Sunday, July 31, 2016

ஒருவழிப் பாதையான நல்லிணக்கம்


 போர் என்றால்போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று அறைகூவல்விடுத்து ஆயுதப்போராட்டத்தை உசுப்பேற்றினார் ஜே.ஆர். ஜெயவர்தன.சமாதானப் புறாவைப்பறக்கவிட்டு போர் மேகத்தைக் கலைக்க முயற்சி செய்தார் சந்திரிகா பண்டாரநாயக்க. சமாதானத்துக்கான போர் என்ற எதிர் மறையான வாசகத்துடன் போரை முடித்துவைத்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. நல்லிணக்கம் என்ற செய்தியுடன் ஆட்சிபீடமேறினார் மைத்திரி பால சிறிசேன.
சர்வ அதிகாரத்தைக் கையில்வைத்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன போரை  நடத்த முடியாது சமாதானத்தை ஏற்படுத்தாது பதவியை விட்டு வெளியேறினார். புலிகளையும் இந்திய அமைதி காக்கும் படையையும் மோதவிட்டுப் பிரச்சினையை மேலும் பெரிதாக்கினார். சந்திரிகா பறக்கவிட்ட சமாதானப்புறாக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.   ஒருதலைப்பட்சமான யுத்தத்தின் மூலம் போரை முடித்துவைத்த மஹிந்த ராகபக்‌ஷ தமிழ் சிங்களப்பிரச்சினையை மேலும் விரிவடையச்செய்தார். யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர தமிழ் சிங்கள இனப்பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. நல்லிணக்க அரசாங்கம் இப்போது ஆட்சிபீடமேறி உள்ளது. கடந்த ஆட்சியின் போது நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவித்தபலர் இன்றைய ஆட்சியிலும் அதிகாரம் மிக்க அமைச்சர்களாக இருக்கின்றனர்.

நல்லிணக்கம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்  என்பதில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன. யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து நல்லிணக்கம் ஆரம்பிக்க வேண்டும் என பெரும்பான்மையான சிங்கள மக்கள் நினைக்கின்றனர். யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்தைச் சிலர் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். யாழ்ப்பாணத்தவர்களுக்கு நல்லிணக்க வகுப்பு நடத்த சிலர் ஆர்வமாக உள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டபோது இனவாதக் கண்ணோட்டத்துடன் யாரும் பார்க்கவில்லை.யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பிரச்சினைக்கு இனவாத சாயம் பூசப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கை ஏற்படும்படி நடந்து கொள்வதுதான் நல்லிணக்கத்தின் முதல்படி.நல்லிணக்கத்துக்கான பாதைகள் அனைத்தையும் மூடி அடைத்து விட்டு நல்லிணக்கத்துக்கு தமிழ் மக்கள் எதிரிகள் என்ற ரீதியில் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.  பிரிட்டிஷாரிடமிருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழ்த் தலைவர் இங்கிலாந்துவரை சென்றது இன்றைய சிங்களவர்களுக்குத் தெரியாது. உண்மை தெரிந்தவர்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.இலங்கையின் பூர்வீக குடிகள் சிங்களவர்கள் என்றுதான் சிங்கள மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. அந்தப் போதனையில் வளரும் மாணவன் பிற்காலத்தில் அரசியல்வாதியாகையில் தமிழர்களைத் தூசாக நினைக்கிறார்,

பதவி ஆசைபிடித்த சிங்களம் மட்டும் சட்டமூலம் தமிழர்களை அந்நியப்படுத்தியது. பல்கலைக்கழகத் தரப்படுத்தல் தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டியது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டன.  சமாதானப்  புறாவாக வலம் வந்த சந்திரிகாவின் முயற்சிகளை  ரணில் தலைமையிலான எதிர்க்கட்சி முடக்கியது. சந்திரிகா ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்த காலத்தில் நாட்டில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆட்சியில்  உருப்படியாக எதனையும் செய்ய முடியாது பரிதாபமாகப் பதவியைப் பறிகொடுத்தார் ரணில்.

மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக அரசியல் எதிரிகளான சந்திரிகாவும் ரணிலும்  ஓரணியில் இணைந்தனர். நல்லிணக்கம் என்ற வாசகத்துடன் புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது. அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது ஆனால், தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடைபெறவில்லை. புதிய புதிய பெயருடன் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன.. .காடுகள் அழிக்கப்படுகின்றன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும்  வடமாகாண சபை உறுப்பினர்களும் தட்டிக் கேட்கும்போது உரிய பதில் கொடுக்கப்படுவதில்லை.

தமிழ் மக்களின் காணிகளில் புத்தர் சிலைகள்  நிறுவப்படுகின்றன. சிங்கள மக்கள் இல்லாத இடங்களிலும் புத்தர் சிலைகள் தோன்றுகின்றன. இராணுவ முகாம்கள் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. நல்லிணக்க அரசாங்கத்தால் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழக மீனவர்களால் வடபகுதியின் மீன் வளம் சுரண்டப்படுகிறது. வடபகுதி மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக முடியாத நிலை உள்ளது. ஆனால், வட பகுதியில் மீன் பிடிப்பதற்கு சிங்கள மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனைத் தட்டிக் கேட்கும் தமிழ் மீனவர்களை பொலிஸாரும் புத்தபிக்குகளுக் மிரட்டுகின்றனர். அத்து மீறியவர்களைத் தட்டிக் கேட்டவர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்படுகின்றனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமக்கு நல்லிணக்க அரசாங்கத்தால் விமோசனம் கிடைக்கும் எனஎதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காணாமல் போனவர்களைக் கண்டு பிடிக்கும் ஆணைக்குழுத் தலைவரின் அறிக்கைகள் நம்பிக்கையளிப்பதாக இல்லை. யுத்த வெற்றியின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்கள் அந்த வெற்ரி நிரந்தரமானது என்று போட்ட கணக்கு தப்பாகப் போய்விட்டது.  இந்த அரசங்கத்தை விழுத்துவதற்கான திட்டங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் இருந்து நல்லிணக்கம் ஆரம்பமாக வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி விரும்புகிறார். இனவாத அரசியல் பேசும் சிங்கள அரசியல்வாதிகள்  இதற்குத் தயாராக இல்லை. தமிழ் மக்களை அடக்கு ஒடுக்கிக் கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது


No comments: