகவின் லட்சுமணனிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார் நயினார் நாகேந்திரன். தென்காசியில் அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் காங்கிரஸின் பழனி நாடாரும் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளரிடம் 462 வாக்குகளில் பழனிநாடார் தோற்றுப் போனார். திருவிடைமருதூர் திமுகவின் கோவி செழியனும் அதிமுகவின் சேட்டுவும் மோதினர். இதில் செழியனிடம் 532 வாக்குகளில் தோல்வி அடைந்தார் சேட்டு. திருமயம் தொகுதியில் திமுகவின் ரகுபதியும் அதிமுகவும் வைரமுத்துவும் களம் கண்டனர். ரகுபதியிடம் வைரமுத்து 766 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். திருப்போரூர் தொகுதியில் அதிமுகவின் கோதண்டபாணியிடம் 950 வாக்குகளில் தோற்றுப் போனார் திமுகவின் விஸ்வநாதன். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுகவின் பி. வெற்றிவேலிடம் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் 519 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். பேராவூரணியில் அதிமுகவின் கோவிந்தராசுவிடம் திமுகவின் அசோக் குமார் 995 வாக்குகளில் தோல்வி அடைந்தார். பரமத்தி வேலூரில் திமுகவின் கே.எஸ். மூர்த்தியிடம் 378 வாக்குகளில் தோல்வி அடைந்தார் அதிமுகவின் ஆர். ராஜேந்திரன். கோவில்பட்டியில் அதிமுகவின் கடம்பூர் ராஜூவிடம் திமுகவின் ஏ சுப்பிரமணியன் 428 வாக்குகளில் தோற்றார். கரூரில் அதிமுகவின் விஜயபாஸ்கரிடம் திமுகவின் பேங்க் சுப்பிரமணியன் 441 வாக்குகளில் வீழ்ந்தார். காட்டுமன்னார்கோவிலில் வெறும் 87 வாக்குகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக வேட்பாளரிடம் தோற்றார். பர்கூர் தொகுதியில் அதிமுகவின் ராஜேந்திரனிடம் திமுகவின் கோவிந்தராசன் 982 வாக்குகளில் தோற்றுப் போனார் செய்யூரில் திமுகவின் ஆர்.டி. அரசுவிடம் அதிமுகவின் முனுசாமி வெறும் 304 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார்.

தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. என்ன விசேஷம் என்றால் நீண்ட காலமாக அரசியல் களத்தில் ஏதாவது ஒரு வகையில் சக்தியாக திகழ்ந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரையும், புதிதாய்ப் பிறந்த தமிழ் மாநில காங்கிரஸையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி. இக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் செய்த தீவிரப் பிரச்சாரம், இவரது கட்சியினர் நடத்தி வந்த தீவிர களப் பணி, இக்கட்சியின் வித்தியாசமான தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றின் காரணாமாக இக்கட்சியும் மக்களின் பார்வையில் விழுந்துள்ளது.  சீமான் போட்டியிட்ட தொகுதியில் அவர் ஐந்தாவது இடத்தையே பிடித்தார்.


  ஜெயலலிதா ஆர். கே.நகர் இடைத்தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனை விட 39,537 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற ஜெயலலிதாவிற்கு இம்முறை குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.   இம்முறை திமுக சார்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதோடு பலமுனை போட்டி நிலவியதும் காரணமாக உள்ளது.   ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழனை போட்டியிட்டார். தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை வேந்தரான வசந்தி தேவி போட்டியிட்டார்.  
   இதுவரை 9 முறை சட்டசபைத் தேர்தல்களில் ஜெயலலிதா போட்டியிட்டுள்ளார். தற்போது 7வது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். ஒருமுறை அவர் தோல்வியடைந்துள்ளார்.  

2015ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கட்டுப்பணத்தை  இழந்திருந்தனர். ஆனால், இம்முறை அவரின் வாக்கு வித்தியாசம் பாதியாகக் குறைந்துள்ளது. தனது முந்தைய சாதனையை தக்க வைக்க அவர் தவறியுள்ளார். காரணம் என்ன? கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. சிபிஎம் வேட்பாளர் மகேந்திரன் மட்டுமே போட்டியிட்டார். எனவே ஓட்டுக்கள் அனைத்து மொத்தமாக ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. இம்முறை திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவியது. எனவே வாக்குகள் அனைத்து பிரிந்ததே ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசம் குறைய காரணமாக அமைந்துள்ளது.

திருவாரூரில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட கருணாநிதி  அதிக வாக்கு வித்தியாசத்தி;ல் வெற்றி பெற்றி வரலாற்றுச் சாதனை செய்துள்ளார். சொந்த ஊரான திருவாரூரில்  இரண்டு முறைபோட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றும் முதல்வராக முடியவில்லை. அதே போல தான் ஸ்ரீ ரங்கம் எந்து பூர்வீகம் என கூறி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்ரி பெற்றும் முதல்வராக முடியவில்லை. சொந்த ஊர் இருவரின் காலையும் வாரிவிட்டது.

திருமாளவன், விஜயகாந்த், ஸ்டாலின் பெயர்களைக் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தி வாக்காளர்களை குழப்பியுள்ளனர் எதிர்கட்சியினர். சுயேட்சை திருமாவளவனால் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இதேபோல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக விஜயகாந்த் என்ற பெயரில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த தொகுதியில் 3 விஜய்காந்த்களும் டெபாசிட் இழந்தனர். இதே தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு பெயரில் சுயேட்சை வேட்பாளர் பாலு என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்த சுயேட்சை வேட்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளனர். தேர்தலில் மக்களை குழப்ப, பிரதான வேட்பாளர் பெயரில் இன்னொரு வேட்பாளரை நிறுத்துவதென்பது கட்சிகள் கையாளும் ஒரு யுக்தி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட, அன்புமணி பெயரில் அன்புமணியை எதிர்த்து இன்னொரு வேட்பாளர் நின்றார். ஆனால், இதுவரை இதுபோன்ற யுக்தி வாக்கு சதவீதத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்ததில்லை. ஆனால், இம்முறை ஒரு வேட்பாளரின் வெற்றியையே அது பறித்துவிட்டது.
 
ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடன் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தமது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளனர். தமது செல்வாக்குத் தெரியாமல்  அதிக தொகுதிகளுக்கு ஆசைப்பட்ட தலவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்று தமிழக மக்கள் புரிய வைத்துள்ளனர்.

No comments: