Monday, May 23, 2016

ஹோலி ரெய்னா பலப்பரீட்சை


ஒன்பதாவது ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுக்கள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் (18 புள்ளி), பெங்களூரு (16 புள்ளி), ஐதராபாத் (16 புள்ளி), கொல்கத்தா (16 புள்ளி) ஆகிய அணிகள்பிளே-ஆப்சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளி), டெல்லி டேர்டெவில்ஸ் (14 புள்ளி), புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் (10 புள்ளி), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (8 புள்ளி) அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறின. 
 பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன. 

தொடக்கத்தில் சறுக்கிய விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் 7 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு விசுவரூபம் எடுத்த அந்த அணி அடுத்த 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றி கண்டதுடன், அடுத்த சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது. இதுவரை 216 பவுண்டரிகளும், 122 சிக்சர்களும் நொறுக்கி வியப்பூட்டியிருக்கிறது. 

கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், ஷேன் வாட்சன் உள்ளிட்டோர் பெங்களூரு அணியின் முதுகெலும்பாக தாங்கிப்பிடிக்கிறார்கள். குறிப்பாக உச்சக்கட்ட பார்மில் உள்ள விராட் கோலி 4 சதம், 6 அரைசதம் உள்பட 919 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம் அவர் ஆயிரம் ரன்களை கடந்து புதிய வரலாறு படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதே போல் ஊதா நிற தொப்பியை தன்வசப்படுத்தியிருக்கும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும் (19 விக்கெட்) பெங்களூரு அணியில் கவனிக்கத்தக்க வீரராக இருக்கிறார். 

இப்படி எல்லா வகையிலும் உயரிய நிலையை அடைந்திருக்கும் பெங்களூரு அணி, சொந்த ஊரில் அசத்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் தீவிரமாக இருக்கிறது. 
அதே சமயம் பெங்களூருக்கு நிகராக சரிசம பலத்துடன் திகழும் அணிகளில் குஜராத் லயன்சும் ஒன்று. கேப்டன் சுரேஷ் ரெய்னா (3 அரைசதத்துடன் 397 ரன்), பிரன்டன் மெக்கல்லம் (321 ரன்), ஆரோன் பிஞ்ச் (339 ரன்), வெய்ன் சுமித் (250 ரன் மற்றும் 7 விக்கெட்), வெய்ன் பிராவோ, தினேஷ் கார்த்திக் என்று குஜராத் அணியிலும் பேட்டிங் சூரர்களின் பட்டியல் நீளுகிறது. 

இந்த .பி.எல்.-ல் அறிமுக அணியாக நுழைந்த குஜராத் லயன்ஸ் பெரிய அளவில் இடையூறு இன்றிபிளே-ஆப்சுற்றுக்கு வந்துள்ளது. அதே உத்வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடர கங்கணம் கட்டி நிற்பார்கள். 

மொத்தத்தில் இரு வலுவான அணிகள் கோதாவில் இறங்குவதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அதுவும் ஆட்டம் நடக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானம் முழுமையாக பேட்டிங்குக்கு சாதகமானது. அதனால்மெகாரன்வேட்டையை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே இந்த சீசனில் இவ்விரு அணிகளும் சந்தித்த 2 லீக்கில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் விளையாடும். 


டோனியின் தளபதிகளான ஹோலியும் ரெய்னாவும் தமது பலத்தை வெளிக்காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். சென்னை அணியின் தீவிர  ரசிகர்கள் ரெய்னாவுக்கு ஆதரவாக உள்ளனர். ஐபிஎல்லில் சென்னை ஆதிக்கத்தை ரெய்னா நினைவு படுத்துகிறார்.

No comments: