தமிழக அரசியல் களத்தில் அண்னா திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடான கட்சி
எதுவும் இல்லை என்பதை தமிழக மக்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு
அனுப்பி வைப்போம் எனச் சபதம் எடுத்து மூன்றாவது அணியை அமைத்த தலைவர்கள் அனைவரும்
மண்னைக் கெளவியுள்ளனர். திராவிட முன்னேற்றக்கழகத்துடன் விஜயகாந்த்
இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் ஜெயலலிதா வெற்றி பெற முடியாது என்பது
வெளிப்படையான உண்மை. இந்த யதார்த்தத்தைப் பொய்யாக்க வைகோ எடுத்த பெருமெடுப்பிலான
முயற்சி எதிர் பார்த்தது போலவே தோல்வியடைந்தது.
கருணாநிதியும் விஜயகாந்தும் சேரக்கூடாது என்பதே ஜெயலலிதாவின்
விருப்பம். ஜெயலலிதாவின் விருப்பத்தை வைகோ கனகச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்..
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என்ற தமிழக
அரசியல் தலைவர்களின் விருப்பத்தை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர். முதலமைச்சர்
வேட்பாளராகக் களம் இறங்கிய அன்புமணியும் விஜயகாந்தும் படு தோல்வியடைந்தனர்,
சினிமாவில் இருந்து அரசியலில் கால் பதித்த விஜயகாந்த், தமிழக அரசியலில் அசைக்க
முடியாத சக்தியாக உருவெடுத்தார். கடந்த சட்ட மன்றத் தொடரில் எதிர்க்கட்சித் தலவராக
வலம் வந்த விஜயகாந்த் இப்போது நடந்த தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்து
படு தோல்வியடந்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக மிகப்பிரமாண்டமான எதிர்ப்பு அலை எதுவும்
இருக்கவில்லை. ஆனால்,ஜெயலலிதாவுக்கு எதிரான சிறியளவிலான எதிர்ப்பு இருந்தது, அந்த
எதிர்ப்பை ஒரிடத்தில் குவித்து வெற்றிக்கான வியூகத்தை வகுக்க எதிர்க்கட்சித்
தலைவர்கள் தவறிவிட்டனர். வைகோவால் வழிநடத்தப்பட்ட மக்கள் நகக் கூட்டணி கருணாநிதியை
மூர்க்கமாக எதிர்த்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமான விமர்சனங்களை மக்கள்
நலக் கூட்டணி முன் வைக்கவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழல் கட்சியே மக்கள் நலக்
கூட்டணி என்ற கருத்து இருந்தது, தேர்தல் முடிவு அதனை மெய்ப்பிப்பது போல
இருக்கிறது. வைகோவும் திருமாவளவனும் இடது சாரிகளுடன் சேர்ந்து
தேர்தலுக்கு முகம் கொடுக்கப் போவதாக அறிவித்தபோது எந்தவித
சந்தேகமும் தோன்றவில்லை. அப்போது மக்கள் நலக் கூட்டணியின் மீது மிகப் பெரிய
எதிர்பார்ப்பு இருந்தது. தமிழக முதலமைச்சராக வைகோவா இடதுசாரித் தலைவர்களா
என்ற கேள்வி எழுந்த போது தலித்துக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என வைகோவின் குரல் ஒலித்தது. வைகோவின் விருப்பத்துக்கு பலரும் ஆதரவு
தெரிவித்தனர். கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதலமைச்சராவதற்கு இரத்தம் சிந்தி வேலை
செய்த வைகோ, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று விஜயகாந்தை
அறிமுகப்படுத்தியபோது தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.
இராஜதந்திரம் மிக்க மூத்த அரசில்வாதியான வைகோவின் அறிவிப்பு மக்கள்
நலக் கூட்டணிக்கு ஆப்பு வைத்தது. தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக்
கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அசைக்க முடியாத வாக்கு வங்கி உள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் அவர்களது வாக்கு வங்கி
பெரியளவில் சரிந்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகத்துக்கு ஐந்து சதவீத வாக்கு அதிகமாக உள்ளது. விஜயகாந்தின் மூலம்
அந்த ஐந்து சதவீத வாக்கை சரிக்கட்டலாம் என கருணாநிதி கணக்குப் போட்டார்.
கருணாநிதியின் கணக்கை இடையில் புகுந்த வைகோ குழப்பி அடித்து
விட்டார்.
மூன்றாவது அணி என்ற பெயரில் கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்
பெரிய கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிட்டன. தமிழக வாக்காளர்கள் மூன்றாவது
அணியை அப்போதே நிராகரித்து விட்டனர். மாயையில் மக்களைக் குழப்பினர். மக்கள் நலக் கூட்டணியின் மாயையில் சிக்கிய வாக்காளர்களினால் கருணாநிதியின் சாதனை தகர்ந்தது.
மின்வெட்டு, மழைவெள்ள அனர்த்தம், மதுபானசாலை திறப்பு போன்ற வற்றை முன்னிறுத்தி
திராவிட முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்தது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் வெற்றி
பெறலாம்என்ற மனநிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது.
எம்.ஜி.ஆருக்குப்பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஜெயலலிதா
முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். ஜெயலலிதாவின் இந்த வரலாற்று வெற்றி வெறும்
ஒருசதவீதத்தால் கிடைத்துள்ளது. அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு சற்று
சரிவடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் குறந்தளவு வாக்குகளினால்
தோல்வியடந்துள்ளது. 200அல்லது,300 வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழக
வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். மிகப் பிரபலமான திருமாவளவன் 87 வாக்கு களினால்
தோல்வியடந்தார். திரப்பட நடிகரான கருணாஸ் வெற்றி பெற்றுவிட்டார். கருணாஸ் பிரபலமான
நடிகர் அல்ல. சரத்குமார், விஜயகாந்த் ஆகியோருடன் ஒப்பிடுகையில் கருணாஸின் திரப்பட
வாழ்க்கை பூஜ்ஜியம். ஜெயலலிதாவின் செல்வாக்கினால்தான் கருணாஸ் வெற்றி பெற்றார்.
பழைய பெருச்சாளிகளை ஜெயலலிதா ஓரம் கட்டியதும் அவருடைய வெற்றிக்கு
ஒரு காரணம். புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தார். அவர்
எதிர் பார்த்ததுபோல புதியவர்கள் வெற்றி பெற்றனர். கருணாநிதியால் துணிச்சலுடன்
பழையவர்களை ஓரம் கட்ட முடியவில்லை. ஒதுங்கிய பழையவர்கள் தமது வாரிசை களம்
இறக்கினார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்..
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்
172 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் 89 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 83
தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்திடம் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் இம்முறை நடைபெற்ற
தேர்தலைலிஒப்பீட்டளவில் வெற்றி பெற்றுள்ளது. இதே வெற்றியை அதனுடைய கூட்டணிக்கட்சிகள் பெறவில்லை. அடித்துப் பிடித்து அதிக தொகுதிகளைப்
பெற்ற கங்கிரஸ் வெறும் எட்டுத் தொகுதிகளில் தான்
வெற்றி பெற்றது. விஜயகாந்திடம் இருந்து பிரிந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் அதிக
முக்கியத்துவம் கொடுத்துவிட்டார். இதுவும் அவரது கட்சியின் தோல்விக்கு காரணமானது.
ஜெயலலிதாவின் செல்வாக்கினால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை ஸ்டாலின்
உணரத் தவறிவிட்டார்.
தமிழக அரசியலில் மூன்றாவது அணி எனக் கூறிக்கொண்டு யாரும் அரசியல் நடத்த முடியாது என்பதை வாக்காளர்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.
ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டும் என்றால் கருணாநிதியுடன் இணைய வேண்டும். இல்லை
என்றால் ஜெயலலிதாவிடம் சரணடைய வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு
இவர்கள் அரசியல் செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
வர்மா
துளியம்.
கொம்
No comments:
Post a Comment