Wednesday, May 10, 2017

3 ஆவது உலகப்போர்

அமெரிக்க அடையாளங்களில் ஒன்றான இரட்டைக்  கோபுரம் விமானத் தாக்குதலால் சின்னாபின்னமானபோது மூன்றாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகும் என அச்சம் ஏற்பட்டது. இரட்டைக்  கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி என பிலேடனை அடையாளம் கட்டியது அமெரிக்கா. பிலேடனை வேட்டையாட ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க  நுழைந்த போது  மூன்றாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகும் என கருதப்பட்டது. ஆனால், அவை எல்லாம் புஸ்வாணமானது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவானபோது மீண்டும் ஒரு யுத்தத்துக்கான அறிகுறி தோன்றியது. அமெரிக்காவைச் சீண்டிப்பார்க்கும் வட கொரியாவை மிரட்டுவதற்கு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
.அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வட கொரியாவை நோக்கிச் சென்றுள்ளன. பிரிட்டன்,ரஷ்யா,சீனா ஆகிய  நாடுகளும் வட  கொரியாவுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு மிரட்டும் வகையில் போராயுதங்களை நகர்த்துகின்றன. வல்லரசு நாடுகள் அனைத்தும் நவீன வகையான ஆயுதங்களைத் தயாரிப்பதில் போட்டி போட்டு முனைப்புக் காட்டுகின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் பல நாடுகளை மிரட்டுகின்றன. தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் அந்த நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. புதிய ஆயுதங்களைத்  தயாரிக்கும் அதே  வேளை அறிமுகமாகும் புதிய ஆயுதங்களைக் கொள்வனவு  செய்வதிலும் பல நாடுகள் முனைப்புக்காட்டுகின்றன.

நாட்டின் அபிவிருத்தி,கல்வி,வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கும் பணத்தை விட அதிகமாக பாதுகாப்புக்காக ஒதுக்குவதற்கு அச்சுறுத்தலுக்கு உள்ளன நாடுகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. பயங்கரவாத நடவடிக்கையில் ஊறிப்போனவர்கள்  புதிய புதிய யுக்தியைக் கையாள்வதால் அவற்றைத் தடுக்க முடியாத நிலை உள்ளது. பொது மக்கள் சந்தோசத்தை அனுபவிப்பதற்காக கூடும் இடங்களையே தீவிரவதிகள் குறி வைக்கின்றனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள், வாகனக் குண்டுகள் தற்கொலைத் தாக்குதல் போன்றவற்றைத் தவிர்த்து பொது மக்கள் கூடும்  இடங்களில் கனரக வாகனத்தை  வேகமாகச் செலுத்தி மக்களைக் கொல்லும் திட்டங்களை தீவிரவாதிகள் நடத்துகிறார்கள்.
பிரித்தானிய, ஜேர்மனி,இத்தாலி,பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீவிரவாதச் செயல்களால் பல மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளன. எந்த நாடுகளின் எல்லைக்குள் தீவிரவாதம் ஊடுருவியுள்ளது. அமெரிக்கா, சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளை இருந்த இடத்தில் இருந்தபடியே வட கொரியா மிரட்டுகிறது. வட கொரியாவுக்கு எதிரான யுத்த மேகம் கருக்கட்டி உள்ளது. விமான சேவைகளை நிறுத்தும் அளவுக்கு சர்ச்சை வெடித்துள்ளது. வட கொரியாவுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்துள்ளது. பதிலுக்கு வட கொரிய அமெரிக்காவை மிரட்டுகிறது. மூன்றாவது உலக யுத்தம் வெடித்தால் அதனைத் தங்கும் சக்தி உலகின் சிறிய நாடுகளுக்கு இல்லை. யுத்தம் செய்யும் வல்லரசுகளுக்கு அருகில் உள்ள சிறிய நாடுகள் சில உலக வரைபடத்தில் இருந்து காணமல் போகும் நிலை ஏற்படும்.


வல்லரசு நாடுகளில் பலமுள்ள நாடக தன்னை நிலை நிறுத்த அமெரிக்காவும் சீனாவும் கங்கணம் கட்டியுள்ளன. அகண்டு பரந்த நாடாக இருந்த ரஷ்யா சிதறுண்டு  பல நாடுகளாகப் பிரிந்ததால் சற்று அடக்கமாக இருந்தது.  இப்போது பழைய பலத்துடன் வல்லரசின் வல்லவனாக தன்னை முதன்மைப்படுத்த முயற்சிக்கின்றது. இந்த வல்லரசு நாடுகளில் ஆசைக் கனவைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு வட கொரிய தயாராக இருக்கிறது.அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த மாதம் தமது  படைகளையும் இராணுவத் தளபாடங்களையும்  நகர்த்தியுள்ளன அமெரிக்கா தனது   யு.எஸ்.எஸ். எனும் நீர் மூழ்கிக் கப்பலை  கொரிய தீபகற்பத்துக்கு  அருகே நிறுத்தியுள்ளது.  விமான தாங்கிக் கப்பல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளது. அமெரிக்காவும் தென் அமெரிக்காவும்  போர் ஒத்திகை நடத்துகின்றன. இது வட கொரியாவை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு போயுள்ளது.
வட கொரிய தனது 85  ஆவது இராணுவ தினத்தைக் கொண்டாடி அமெரிக்காவையும் தென் கொரியாவையும் மிரட்டியுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள் மீது அணு குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா மிரட்டியுள்ளதால் அமெரிக்க பாதுகாப்பைத்  அதிகப்படுத்தியுள்ளது. ஈபனோஸ் அணு ஏவுகணைப் பாதுகாப்பை துரித கதியில் கொரிய தீபகற்பத்துக்கு அமெரிக்கா  அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் குண்டுகளின் தாய் என  வர்ணிக்கப்படும் பயங்கரமான குண்டை வீசி பயங்கர வாதத்தை அடியோடு அழிக்க எதையும் செய்யத் தயார் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.


எலக்ரோ மக்னடிக் எனும் மின்காந்த அலையிலான ஆயுதம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாக வெளியான தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.  குண்டுகளுக்குப் பதிலாக  குண்டுகள் போல் செயற்படும் மின்காந்த அலைகள் பயங்கர அழிவை ஏற்படுத்தும் வல்லமை உடையனவாகக் கருதப்படுகிறது. ஒளியை விட  ஆறு மடங்கு வேகத்தில் செயற்பட்டு   சுமார் 100   மைல் தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்தது.  இந்த ஆயுதத்தைத் தடுக்கும்  வல்லமை எந்த நாட்டுக்கும் இல்லை என அமெரிக்கா   தெரிவித்துள்ளது.
 வட கொரியாவிடம் தெர்மோ நியூ கிளியர் குண்டுகள் இருப்பதாக ஸ்பெயின் நாட்டுப் பிரஜையும் அந்  நாட்டு கெளரவக் குடிமகனும்  சிறப்புப் பிரதி நிதியுமான  பெனோஸ்  தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய தெரிவித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உலகை  அழிப்பதற்கு மூன்று தெர்மோ நியூ கிளியர் குண்டுகள் போதும். வட கொரியாவுடன் விளையாட வேண்டாம்.ஏவுகணைகள் மூலம் தனது நாட்டைப் பாதுகாக்கும் தைரியம் ஜனாதிபதி கிம் ஜாம் உன்னுக்கு இருகிறது. வட கொரியாவுக்கு எதிரான போரில் சீனா முக்கை நுழைத்தால் பாரிய இழப்பைச் சந்திக்கும் எனவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானின் நாகசாகி,ஹிரோசிமா ஆகிய நகரங்களில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் தாக்கம்  இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அணுகுண்டு வீசப்பட்டதால் இரண்டாவது உலக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மூன்றாவது உலகப் போர் அணுகுண்டில் இருந்து தான் ஆரம்பமாகும் என்ற பயம் மக்களிடம் தொற்றியுள்ளது. யுத்தம்  செய்வதற்கு வல்லரசுகள் தம்மைத்  தயார்ப் படுத்துகின்றன. வளர் முக நாடுகள் போரை விரும்பவில்லை.


 

No comments: