Wednesday, May 17, 2017

பலே பலே பாகுபலி

பாகுபலியை  கட்டப்பா ஏன் கொலை செய்தான்? என்ற ஒற்றை வரிக் கேள்விக்கு இரண்டு வருடங்களின் பின்னர் விடை கிடைத்துள்ளது. இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல பலகோணங்களில் சிந்தித்து விடை பகன்றனர்.   முதலாவது பாகுபலியின்  பிரமாண்டம் மனதைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. அந்த இடத்தில் இரண்டாவது  பாகுபலியும் இடம் பிடித்துவிட்டது. இந்திய சினிமாவில் பிரமாண்டத்தின்  ஆரம்பம் சந்திரலேகா. நவீன தொழில் நுட்பங்களுடன் பிரமாண்டமான பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. பிரமாண்டம் என்ற மையப் புள்ளி சந்திரலேகாவில்   இருந்துதான் ஆரம்பமாகிறது  சந்திரலேகாவுக்குப் பின்னர்  பிரமாண்டம் என்றால் பாகுபலி ஒன்று, பாகுபலி இரண்டு என இரண்டு படங்களும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டன.
திரைக்கதை,வசனம்,நடிப்பு,எடிட்டிங்,இசை,பாடல்கள், இயக்கம்,தயாரிப்பு, உடை, கலை என பட்டியலிடும் அனைத்தும் பிரமாண்டம் தான். இரண்டாவது பாகுபலியின் ஆரம்பத்தில் முதலாவது பாகுபலியின் கதையை  ஞாபகப்படுத்தும் உத்தி மிக அருமையானது. பாகுபலி ஒன்றில் மகனின் கதையையும் பாகுபலி இரண்டில் தகப்பனின் கதையையும் சிக்கலின்றி மிகத் தெளிவாகத் தந்துள்ளார். பாகுபலியின் கதையை நகர்த்தும் முக்கிய கதாபத்திரமான கட்டப்பாவாக சத்தியராஜ் மகிழ்மதி நாட்டுக்கும் பாசத்துக்கும்  இடையில் சிக்கித் தவிக்கும் ராஜமாதா சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன், அப்பா மகன் இரட்டை வேடத்தில் பாகுபலியாக பிரபாஸ், அப்பாவையும் மகனையும் எதிர்த்து ஆட்சியைப் பிடிக்கும் பல்வாள் தேவனாக ராணா டகுபதி, பல்வாள் தேவனின் தகப்பன்  இடது கை சூம்பிய சகுனியாக நாசர்,  குந்தள தேசத்து யுவராணி   தேவசேனாவாக அனுஷ்கா, அனுஷ்காவின் மாமன்  மாறவர்மனாக சுப்பராஜ், இவர்களுடன் ரோகினி ,தமனா ஆகியோரும் தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

ரஜினியை எதிர்த்த நீலாம்பரியாக ரசிகர்களின் மனதில் காலுக்கு மேல்  கால் போட்டு அமர்ந்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக ஜொலிக்கிறார். தில்லான மோகனம்பாள் என்றால் பத்மினி நினைவுக்கு வருவது போல்  நீலாம்பரி, சிவகாமி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் மனதில் தோன்றுவார். ராஜ குடும்பத்து விசுவாசமாக நடக்கும் கட்டப்பாவை பல்வாள் தேவனும் அவரது தகப்பனும் நாய் என்றுதான் அழைக்கிறார்கள். முதல் வெளியான பாகுபலியில் வயது போன தேவசேனையாக  ரசிகர்களின் பரிதபத்துக்கு ஆளான அனுஷ்கா அழகு தேவதையாக மிளிர்கிறார்.

காளகேயருடனான் போரில் வெற்றி வாகை சூடிய பாகுபலியை அரசனாகவும் பல்வாள் தேவனை தளபதியாகவும் ராஜமாதா  அறிவிக்கிறார். மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக பாகுபலி பிற தேசங்களுக்குச் செல்கிறார்.  பாகுபலிக்குத் துணையாக கட்டப்பா  செல்கிறார். குந்தள தேசத்தில் கொள்ளையரின் அட்டகாசத்தை அடக்கும் யுவராணி தேவசேனாவைக் கண்டு பாகுபலி மயங்குகிறார். பயந்தவர் போல் நடிக்கும் பாகுபலிக்கும் கட்டப்பாவுக்கும் உதவி செய்ய தனது நாட்டுக்கு அழைத்துச்செல்கிறார்  தேவதேனா.    . தொடை நடுங்கியான மாறவர்மனிடம் பாகுபலி யுத்தப் பயிற்சி பெறுகிறார்.  தேவசேனாவின்  அழகிய படத்தைக் கண்டு காமம்  தலைக்கேறிய பல்வாள் தேவன், தேவசேனாவை பாகுபலி காதலிப்பதை அறிந்தும் அவளைத் தனக்கு மணமுடித்துத் தரும்படி ராஜமாதாவிடம் கேட்கிறார். ராஜமாதா சம்மதிக்கிறார்.


பொன்னும் பொருளும் கொடுத்து தேவசேனாவைப்  பெண் கேட்கிறார் ராஜமாதா. அதனை அவமானமாகக் கருதிய  தேவசேனா கோபத்துடன் பதில்  கடிதம் அனுப்புகிறார்  அதனால் சீற்றமடைந்த ராஜமாதா, தேவசேனாவைக்கைது செய்யும்படி உத்தரவிடுகிறார். குந்தள தேசத்தில் பாகுபலி இருப்பதை அறிந்த ராஜமாதா அவருக்குத் தகவல் அனுப்புகிறார். குந்தள தேசத்தை கொள்ளைக்காரர்கள்  தாக்கியபோது பாகுபலி தீரமுடன் போராடி அவர்களைத் துவம்சம் செய்கிறார். பாகுபலியின் வீரத்தைக் கண்டு தேவசேனா திகைத்து நின்றபோது கட்டப்பா உண்மையை கூறுகிறார்.

