திராவிட முன்னேற்றக் கழகம அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளுக்கு
தமிழகத்தில் இடம் இல்லை என தமிழக சட்டசபைத் தேர்தலின் மூலம் மக்கள்
தெளிவாக உணர்த்திவிட்டனர். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பப் போவதாக சபதம் எடுத்து தலைப்பா
கட்டிக்கொண்டு புறப்பட்ட வைகோ சத்தம் சந்தடி இன்றி அடங்கிவிட்டார். இரண்டு
திராவிடக் கட்சிகளும் ஐம்பது வருடங்களாக ஆட்சி
செய்து தமிழகத்தைச் சீரழித்து விட்டன. திராவிடக்
கட்சிகளின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற மையத் தோற்றத்துடன்
பிரசாரம் செய்த கட்சிகள் அனைத்தும் மூக்குடைபட்டுநிற்கின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியை மட்டும் நம்பி
தேர்தலில் தனித்துக் களம் இறங்கிய ஜெயலலிதா வரலாற்றுச் சாதனையுடன் ஆட்சியைத்
தக்கவைத்துள்ளார்.வாசன் , வேல்முருகன்
போன்ற அரசியல் தலைவர்கள் ஜெயலலிதாவின் நிழலில் தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள்.
அவர்களை ஜெயலலிதா திரும்பியும்பர்க்கவில்லை. தேர்தல் திகதி அறிவித்தபின்னர்
கட்சியை ஆரம்பித்த கருணாஸையும்
வாக்குவங்கி, மக்கள் மத்தியில் செல்வாக்கு போன்றவை இல்லாத கட்சித்
தலைவர்களையும் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.ஐந்து
வருடங்களாக ஜெயலலிதாவின் காலடியில் கிடந்துவிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்
வெளியேறிய சரத்குமாருக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கொடுத்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஜெயலலிதா
தொடர்ந்தும் முதல்வரானாலும் அவருடைய பழைய அமைச்சர்கள் சிலர் தோல்வியடைந்தனர்.
ஜெயலலிதாவுக்கு எதிரான அலையில் சிக்கி சரத்குமாரும் தோல்வியடைந்தார்.ஜெயலலிதா
கொடுத்த சந்தர்ப்பத்தினால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். விஜயகாந்தை
எதிர்க்கட்சித் தலைவராக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குவங்கிதான்
அரசியலில் அரிவரி படிக்க முயலும் கருணாஸை வெற்றி பெறச்செய்தது.
அசுர பலத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி
அமைத்துள்ளது. கடந்த தேர்தலின் போது
படு தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவர்
அந்தஸ்த்தை இழந்த திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதைய தேர்தலில் அதிகளவு தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக
மிளிர்கிறது. மக்கள் நலக் கூட்டணி என்ற பலமான சக்தியால் திராவிட முன்னேற்றக் கழகம்
மண் கெளவப்போகிறது என்ற மாயையை உடைத்து
தோல்வியையும் வெற்றியாக நினைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட
முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கினால் காங்கிரஸ் கட்சியும் இந்தியன் முஸ்லிம்
யூனியனும் வெற்றி பெற்றன.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களில் பலர் சொற்ப வாக்கு
வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.வாக்குகள் என்னும் போது முன்னணியில் இருந்தவர்கள்
இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தனர். ஜெயலலிதா தொடர்ந்தும் பதவியில் இருக்கக்கூடாது
என்று விரும்பிய தலைவர்கள் ஒற்றுமையாக
தேர்தலில் போட்டியிடாததும் திராவிட
முன்னேற்றக் கழக வேட்பளர்களை சிலரின் தோல்விக்கு கட்சியில் உள்ளவர்களின்
குழிபறிப்பும் ஒருகாரணம் மீனாலோகு என்ற பெண் வேட்பாளர் தனக்கு கட்சியினரால்
ஏற்பட்ட அவமானங்களையும் ஒற்றுமை இன்மையையும் கருணாநிதியின் முன்னால் சொன்னபோது
வாய்விட்டு அழுதார். அவரின் கதையைக் கேட்ட கருணாநிதி கண்கலங்கினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்குக் காரணமானவர்களை
களை எடுத்தால் அடுத்த தேர்தலில் வெற்றி
பெறலாம். இல்லையேல் இதேபோன்ற காலைவாரும் காட்சிகள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்க
முடியாது. ஒருவர் தப்பு செய்தால் அவரை அகற்றுவது ஜெயலலிதாவின் பாணி. தப்புச்
செய்தவருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவது கருணாநிதியின் கொள்கை. ஜெயலலிதாவின்
அதிரடி முடிவினால் தப்புச் செய்வதற்கு தயங்குவார்கள். கருணாநிதியின்
நடவடிக்கையினால் தப்புசெய்பவர்கள் உற்சாகமாகி விடுவார்கள். திராவிட முன்னேற்றக்
கழகத்தவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டிருந்தால் சிலவேளை கருணாநிதி முதலமைச்சராகி
இருப்பார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்திருந்தும்
காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. 65 தொகுதிகள் வேண்டும் என அடம்
பிடித்த காங்கிரஸ் இறுதியில் 41 தொகுதிகளுடன்
திருப்தியடைந்தது. எட்டு தொகுதிகளில்
மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அக்
கட்சியில் உள்ள கோஷ்டி மோதலே காரணம். சிதம்பரம் போன்றவர்கள் முழுமூச்சுடன்
பிரசாரம் செய்யவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம்
என்று குற்றம் சாட்டபடுகிறது. தமிழக காங்கிரஸ் பிரமுகர்களுடன் செயற்படாது
இளங்கோவன் தனிச்சையாக எடுத்த முடிவுகள்தான் தோல்விக்கு முக்கிய காரணம்.
மக்கள் நலக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்ற
கோஷம் வெறும் வாய்ச்சவடாலில் முடிவடைந்தது. ஒற்றுமையாக நின்று புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்த மக்கள் நலக்
கூட்டணித் தலைவர்கள் ஒற்றுமையாகப்
பிரசாரம் செய்யவில்லை. மக்கள் நலக்
கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோது வந்து குதித்த விஜயகாந்தால்
வெற்றித் தேவதை காததூரம் ஓடிவிட்டாள். மக்கள் நலக் கூட்டணியை விரும்பியவர்கள்
விஜயகாந்தின் வருகையால் மனம் மாறிவிட்டனர். தேர்தல் தோல்விக்குப் பின்னர் மக்கள்
நலக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாகக் கூடி தோல்விபற்றி ஆராயவில்லை. பணநாயகம் அரச இயந்திரம் வெற்றி பெற்றதென தனித் தனியாக
அறிக்கை விட்டனர்.
தேர்தலில் தோல்வியடைவோம் என்பதை தேர்தலுக்கு முன்பே
உணர்ந்ததாக வைகோவும் திருமாவளவனும் அறிவித்து தொண்டர்களுக்கு அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் மக்கள் நலக் கூட்டணிக்கு இருந்த
வரவேற்பு பிரசாரத்தின் போது மங்கிவிட்டது.
இவர்களின் பிரசாரமும் தேர்தல் அறிக்கைகளும் மக்களைக் கவரவில்லை. ஜெயலலிதாவையும்
கருணாநிதியையும் எதிர்க்க வேண்டும் என்பதில் கூட்டுச்சேர்ந்தவர்கள் தேர்தலில்
வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கவில்லை.
பட்டாளி மக்கள் கட்சி அரசியல் கட்சி அல்ல, வன்னியரின்
கட்சிதான் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. தமிழகத் தேர்தலைப்பற்றி யாரும்
சிந்திக்க முன்பே முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரசரத்தை ஆரம்பித்த ராமதாஸ் தோல்வியை ஒப்புக்கொள்ள
மறுக்கிறார். சினிமாவைக் கைவிட்டுவிட்டு அரசியலுக்கு
வந்த சீமானுக்கும் இனி வேறுவழி இல்லை.
இருவரும் தோல்வியில் இருந்து படம் படிக்கவில்லை.
தேர்தலில் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழக
வேட்பாளர்கள் எவரும் கட்டுப்பணத்தை இழக்கவில்லை. 174 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம்
போட்டியிட்டது. தோல்வியில் கிடைத்த
வெற்றியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் இதனைக் கருதுகிறது.அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் இரண்டு தொகுதிகளில் கட்டுப்பணத்தை இழந்தது. சீமானின் நாம்
தமிழர் கட்சி 234 தொகுதிகளில்
போட்டியிட்டு சகல தொகுதிகளிலும்
கட்டுப்பணத்தைப் பறிகொடுத்தது. 104 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்தின் கட்சி ஒரே ஒரு
தொகுதியில் மட்டும் கட்டுப்பணத்தைத் திரும்பப்பெற்றது. தலைவர் விஜயகாந்தும்
கட்டுப்பணத்தைப் பறிகொடுத்தார்.25 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யுனிஸ்ட் கட்சி சகல
தொகுதிகளிலும் கட்டுப் பணத்தை இழந்தது. 27 தொகுதிகளில்
போட்டியிட்ட வைகோவின் கட்சி இரண்டு தொகுதிகளில் கட்டுப்பணத்தை திரும்பப்பெற்றது. 29
தொகுதிகளில் போட்டியிட்ட வாசனின் கட்சி 27
தொகுதிகளிலும் 25 தொகுதிகளில் போட்டியிட்ட
திருமாவளவனின் கட்சி 22 தொகுதிகளிலும்
கட்டுப்பணத்தை இழந்தன. 234 தொகுதிகளில்
போட்டியிட்ட 234 தொகுதிகளில் போட்டியிட்ட
பட்டாளி மக்கள் கட்சி 212 தொகுதிகளில்
கட்டுப்பணத்தை பறிகொடுத்தது.
மக்கள் நலக் கூட்டணி தொடருமா என்பதை தலைவர்கள் எவரும்
அறிவிக்கவில்லை. உள்ளூராட்சித் தேர்தலின் போது தோல்வியடைந்த தலைவர்கள் மீண்டும்
தலை எடுப்பார்கள்.
வர்மா
No comments:
Post a Comment