Tuesday, May 31, 2016

அதிகாரப் போட்டியில் சிக்கிய மாகாணசபைகள்!


மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைகளின் அதிகாரங்களை முடக்குவதற்கென மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்தான் ஆளுநர். இந்திய அரசாங்கத்தில் இதுவரை காலமும் நிலவிய இந்த நிர்வாகச் சிக்கல் இப்போ இலங்கையிலும் அரங்கேறத் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தின் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கும் ஆளுநர்களின் செயற்பாடுகளினால் இந்திய அரசியலில் பல நிர்வாகச் சிக்கல்கள் உருவாகின. ஆளுநர்களின் பரிந்துரையினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநில அரசுகளின் பதவிக்காலம் இடை நடுவில் பிடுங்கப்பட்டன. இந்தியாவின் ஆலோசனையுடன் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் மாகாணசபையிலும் ஆளுநரின் அதிகாரம் அதிகளவில் இருக்கிறது.
வடமாகாணசபை இல்லாதபோது ஆளுநரின் அதிகாரம் பற்றி எதுவுமே தெரியவில்லை. மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது பதவியில் இருந்த முதலமைச்சர்கள் அனைவரும் தலையாட்டிப் பொம்மைகளாகவே இருந்தனர். அப்போது ஆளுநரைப் பற்றிய செய்திகள் பெரியளவில் வெளிவரவில்லை. முன்னாள் இராணுவ அதிகாரிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஏனைய மாகாணங்களுக்கு முன்னாள் அரசியல்வாதிகள் ஆளுநர்களாக நியமனம் பெற்றார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருவித இராணுவக் கட்டமைப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். இராணுவ உடையைக் களைந்து ஆளுநர் உடைக்கு மாறிய அதிகாரிகளின் மனநிலை இராணுவக் கட்டமைப்பில் இருந்து விலகவில்லை. இதனால் சிவில் நிர்வாகத்தினுள் இராணுவத்தின் கை ஓங்கியது.
இராணுவத்துக்குக் கட்டைளை இடும் அதிகாரிகளால் சிவில் நிர்வாகத்துக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. வடமாகாணசபைத் தேர்தலின் போது ஆளுனரை மாற்றுவது முக்கிய இடம் வகுத்தது. ஆளுனரை மாற்றுவதற்கு வடமாகாண மக்கள் பெருவிருப்பத்துடன் வாக்களித்தார்கள். அன்றைய ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய ஆளுநர் தொடர்ந்தும் பதவியில் நீடித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இழுபறியினால் நிர்வகச்சிக்கல் உருவானது. வடமாகாண மக்களுடனும் வடமாகாண அரசுடனும் இணக்கமாகச் செயல்பட வேண்டிய ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முக்கியமான சில முடிவுகளை இழுத்தடித்தார். நல்லிணக்கம் என்ற பெயருடன் புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் ஆளுநராகக் கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி மாற்றப்பட்டார். முதலில் பள்ளிக்கர வந்தார் இப்போது ரெஜினோல்ட் கூரே வடமாகாண ஆளுநராகக் கடமையாற்றுகிறார். இவர் மேல்மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர். அப்போது இவருக்கும் ஆளுநருக்கும் இடையில் எதுவித முரண்பாடும் தோன்றவில்லை.
வடமாகாண சபையின் ஆளுநர் மாற்றப்பட்டாரே தவிர ஆளுனரின் மேலாதிக்கம் மறையவில்லை. அவரும் தன்னிச்சையாக பல காரியங்களை தொடருகிறார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இது பற்றி ஜனாதிபதி மைத்திரியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மிகப்பிரமாண்டமான புத்தர் சிலைகள் காடு அழிப்பு என்பன தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை எதுவுமே ஆளுநரின் கண்களுக்குத் தெரிவதில்லை. வடமாகாண முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடமாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை என்பதுபோலவே கிழக்கு மாகாண சபை செயற்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான பிரச்சினை இன்று பூதாகரமாக வெடித்துக் கிளம்பி உள்ளது. கடற்படயினர் சம்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் உதவி வழங்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அமெரிக்கத் தூதுவர், ஆளுநர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நசீர் அஹமட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த வைபவத்துக்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியையும் ஆளுநரையும் திட்டித் தீர்த்து தனது கோபத்தை வெளிக்காட்டினார்.
இனவாதத்தை மிகைப்படுத்துபவர்களுக்கு இந்தச்சம்பவம் தேனாக அமைந்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக இனவாத சக்திகள் ஒன்று கூடியுள்ளன. மாகாண சபையின் அதிகாரங்கள் எல்லாவற்றையும் காலில் மிதித்து கிழக்குமாகாண முதலமைச்சருக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள கடற்படை அதிகாரியா முஸ்லிம் முதலமைச்சரா மேலானவர் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள படையினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் மக்களுக்கு படையினர் உதவி செய்கிறார்கள் என்ற கோதாவில் சில வைபவங்களில் படையினரின் தலையீடு அதிகமாக உள்ளது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக வடமாகாண சபை ஆளுநருடன் சில சமயங்களில் முரண்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் காரசாரமாக தனது எதிர்ப்பை வெளிக்காட்டி உள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கட்சி வாய் மூடி மெளனமாக இருக்கிறது. அது முதலமைச்சரை பலிக்கடா ஆக்கப் போகிறதா அல்லது ஆதரவுக்கரம் நீட்டப்போகிறதா என்பதற்கான விடை அது வாயைத் திறக்கும் போது தெரியவரும்.
துளியம்.கொம்

No comments: