{யோ.நிமல்ராஜ் - தினக்குரல்}
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி
சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை.வெறும் வார்த்தைகளால் அந்த நெருக்கடியை
பதிவு செய்வது போதுமானதொன்றல்ல. தமிழர் நெருக்கடி தொடர்பாக வெளித்தோற்றத்தில் காணப்படும் விடயங்கள் மாத்திரமே இதுவரை
பதிவாகியுள்ளன. ஆழ்மட்டத்தில் காணப்படும் பிரச்சனைகள் சரியான முறையில்
பதிவாகவில்லையென இந்தியாவின் பிரபல ஓவியரும் பல்துறை விற்பன்னருமான ட்ராஸ்கி மருது
கூறினார்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஓவியரும்
கலை இயக்குநருமானமருது வடமராட்சி வதிரி
தமிழ் மன்றத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு
கருத்துத்தெரிவிக்கும் போதே இவ்வாறு
குறிப்பிட்டார்.
ஆவணப்படுத்தலின் அவசியம் தொடர்பாக
இவ்வாறு கூறிய அவர் தனது ஓவியப்பயணம் இலங்கையுடனான தொடர்பு உள்ளிட்ட விடயங்கள்
தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்:
ஓவியப் பயணம்
ஆரம்பத்தில் வீடுகளில் சாறிகள்
நெய்யப்படும்போது அவற்றினை மத்திய அரசாங்கம் மாநியங்களை வழங்கி கொள்வனவு செய்யும்
அவ்வாறான காலப்பகுதியில் நாம் பல்வேறு வடிவங்களை அதாவது தமிழ்க் கலாசாரத்தை
பிரதிபலிக்கும் வடிவங்களை அந்த சாறிகளில் பொறிக்கவேண்டிய பணியினை
தொடர்ந்திருந்தோம்.
அதேபோல பல்வேறு நூதனசாலைகளில் காணப்படும்
ஓவியங்களை வேறு இடங்களிலும் காட்சிப்படுத்துவதற்காக மீண்டும் வரையவேண்டிய
தேவையிருந்தது. அதற்காக என்னைப்போன்ற பலரை அரசாங்கம் பணிக்கமர்த்தியிருந்தது.
பல்வேறு இடங்களிலும் காணப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் அவற்றின் பெறுமதி
அழிந்துவிடாமல் காப்பதற்காக அதேபோன்ற உருவங்களையும் ஓவியங்களையும் நாம் வடிவமைத்து
மக்களிடத்தில் அவற்றைக் கொண்டுசேர்த்தோம்.
இந்தப் பணியைத் தொடர்ந்து 10 ஆண்டுகளின் பின்னர் பத்திரிகைத் துறையில் ஆர்வம் செலுத்தினேன் அது எனது
விருப்பமாகவும் இருந்தது. சிறிய பத்திரிகைகள் தேசிய பத்திரிகைகள், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளில் பணியாற்றுவுதற்கு
சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் காலப்பகுதியில் சினிமாவும் ஆர்வம் ,கணினி வருவதற்கு முன்னரான காலப்பகுதியில்
தந்திரக் காட்சிகளை உருவாக்குவதில் ஓவியர்களின் பங்கு அதிகமாக காணப்பட்ட
காரணத்தினால் அவ்வாறான திரைப்படங்களுக்கு காட்சியமைப்புக்களை உருவாக்கிக்
கொடுப்பதில் கவனத்தை செலுத்திவந்தேன். இவ்வாறான சினிமா, பத்திரிகை இரண்டும்
கலந்ததாக கிட்டத்தட்ட 30 வருடங்கள் அந்தத் துறைகளில்
பணியாற்ற முடிந்தது.
தொடர்ந்து சுதந்திர ஊடகவியலாளராக பல்வேறு
பத்திரிகைகளுக்கு செயலாற்றியிருந்தேன். 1980 ஆம்
ஆண்டில் கணினிகள் வருகைதருவதற்கு ஆரம்பித்த காலப்பகுதியில் அதனைத் தேடி கணினி
மூலமான கிரபிக்ஸ் வடிவங்களை அமைப்பதற்கு கற்றுக்கொண்டேன். அதன்பின்னர் சினிமாவில்
அதிக ஆர்வத்தினை செலுத்தி அதற்குரிய காட்சியமைப்புக்களை வடிவமைப்பதற்கு
சந்தர்ப்பம் கிடைத்தது.
தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளுக்காக
அசையும் காட்சிகளை வடிவமைக்கும் பணி கிடைத்தது. கிட்டத்தட்ட 6 உதவியாளர்களுடன் புதுயுகம் தொலைக்காட்சிகளுக்காக அந்தப் பணிகளை
மேற்கொண்டிருந்தேன். 4 1/2 வருட காலப்பகுதியில் 22
படங்களை புதுயுகம் தொலைக்காட்சி சேவைக்காக நாம் உருவாக்கினோம் அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் கவனம்
செலுத்தி வருகிறேன்.
இலங்கைக்கான வருகையின் காரணம்
முன்னரும் இலங்கைக்கு வருகை
தந்திருந்தேன். தற்பொழுது மட்டக்களப்பில் நடைபெறும் கருத்தரங்கொன்றிற்காக
வருகைதந்திருந்தேன். தமிழகத்தில் ஒரு விடயத்திற்காக நீண்டகாலமாகப் போராடி
வருகின்றோம். அதாவது சகல கலைகளையும் ஒரே பல்கலைக்கழத்தில் கற்பிக்க வேண்டும் என்ற
ஒரு கோரிக்கையை முன்வைத்து நாம் போராடி வருகின்றோம்.
இன்னொரு துறையை கற்கின்ற ஒருவர் மற்றக்
கலைகள் தொடர்பாகவும் அறிந்துகொள்வதற்கு சாதகமான சூழ்நிலையை இவ்வாறான பல்கலைக்கழம்
ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால், மட்டக்களப்பில் இவ்வாறான பல்கலைககழகம் உள்ளது.
அதனை மேலும் நெறிப்படுத்த வேண்டுமென்று ஆலோசித்துவருகின்றோம். குறிப்பாக வீடியோ,
அனிமேஷன், படத்துடனான கதை, சர்வதேச ரீதியில் படத்துடனான கதை பிரபலமான ஒன்று.
எழுத்துடனும் ஓவியத்துடனும் இணைந்து கதைகளை கூறிச்செல்லும் முறை. இவ்வாறான
மாற்றங்களை இந்தக் கல்வித் திட்டங்களில் உட்புகுத்த வேண்டுமென்று மட்டக்களப்பில்
வலியுறுத்தியிருந்தேன். கல்வி கற்கும் மாணவருக்கு சர்வதேச ரீதியில் முன்னேற்றம்
அடைந்து தொழில் ரீதியான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தமிழர் நெருக்கடி
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி சரியான
முறையில் ஆவணங்களில் பதிவாகவில்லை. வெறும் வார்த்தைகளாக அந்த நெருக்கடியினை பதிவு
செய்வது போதுமான ஒன்றல்ல. தொடுபரப்பு அல்லது மேற்பரப்பில் காணப்படம் விடயங்கள்
மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன. அடிமட்டத்தில் உள்ளே காணப்படும் பிரச்சினைகள்
பதிவாகியிருக்கவில்லை.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில்
கலைஞர்கள் தமது படைப்புக்கள் மூலமாக எவ்வாறான விடயங்களை கூறவேண்டுமென்பதில்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொய்யான விடயங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும்
அவர்கள் கூறிவிடக்கூடாது. எந்தக் கோணத்தில் எவ்வாறான கருதுகோளுடன் கலைஞர்கள் தமது
படைப்புக்களை வெளிப்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மற்றக்
கலைவடிவங்கள் அதற்கு எவ்வாறு துணைபுரியும் என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
எதிர்வரும் காலத்தில் செய்திப்
பத்திரிகைகள் அழிந்துவிடும். எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. இன்று
தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்திலுள்ள
அனைவரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.
பயணிக்கும் போது கூட தனித்தனியா ஒவ்வொரு
சாதனங்களில் வெவ்வேறுபட்ட சினிமாக்களையோ நிகழ்ச்சிகளையோ நாம் பார்க்கின்றோம்.
செய்தித் தாள்களில் இறந்த செய்திகளே (பழைய செய்திகளே) கூடுதலாக காணப்படுகின்றன.
சமூக ஊடகங்கள் உடனடியாக ஒரு செய்தியை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. செய்திப்
பத்திரிகைகளில் தயாரிக்கப்பட்ட செய்திகளே கூடுதலாக காணப்படுகின்றது. ஆனால் சமூக
ஊடகங்கள் ஒரு தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. உடனுக்குடன் அவை
தெளிவுபடுத்தப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், ஊடகங்கள் எவ்வாறு
பயணிக்கின்றன. தொடர்பாடல் எவ்வாறு காணப்படுகின்றது. என்பதனை ஆராய்ந்து அடுத்த
தலைமுறையினரும் இவற்றினை தொடரும் வகையில் பாடத்திட்டங்களில் உள்வாங்கப்படவேண்டும்.
இவ்வாறான நிலையில் அனைத்துக் கலைகளும்
இலங்கையில் ஒரு பல்கலைக்கழத்தின் கீழ் கற்பிக்கப்படுகின்றமை மகிழ்ச்சியான விடயம்.
இதற்காக தமிழகத்தில் 90 ஆம் ஆண்டிலிருந்து பல
போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். ஆனால் அது நடைபெறவில்லை. இவ்வாறான
கட்டமைப்புடனான கல்வி இலங்கையில் தொடருமாக இருந்தால் இன்னும் ஒரு சில வருடங்களில்
இதன்பெறுபேறு அர்த்தம் நிறைந்த விளைவுகளை ஏற்படுத்தும். மட்டக்களப்பிலுள்ள
மாணவர்களைப் பார்த்து உரையாடியமை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகவே நான்
கருதிக்கொள்கிறேன்.
கொல்வின் ஆர்.டி சில்வா என்.எம்.பெரேரா
அரசியல் தஞ்சம்
ஆனால், இலங்கைக்கும் எனது தந்தைக்கும்
இடையில் நெருக்கிய உறவு காணப்படுகின்றது. அதுஎவ்வாறெனில் எனது தந்தை 14 ஆவது வயதில் காந்தி ஆச்சிரமத்துக்கு சென்றார். காந்தியுடன் அந்த
ஆச்சிரமத்தில் இருந்தார். மத்திய இந்தியாவிலிருக்கும் அந்த ஆச்சிரமத்தில் 16 ஆவது வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய் எனது தந்தை அங்கு ஒருவருட
காலப்பகுதிக்கு தங்கியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தியும்
அங்கிருந்தார்.
பின்னர் அவர் மீண்டும் மதுரைக்கு
அழைத்துவரப்பட்டார். இவ்வாறான நிலையில் அரசியல் தஞ்சம் கோரி கொல்வின் ஆர்.டி
சில்வாவும், என்.எம்.பெரேராவும் தப்பி இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் அங்கு
அஞ்சாதவாசத்தினை மேற்கொண்டிருந்தது மதுரையில். என்னுடைய தந்தையார் தான் மதுரையில்
ஒரு வீட்டில் தங்கவைத்திருந்தார்.
அங்கிருந்து சென்னைத் துறைமுகம் ,
மும்பைத் துறைமுகத்திற்கு சென்று தொழிற்சங்க வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவரும்போது பெண்வேடம் போட்டு வருகை
தந்திருந்தார்கள். தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் எங்கு
தங்கியிருந்தார்கள் என்பதனை யாரும் அறிந்திருக்கவில்லை. எனது தகப்பனார் அவர்களுடன்
இருந்தார். இதன்காரணமாகவே ட்ராஸ்கி என்ற பெயர் எனக்கு சூட்டப்பட்டிருந்தது.
இதேநேரம், கொல்வின் ஆர்.டி சில்வா என்.எம்.பெரேரா இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கையை
தொடர்ந்தபோது அவர்களில் ஒருவருக்கு திலக் என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதன்
காரணமாகவே எனது இளைய சகோதரனுக்கு திலக் என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்தக்
காரணத்தை அன்றைய சந்தர்ப்பத்தில் எம்மால் உணரமுடியவில்லை. இன்று எம்மால் அதனை
விளங்கிக் கொள்ள முடிகின்றது. அந்த இருவரின் நினைவாகவே அந்தப்பெயர் தந்தையால்
வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துடனான உறவு
அதேபோல, யாழ்ப்பாணத்துடனும் எனது
குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. ராமசாமி என்பவர் எனது
தந்தையாருடன் ஆழமான நீண்டதொடர்பினை கொண்டிருந்தார். எனது தந்தைக்கு முன்னர்
ராமசாமி இறந்த செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்கள் இருவரிடையிலும் காணப்பட்ட
நட்புக் காரணமாக அந்த தகவலை எமது தந்தைக்கு நாங்கள் கூறியிருக்கவில்லை. 6 மாதங்களின் பின்னரே அந்தத் தகவலை கூறியிருந்தோம். ஆனால் நீங்கள் எனக்கு
கூறவில்லையானாலும் அவரது மரணத்தை என்னால் உணரமுடிந்தது என தந்தை என்னிடம்
குறிப்பிட்டிருந்தார்.
ராஸ்கியைப் பற்றிய புத்தகம் ஒன்றினை
ராமசாமிதான் எழுதியிருந்தார். தந்தையாரிடமிருந்த தகவல்களின் அடிப்படையில் அந்த
நூல் எழுதப்பட்டது. ஆனால், தமிழில் அது வெளியாகியிருக்கவில்லை.
எனது தந்தை இறந்தபோது எஸ்பொ.
வருகைதந்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரும் நினைவுகூர்ந்திருந்தார். எனது
தந்தையாரைப் பற்றி எஸ்.பொ. எழுதியபோது என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா
ஆகியோரின் தலைமறைவு வாழ்க்கைக்கு தமிழர்களே உதவியாக குறிப்பிட்டதுடன், பின்னர்
அவர்கள் தமிழர்களின் எதிரிகளாக மாறிவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களின் தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்த
நிலையில், அவர்களின் இருப்புக்கு அங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அந்தச்
சந்தர்ப்பத்தில் பொலிஸார் உட்பட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களை எதிர்நோக்க
வேண்டிய நிலையேற்பட்டது.
இவ்வாறான நிலையில் அவர்கள் அங்கிருந்து
வெளியேற வேண்டிய நிலையேற்பட்டபோது எனது தந்தையாரிடம் கூறிவிட்டுச் செல்வதற்காக
வீட்டிற்கு வருகைதந்தபோது தந்தையார் வீட்டில் இருக்காத நிலையில் எனது
பூட்டியாரிடம் பயணத்தை கூறிவிட்டு சென்றிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்திலும்
பொலிஸார் வருகை தந்தபோது பூட்டியார் கூட அவர்களை பாதுகாத்ததாக கூறப்படுகிறது.
மரபு ரீதியான ஓவியங்களும் சமகால
ஓவியங்களும்
கேள்வி ; உணர்வு ரீதியான விடயங்களை
வெளிப்படுத்த பொருத்தமான முறை சமகால ஓவியங்களா மரபுரீதியிலான ஓவியங்களா?
பதில் :சமகால ஓவியங்கள் எவ்வாறான
வடிவத்திலும் காணப்படலாம். ஆனால் அவை உண்மையானதாக இருக்கவேண்டும். சமகால
ஓவியத்தினை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். படைப்பாளன் அதனை உணர்ந்து உண்மையாக
அந்தப் படைப்பினை வெளிப்படுத்த வேண்டும். ஆனால்இ இந்த சமகாலத்தை ஓவியத்தை
படைப்பதாக இருந்தாலும்இ புலமை ரீதியாக அடிப்படை விடயங்களை அறிந்து அதனைக்
கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. கல்வியியல் ஒழுக்கம் சகல விடயங்களுக்கும்
அவசியமானது. இவை அனைத்திலும் பின்னர்தான் ஓவிய வடிவங்களை எம்மால் மாற்றிக்கொள்ள
முடியும். உருவத்தைத் தெரியாமல் அருவத்தை
வரைய முடியாது. சும்மா கிறுக்குவது
ஓவியமாகிவிடமுடியாது. அதேபோல் பார்வையாளர்களும் பயிற்சி பெற்றவர்களாக
இருக்கவேண்டும். பார்த்தவுடன் சில ஓவியங்களை விளங்கிக் கொள்ள முடியாது. ஆழமாக
நோக்கிய பின்னரே ஓவியங்களின் ஆழமான அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியும். கடுமையான
பயிற்சியை தவிர்த்து தற்கால ஓவியத்துக்கு சென்றுவிட முடியாது.
அடிப்படை கல்வி ஒழுக்கங்கள் இன்றி சரியான
பயிற்சி இல்லாமல் சமகால ஓவியங்களை வரைவதன் மூலம் முழுமையான அர்த்தத்தினை
வெளிப்படுத்த முடியாது. ஓவியங்களை அவ்வாறு வரையலாம் ஆனால் ஒரு சில நாட்களில்
அந்தப் படைப்பாளர் ஒதுங்கிச் செல்லவேண்டிய நிலையேற்படும்.
தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள்
உள்ளன. அவ்வழிமுறைகளை சரியாக கற்றுக்கொண்டு தொடர்பினை ஏற்படுத்தினால்தான்
இருவருக்கிடையிலான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
கேள்வி ; கணனி ஓவியங்கள் கிராபிக்ஸ்
வளர்ச்சிகாரணமாக எதிர்காலத்தில் கை ஓவியங்கள் மறந்துவிடும் சாத்தியம் உள்ளதா?
பதில் : கணனி ஓவியங்களால் மரபு ரீதியான
ஓவியங்கள் அழியவோ மறைய்யஅவோ போவதில்லை. கணனி ஒரு சாதனம் நாம் கூறுவதனை
செய்கின்றது.மனிதர்களின் அறிவின் மூலமே அதுவும் செயற்படுகின்றத்கு.கணனிகள் பணிகளை
சுருக்குகின்றன. ஆனால் மனித புலமையே அதற்கு பயன்படுகின்றது.எந்த சந்தர்ப்பத்திலும்
அது தொடர்ந்து செயற்படுகின்றது. ஆனால் உண்மையான மென்பொருள் என்பது மனிதர்கள்
மட்டுமே.
No comments:
Post a Comment