Tuesday, April 18, 2017

பணத்தால் முடக்கப்பட்ட ஜனநாயகம்

தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் களமாகக் கருதப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இரத்துச்செய்யப்பட்டதால் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான  பலப்பரீட்சையாகவே இருந்தன. பிளவுபட்டிருக்கும் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நோக்கப்பட்டது.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிக் கொடியும் சின்னமும் முடக்கப்பட்டன.. தொண்டர்கள்  மன ஓட்டத்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. சசிகலாவின் அணியைச் சேர்ந்த    தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்ததை மற்றைய கட்சிகள்  ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தன. புகார் தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரணை செய்து செய்த அதே வேளையில் அமைச்சர்விஜயபாஸ்கருடைய வீட்டில்  வருமானவரித்துறை  அதிரடிச்சோதனை நடத்தியது அந்தச் சோதனையின் போது ஆர்.கே.நகரில் பணம் விநியோகம் செய்த ஆதாரம் கைப்பற்றப்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்துச்செய்யப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான உடனேயே எமது வேட்பாளர் ஐம்பதாயிரம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறுவார் என தினகரன் அறிவித்தார். சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிரிந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பின்னால் சென்றுள்ளனர். இக்கட்டான  நேரத்தில்  கட்சியை வழி நடத்திச்செல்லும் ஜெயலலிதா உயிருடன் இல்லை. அவரது மரணத்துக்கு சசிகலா தான் காரணம் என பன்னீர் அணியினர் பிரச்சாரம் செய்கின்றனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று துண்துகளாக உடைந்திருக்கிறது. ஆர்.கே. நகரின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான மதுசூதனன் பன்னீர்ச்செல்வத்தின் பக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் சசிகலா நியமிக்கும் வேட்பாளர் எப்படி வெற்றி பெறுவார் என்ற சந்தேகம் எழுந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் முடிவாகவே இருக்கும் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரின் இடத்தைப் பிடிக்க முயன்ற சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்.ஜெயலலிதா,சசிகலா ஆகியோரின் இடத்தைப் பிடிப்பதற்கு  முடிவு  செய்த தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணத்தை  வாரி இறைத்தார். தினகரனின் வெற்றிக்காக கோடிக்கணக்கில் பணத்தை விநியோகித்த அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சிக்கிய ஆதாரங்களால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்துச்செய்யப்பட்டது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  62  வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதி பெற்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு ஆதரவான தேர்தல் அதிகாரியை மற்ற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அத்தொகுதியின்  அரச அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் போறோர் முறைகேடு  செய்யலாம் என தேர்தல் கமிஷனுக்கு புகார்  செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி,அரச அலுவலர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட சுமார் 60  பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாநில  தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் மேற்பார்வையில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே முதன் முறையாக 70  கண்களிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  10 துணை இராணுவ கம்பனிப் படை நிலை நிறுத்தப்பட்டது. இத்தனை முன்னேற்பாடுகள் செய்தும் ஒரு இடைத்தேர்தலை நடத்த முடியாது தேர்தல் கமிஷன் தோல்வியடைந்து விட்டது.  தினகரன் வெற்றி பெறமாட்டார்  என்றே ஆரம்பத்தில் அனைவரும் ஒருமித்துக் கருத்துத் தெரிவித்தனர். மதுசூதனன் வெற்றி பெறுவார் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சசிகலாவின் அணியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை என்ற முடிவை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெளிப்படுத்தும் என நோக்கப்பட்டது.
தினகரனின் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்துள்ளதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறிவைத்து 55  இடங்களின் நடைபெற்ற அதிரடிச்சோதனையில் முக்கியமான பல ஆவணங்களும் 4.50 கோடி ரூபாவும் கைப்பற்றப்பட்டன. ஆர்.கே.நகரில்   89 கோடி ரூபா விநியோகம்செய்த பத்திரங்களும் கைப்பற்றப்பட்டது.முக்கிய அமைச்சர்கள் பெயரும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பண விபரமும் அந்த ஆவணங்களில் அடக்கம்.

அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்,காமராஜ்,டெல்லிப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்று வருமானவரித்துறை அதிகாரிகளைக் கடமை செய்யவிடாது தடுத்தனர்.முக்கிய ஆவணம் ஒன்றை  தளவாய் சுந்தரம் சாரதியிடம் கொடுக்க அவர் அதனை மதிலுக்கு வெளியே எறிந்தார். மதிலுக்கு அப்பால் நின்றவர் அதனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். தமிழக ஆளும் கட்சி தனது எல்லையை மீறி செயற்பட்டு வருகிறது. அதிகாரிகள் கடமையைச்செய்ய விடாது தடுத்த  மூவர்மீதும்   வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்  கூட்டணியில் இருந்து ஜெயலலிதாவின் துதிபாடிய சரத்குமார் கூட்டணியை விட்டு வெளியேறினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டான பின்னர் சசிகலா தரப்புடன் இணைந்தார். அதன் பின்னணியில் பணம் கைமாறப்பட்டிருக்கலாம்  என்ற சந்தேகம் ஏற்பட்டது.   சரத்குமார் விட்டிலும் அவரின் மனைவி ராதிகாவின் ராடன்  நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை அந்தச்சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி விட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.விஜயபாஸ்கர்,சரத்குமார்,ராதிகா,கீதாலட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர்.

இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம். ஆனால், ஆர்.கே.நகரில் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சகஜமாகிவிட்டது. .தனது  வெற்றியைத் தடுப்பதற்காக பாரதீய ஜனதா சதிசெய்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை இரத்துச்செய்ததாக தினகரன் தெரிவித்துள்ளார். இலஞ்சம் கொடுத்தவரைத் தகுதி  நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்தி இருக்க வேண்டும் என்பதே அதிகமானோரின் கருத்தாகும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்முடிவு பல தலைவர்களின் பலவீனத்தை  வெளிப்படுத்தி இருக்கும்.

இந்திய மத்திய அரசு, தேர்தல் கமிஷன் ஆகியவற்றின் பலவீனமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்தானதுக்குக் காரணம்,.இலஞ்சம் கொடுத்தவர்கள் மீதும், இலஞ்சம் கொடுத்த வேட்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்திருந்தால் இலஞ்சம் கொடுப்பதை ஓரளவுக்குத் தடுத்திருக்கலாம்.தினக் கூலி  செய்பவர்களின் கண்ணில் இரண்டாயிரம் நான்காயிரம்  ரூபாவைக் காட்டினால் அவர்கள் அதனை இழக்க விரும்பமாட்டார்கள்.  இலஞ்சம் கொடுத்தவ்ர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் இலஞ்சம் கொடுப்பதைத் தடுக்கலாம்.
வர்மா.

No comments: