இரட்டை
இலைக்கு விலைபேசிய தினகரன்
கறுப்புக்
கண்ணாடி,முழுக்கைச் சட்டை, வலதுகையில் மணிக்கூடு
செக்கச்செவேல் என்ற நிறம், முதுகையும் இரண்டு தோள்களையும்
இணைக்கும் துண்டு, பாசமான சிரிப்பு,அன்பான
அரவணைப்பு, இரட்டை இலைச்சின்னம். என்பன மக்கள்
திலகம் எம்.ஜி.ஆரின் அடையாளங்களில் பிரதானமானவை. பிரமாண்டமான மேடயில் ஏறி மக்கள்
வெள்ளத்தின் முன்னால் இரண்டு விரல்களை உயர்த்திக்காட்டி இரட்டை இலைச்சின்னத்தை ஞாபகப்படுத்தும் அந்தக் காட்சியை
நினைத்துப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத் தொண்டர்களுக்கும் உடம்பு புல்லரிக்கும்.
திரவிட
முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர், ஊழலற்ற, இலஞ்சம் அற்ற ஆட்சியை அமைப்பேன் என சபதம் எடுத்தார். எம்.ஜி.ஆரின்
மறைவுக்குப்பின்னர் அவரின் சபதத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் மறந்து
விட்டார்கள். ஊழலும் இலஞ்சமும் அவரால் உருவாக்கப்பட்ட கட்சிக்குள் தலை
விரித்தாடியது. எம்.ஜி.ஆரின் மீது விசுவாசமும் அபிமானமும் வைத்திருந்தவர்கள் ஓரம்
கட்டப்பட்டனர். எம்.ஜி.ஆரின் வாரிசாகத் தன்னை நியமித்துக் கொண்ட ஜெயலலிதா அவரின்
வழியைப் பின்பற்றி கழகத்தை முன்னெடுத்துச்செல்லப் போவதாக உறுதி பூண்டார்.
எம்.ஜி.ஆரையும் அவரது தொண்டர்களையும் கவர்வதற்காக எம்.ஜி.ஆரைப் போன்றே இரண்டு
விரல்களை உயர்த்திக்காட்டி அரசியலில் அரசியலில் உச்ச நிலையை
எட்டினார்.
எம்.ஜி.ஆரைப்
போல நடித்த ஜெயலலிதாவால்
எம்.ஜி.ஆரைப் போல வாழத்தெரியவில்லை.
வருமானத்துக்கு மீறிய அதிக சொத்துச்சேர்த்த வழக்கில் குற்றவாளியாகி சிறை
சென்ற முதலாவது முதலமைச்சர் என்ற அவப்பெயரைப் பெற்றார். ஜெயலலிதா இறந்ததும்
உடன்பிறவா சகோதரி சசிகலா அந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்தார். சசிகலா
சிறைக்குப் போகையில் தனது குடும்ப உறுப்பினரான தினகரனுக்கு கட்சியில் உயர் பதவி
கொடுத்தார். சசிகலா,தினகரன் உட்பட அவரது குடும்ப
உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியை விட்டும் தனது வீட்டைவிட்டும் ஜெயலலிதா விரட்டினார்.
பின்னர் சசிகலாவை மட்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இவை எல்லாவற்றையும்
தெரிந்து கொண்டும் தமது பதவியைத் தக்க வைப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள்
சசிகலாவுக்கும் தினகரனுக்கும் முன்னுரிமை கொடுத்தனர்.
ஜெயலிதா
மறைந்ததும் பன்னீச்செல்வத்தின் தலைமையிலும் சசிகலாவின் தலைமையிலும் கட்சி
இரண்டானது. சசிகலா சிறைக்குப் போனதால் தினகரனின் அட்டகாசம் அதிகமானது. ஆர்.கே.நகர்
இடைத்தேர்தல் தினகரனின் ஆட்டத்துக்கு முடிவுகட்டியது. ஆர்.கே.நகர்
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பன்னீச்செல்வத்தின்
ஆதரவாளரான மதுசூதனனனும் தினகரனும் இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரியதால் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இரட்டை இலைச்சின்னத்தையும் தேர்தல் கமிஷன் தடை
செய்தது.
எம்.ஜி.ஆரின் இரட்டை இலை என்ற மாயச்சின்னத்தால் வெற்றி
பெறலாம் என்ற தினகரனின் கனவு மண்ணானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின்
ஆதரவாளர்கள் பணம் கொடுத்தது ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஆர்.கே. நகர்
இடைத்தேர்தல் இரத்தானது. இரட்டை இலை இருந்தால்தான் கட்சி தனது கட்டுப்பாட்டில்
இருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட தினகரன் இரட்டை இலையைக் கைப்பற்றுவதற்காக குறுக்கு
வழியை நாடினார். தேர்தல் கமிஷனுக்கு இலஞ்சம் கொடுத்தால் இரட்டை இலையைப் பெறலாம் என
யாரோ ஒருவர் ஆலோசனை கூறியதால்
இலஞ்சம் கொடுத்து இரட்டை இலையைப் பெற தினகரன் முடிவுசெய்தார். இலஞ்சத்தால் எதையும்
சாதிக்கலாம் என நினைத்த தினகரன் பொலிஸாரின் கிடுக்கிப் பிடியில் அகப்பட்டுள்ளார்.
தமிழக அரசைத் தனது கைப்பிடிக்குள் வைத்திருக்க மத்திய அரசு
விரும்பியது. தினகரனின் நடவடிக்கைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டன. பாரதீய
ஜனதாவின் விருப்பத்தேர்வான பன்னீருக்கு எதிராக மன்னார்குடிக் குடும்பம்
எடப்பாடியைக் களம் இறக்கி உள்ளது. தினகரனின் ஆட்டத்தை முடித்துவிட்டால் தமிழக அரசு
அடங்கிவிடும் என மத்திய அரசு கணக்குப் போட்டது. டில்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 1.3 கோடி ரூபாவுடன் சுகேஸ்
சந்தர் என்பவரை பொலிஸார் கைது செய்தபோது இரட்டை இலைச்சின்னத்தைப்
பெறுவதற்காக தினகரன் கொடுத்த இலஞ்சம் என்ற உண்மை தெரியவந்தது. வழமை போல
தொலைக்காட்சி முன்னால் புன்னகையுடன் தோன்றிய தினகரன் சுகேஸ் சந்தர் அன்பவரைத்
தனக்குத் தெரியாது எனத் தெரிவித்தார்
.
டில்லி பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினகரனால் அவர்களுடைய
கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. பொலிஸார் முன்வைத்த ஆதாரங்களால் தினகரன்
அதிர்ச்சியடைந்தார். விசாரணையின் முடிவில் தினகரன்,அவருடைய
உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜுன்
ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை மேலதிக
விசாரணைக்காக பொலிஸார் தம் வசம் எடுத்துள்ளனர். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக உயர்மட்டத் தலைவர்கள் கதிகலங்கி உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும்
தினகரனைக் கைவிட்டுள்ளனர். இதேவேளை விசாரணை வளையத்தில் சிக்குவோமோ என்ற பயமும்
அவர்களை வாட்டி வதைக்கிறது.
இரட்டை இலைச்சின்னத்தைப் பெறுவதற்காக 60 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க
தினகரன் முன்வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் தினகரனுடையதா? இல்லை
என்றால் தினகரனுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தது யார் என்ற கேள்விக்கு சரியான
பதிலை அவர் கொடுக்கவில்லை. இலஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்கலாம் என்ற துணிவை தினகரனுக்கு
யார் கொடுத்தது. இதற்கு முன்னர் அவர் இலஞ்சம் கொடுத்து எத்தனைப்
பெற்றுள்ளார் போன்ற கேள்விகளுக்கு விசாரணையின் முடிவில் விடை கிடைக்கும்.
கர்நாடக மாநில பெங்களூரைச்சேர்ந்தவர்
சுகேஸ் சந்தர். மோசடி மன்னனான இவருடன் தினகரன் நீண்ட காலமாக தொடர்பில்
இருந்துள்ளார். தமிழகம்,ஆந்திரா,கர்நாடகம், டில்லி,கொல்கட்டா,ஆகிய மாநிலங்களில் மோசடி செய்ததால்
பொலிஸாரால் விசாரிக்கப்பட்டவர்.தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் பேசி தான்
நினைத்ததைச் சாதிக்கும் திறமை மிக்கவர்.ஆடம்பரமாக வாழ்வதற்காக கோடிக்கணக்கில்
மோசடி செய்வதே சுகேஸ் சந்தரின் பிரதான தொழில்.அடம்பர வாழ்க்கையில் மோகம் கொண்டவர்.
மருத்துவக்கல்லூரி மாணவியான லீனா மரியா பால் என்பவரைக் காதலித்துத் திருமணம்
செய்தார். சுகேஸ் சந்தரின் மோசடிகளுக்கு அவரின் மனைவியும் உடந்தையாகச்
செயற்பட்டவர். சில மலையாளப் படங்களில் நடித்த லீனா மரியா பால், தொலைக்காட்சித் தொகுப்பாளினியாகவும் பணி புரிந்தார். சுகேஸ் சந்தர்
கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து ஒன்பது சொகுசுக் கார்கள், 6.5 கோடி ரூபா பெறுமதியான
பிரஸ்லற் 9 இலட்சம் பெறுமதியான கம்மல்
என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணத்தால் வெற்றிபெற்று முதல்வராகலாம்
என தினகரன் நினைத்தார். இடைத்தேர்தல் இரத்தானதால் இரட்டை இலைச்சின்னத்தைப் பெற்று
முதல்வராகலாம் என்ற தினகரனின் ஆசை அவரை பொலிஸ் பிடியில் சிக்க வைத்துள்ளது.
No comments:
Post a Comment