 பாகுபலியின் காதலை கட்டப்பா பகிரங்கப்படுத்த அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். பறவை கொண்டுவந்த தகவலின் மூலம் தேவசேனாவைக் கைது செய்வதாக பாகுபலி தெரிவிக்கிறார். அதற்கு தேவசேனா சம்மதிக்கவில்லை. தேவசேனாவின்   மானத்துக்கும் கற்புக்கும் எதுவிட பங்கமும் ஏற்படாது என பாகுபலி உத்தரவாதமளித்ததால் தேவசேனா கைதியாகச் செல்ல ஒப்புக்கொல்கிறார்.


மகிழ்மதி  நாட்டுக்கு அரசனாக யார் முடிசூடியது?. தேவசேனா யாரைத் திருமணம் செய்தார்? கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? தேவசேனாவுக்குக் கொடுத்த வாக்கை பாகுபலி  காப்பாற்றினாரா? போன்ற கேள்விகளுக்கு சிக்கலின்றி  விடை தருகிறார் ராஜமெளலி.
மதம் பிடித்த யானையை பாகுபலி அடக்குவது. யானையின் மேல் பாகுபலி ஏறுவது.யானையின் மீது இருந்து அம்பு எய்வது.தீச்சட்டியைத் தலையில் வைத்துச்செல்லும் ராஜமாதா  திரும்பிப்பார்த்து கண்ணால் புன்னகைப்பது. பன்றி வேட்டை, .சண்டையின் தேவசேனாவுக்கு பாகுபலி அம்பு எய்யப் பயிற்சியளிப்பது. பட்டாபிஷேகத்தின்போது பாகுபலியில் பெயரை உச்சரித்ததும் நிலம் அதிர்வது. தேவசேனையின் பிரமாண்டமான ஓவியம்  போன்ற சின்னச்சின்ன  விஷயங்கள்  மனதில் நிற்கும்படி படமாக்கப்பட்டுள்ளன.
"உன் அம்மாவின் நாய் வருகிறது," ,"தேவையின்றி ஐயம் கொண்டேன் கட்டப்பா நீ நாய்தான்," "கைதியாக வருவதை விட பணிப்பெண்ணாக வருவதில் திருப்தி" ,"மதியாதார்  வாழும் தேசத்துக்கு மகிழ்மதி என்று பெயர்" , "இதுவே என கட்டளை. அதுவே என சாசனம்" போன்ற வசனங்களால் தியேட்டர் அதிர்கிறது.

லேசா ருத்ராசா, பலே பலே பகுபலி  ஒரே ஓர் ஊரில். கண்ணா நீ தூங்கடா,வந்தாய் அய்யா,. ஒரு யாகம்  ஆகிய பாடல்கள்ளை  மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. திரைக்கதை இயக்கம் ராஜ மெளலி,கதை ராஜமெளலியின் தகப்பன் விஜேந்திர பிரசாத்,இசை மரகதமணி தமிழ் வசனம் கார்க்கி,படத்தொகுப்பு கோத்தகிரி வெங்கடேஷ்வரராவ், ஒளிப்பதிவு செந்திகுமார், கிராபிக் காட்சிகள் வியக்கும் படியாகப் படமாக்கப்பட்டுள்ளன. வசூலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறது..ராஜமெளலியின் இந்த வெற்றிக்குப் பின்னால், அவரின் குடும்பம் பெரிய பலமாக இருந்து வருகிறது. அவரின் அப்பா கூறிய கதையே இதன் அடிப்படை. படத்தின் காஸ்டியூம் டிசைனர்களில் ஒருவர் அவரின் மனைவி ரமா. இசையமைப்பாளர் கீரவாணியும் ராஜமௌலியின் உறவினரே. கீரவாணியின் மனைவியான ஶ்ரீவள்ளிதான் படத்தின் லைன் புரொடியூசர். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா படத்தின் இரண்டாவது யூனிட்டின் இயக்குநர்.
ராஜமெளலியின் வெற்றிக்கு அவரின் குடும்பத்தினர் அனைவரின் துணை இருந்தாலும், குறிப்பிட்ட இருவரின் பங்கு மிக முக்கியமானது.   அந்த இருவர் ராஜமெளலியின் மனைவி ரமா மற்றும் ரமாவின் சகோதரியும் படத்தின் லைன் புரொடியூசருமான ஶ்ரீவள்ளி ஆகியோர்தான். பாகுபலியின் ஆடை வடிவமைப்பாளர்கள் ரமாவும் பிரசாந்தி திப்ரினேனியும் அரசர் காலத்து கதை என்பதால், அரசர், அரசி, அமைச்சர்கள், எதிரி நாட்டு அரசன், பொதுமக்கள் என பலவித உடைகளை வடிவமைக்க வேண்டியிருந்தது. இந்த உடைகளை அவர்கள் இருவரும் மிக நுட்பமாக வடிவமைத்துள்ளனர்.

பாகுபலியின் காலத்தை மனதில் பதிய வைப்பதில் ராஜமெளலி வெற்றி பெற்றுள்ளார்.சண்டைக் கட்சிகள்  நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன.  மனதை  விட்டு சிரிக்கும் கட்சிகள்  படத்துடன் ஒன்றியுள்ளன. 

பாகுபலியின் வெற்றி உலக சினிமாவை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

No comments: