அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ஜெயலலிதா.
ஜெயலலிதா தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எழுதப்படாதவிதி. ஜெயலலிதா
என்ற பெரு விருட்சத்தின் கீழேதான் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் உயிர் வாழ்கிறது. ஜெயலலிதா விரும்புவதை
மட்டும் செய்பவர்கள் தான் அங்கே நிலைத்துக நிற்கமுடியும். எதிர் பாராத நேரத்தில்
திடீரென உயர் பதவிகள் தேடிவரும் அதே போன்று திடீரென பதவியில் இருந்து தூக்கி
எறியப்படுவார்கள். ஜெயலலிதாவின் மனதிலே என்ன இருக்கிறதென்பது யாருக்கும் புரியாது. தமக்கான
நல்ல காலம் வரும் வரை அனைவரும் அமைதியாக இருப்பார்கள்.
ஜெயலலிதாவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து
வணங்குவது, அவருடைய காருக்கு கூழைக்கும்பிடு போடுவது, அவர் பறக்கும் ஹெலியைப் பார்த்து முதுகு கூனி
வணங்குவது தான் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தவர்களின் தலையாய பணி.
அப்படிப்பட்டவ்ர்களின் மத்தியிலே மிகத் துணிச்சலாக ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம்
சுமத்தி உள்ளார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பாவை தூத்துக்குடி மேயராக்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மீதான விசுவாசம் அவரை நாடாளுமன்ற
உறுப்பினராக்கியது. ஜெயலலிதாவுக்கு மிகப் பிடித்தமான பெயர் சசிகலா. உடன்
பிறவாசகோதரியானசசிகலா போன்றே சசிகலா புஷ்பாவும் ஜெயலலிதாவின் மனதிலே இடம்
பிடித்தார்.
அரசியலிலே நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை
என்பது வெளிபடையானது. அதே போன்றுதான் ஜெயலலிதாவின் மனதிலே யாருக்கும்
நிரந்தர இடம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உச்சத்தில் இருக்கும் ஒருவர் என்றாவது ஒரு நாள்
குப்புறவிழுவார் என்பதை சசிகலா புஷ்பா உணரத்தவறியதன் பலனை இப்போது அனுபவிக்கிறார். தமிழகத்திலும்
டில்லியிலும் இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களின் சகல அசைவுகளும்
ஜெயலலிதாவின் கண்களில் இருந்து தப்பமுடியாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற
உறுப்பினரான சகிகலா புஷ்பாவும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினரான
திருச்சி சிவாவும் குடித்தனம் நடத்துவது போல வெளியான புகைப்படம் பகிரங்கத்துக்கு
வந்தபோது சசிகலா புஷ்பாவின் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எதுவித ஆர்ப்பட்டமும் இல்லாது அச்சம்பவம்
மறக்கடிக்கப்பட்டது.
அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் சசிகலா புஷ்பாவும்
திருச்சி சிவாவும் ஒன்றாகக் குடித்தனம் நடத்துவதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட
முன்னேற்றக் கழகமும் கண்டும் காணாதிருந்தது. மேலிடத்தின் அனுமதியுடன் தான் இது
நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது.போயஸ் காடனின் முக்கியஸ்தரான பிலாலுக்கு சசிக்லா
புஷ்பா கேக் ஊட்டிவிடும் படங்களும்வெளியாகி பரபரப்பானது.ஆனால் உரிய சந்தர்ப்பம்
வரும்வரை ஜெயலலிதா காத்திருந்தது இப்போது புரிந்துள்ளது. சாதாரண பள்ளி ஆசிரியையாக
வாழ்க்கையை ஆரம்பித்த சசிகலா புஷ்பா மிகக் குறுகிய காலத்தினுள் இந்திய நாடாளுமன்ற
உறுப்பினரானார். டில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை அடித்ததன் மூலம் சசிகலா
புஷ்பா பிரபலமாகிவிட்டார்.ஜெயலலிதாவையும், அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விமர்சித்ததனால் திருச்சி சிவாவை அடித்ததாக
சசிகலா புஷ்பா தெரிவித்தார்.அவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினையின் உச்சக்கட்டம்தான் திருச்சி சிவா மீதான
தாக்குதல். உண்மையான காரணத்தை மறைத்து ஜெயலலிதாவையும் கட்சியையும் சந்திக்கு இழுத்தார் சசிகலா
புஷ்பா.. தான் கூறிய காரணத்தை ஜெயலலிதா நம்பி விடுவார் என சசிகலா புஷ்பா
தப்புக்கணக்குப் போட்டார். ஜெயலலிதாவின் கணக்கு வேறுவிதமாக இருந்தது.
டில்லி விமான நிலையத்தில் அடிவாங்கிய திருச்சி
சிவா கட்சித் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து தனது விளக்கத்தைத் தெரிவித்தார்.
டில்லியில் இருந்த சசிகலா புஷ்பா தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு
விசாரிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளைத் தாக்கியவர்களுக்கும் மிக மோசமாக
விமர்சித்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படது ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளைத் தாக்கிய, மிக மோசமாக விமர்சித்த இளவரசன், எஸ்.எஸ். சந்திரன், புவனேஸ்வரி,சி.கே.சரஸ்வதி சேகர்பாபு போன்றவர்கள் பதவி
உயர்வு பெற்றார்கள். சிலர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது
தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு.இந்த வரலாற்றைச்
சரியாகப்புரிந்துகொண்ட சசிகலா புஷ்பா தனது பதவிக்கு ஆபத்து வராது என நினைத்தார்.
டில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா
தாக்கியதை ஜெயலலிதா ஆமோதிக்கிறாரா அல்லது கண்டிக்கிறாரா என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில்
நாடாளுமன்றத்தில் உரையற்றிய சசிகலா புஷ்பா தனக்கு நீதி வேண்டும் எனக் குரல்
கொடுத்தார். பேசுவதற்கு சந்தர்பம் கிடைத்த போது மிகப்பணிவாகத் தனது உரையை
ஆரம்பித்தார் சசிகலா புஷ்பா. டில்லி விமான நிலையத்தில் உணர்ச்சி வசப்பட்டு
திருச்சி சிவாவை அடித்துவிட்டேன். அதற்காக திருச்சி சிவாவிடமும் திராவிடமுன்னேற்றக்
கழகத்தலைவர் கருணாநிதியிடமும் மன்னிப்புக் கேட்கிறேன் என்றார். அதே வேளை திருச்சி
சிவாவையும் கருணாநிதியையும், திராவிட
முன்னேற்றக் கழகத்தையும் சில வார்த்தைகள் புகழ்ந்து பேசினார். பொதுஇடத்தில்
இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தாக்கியவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டதை
உணர்ச்சி மேலீட்டில் அனைவரும் பார்த்து அதிசயித்தனர்.
திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்களை இழிவாகப்
பேசிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் மனம் வருந்தியதாகவோ அல்லது
மன்னிப்புக் கேட்டதாகவோ சரித்திரம் இல்லை. இந்த ஆச்சரியத்தைப் பார்த்து அனைவரும்
திகைத் திருந்த வேளையில் இன்னொரு குண்டைப் போட்டு அனைவரையும் நிலை குலைய வைத்தார்
சசிகலா புஷ்பா. எனது கட்சித்தலைவர் என்னை அறைந்து விட்டார். எம்பி பதவியை விட்டு
விலகும்படி என்னை வற்புறுத்துகிறார்.எனக்கு பாதுகாப்பு
வேண்டும். ஒரு பெண்ணுக்கு நீதி வேண்டும் என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். சசிகலா புஷ்பாவின் குற்றச் சாட்டைக்கேட்ட
அனைவருக் திகைத்து விட்டனர். ஜெயலலிதாவுக்கு எதிராக யாரும் எந்தவிதமான விமர்சனமும்
செய்தது கிடையாது. அதுவும் நாடாளுமன்றத்தில் இப்படிப் பகிரங்கமாக ஒரு
குற்றச்சாட்டை சுமத்துவதற்கு துணிவு வேண்டும். சசிகலாவின்
பின்னணியில் பலமான அரசியல் சக்தி ஒன்று உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா
குற்றம் சுமத்தும் நாடகம் அரங்கேறிய வேளை அவரை கட்சியில் இருந்து நீக்கும் கடிதத்தில்
ஜெயலலிதா கையெழுத்திட்டார். பாரதீய ஜனதாக் கட்சியின் அமைச்சர் வெங்கைய நாயுடு
ஜெயலலிதாவுக்கு ஆதராவாக கருத்துத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்
குலாம் நபி ஆஸாத்தும் கனிமொழியும் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு
தெரிவித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்பிக்கள்
செய்வதறியாது தடுமாறினர். ஜெயலலிதாவுக்கு எதிரான தென் பகுதியில் பிரபல
தொழிலதிபரான வைகுண்டராஜாவும் சுப்பிரமணியன் சுவாமியும் சசிகலா புஷ்பாவை
இயக்குவதாக சந்தேகம் உள்ளது.
சசிகலா புஷ்பாவை ஆதரித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள்
கதிகலங்கிப் போய் உள்ளனர்.சசிகலா புஷ்பாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த
முன்னாள் அமைச்சரான எஸ்.பி. சண்முகநாதனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
சசிகலா புஷ்பாவுக்கு எதிராக தமிழகத்தில் வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன. முன் ஜமீன் பெற்று சசிகலா புஷ்பா டில்லியில்
இருக்கிறார். தமிழகத்துக்கு செல்ல பயமாக இருப்பதாக அறிவித்துள்ளார். அவருக்கு
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின்
வீட்டில் வேலை செய்த இரண்டு இளம் பெண்கள் தம் மீதான பாலியல் புகார்
தெரிவித்துள்ளனர். சசிகலா புஷ்பா, அவரின் கணவர், மகன் ஆகிய மூவரின் மீதும் பாலியல்
தொந்தரவு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சசிகலா புஷ்பாவின் குற்றச்சாட்டை
தான் எதிர்ப்பதாக அவரது கணவர் ஏற்கெனவே தெரிவித்திருதர்..அப்படி இருந்து அவர்
மீதும் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவளை சசிகலா புஷ்பாவுக்கு எதிராக மோசடிக் குற்றச்
சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஜெயலலிதாவை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும்
என்பதை சசிகலா புஷ்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்து உள்ளன.
ஜெயலலிதாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று எம்பி பதவியை இரஜினாமாச்
செய்தால் சசிகலா புஷ்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் வாபஸ் பெறப்படும். சசிகலா
புஷ்பா பணிந்து போகத் தயாராக இல்லை. ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வதில்
உறுதியாக இருக்கிறார். எம்பி பதவியில் இருந்து அவரை நீக்க முடியாது. இன்னொரு
கட்சியில் சேர்ந்தால் அவரது பதவி பறிக்கப்படும்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவை எதிர்த்து அவரது
கட்சியில் இருந்து ஒரு குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தக் குரலுடன் சேர்ந்து இன்னும் சில குரல்கள் ஒலிக்குமா
அல்லது இக்குரல் அடங்கி ஒடுங்கி விடுமா என்பதை அடுத்து வரும் நகர்வுகள்
வெளிப்படுத்தும்.ஜெயலளிதாவின் அரசியல்
வாழ்க்கையில் விழுந்த முதலாவது அடிய அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை அறிய
தமிழகம் ஆவலாக இருக்கிறது.
2 comments:
அருமையான பதிவு
தொடருங்கள்
தொடருவோம்
Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
அருமையான பதிவு
தொடருங்கள்
தொடருவோம்
தங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி
வர்மா
Post a Comment