Saturday, June 3, 2017

ரஜினியின் அரசியல் விளையாட்டு

 தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்தியாகத் திகழும் ரஜினிகாந்தின் குரல் அவ்வப்போது அரசியல் அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.சினிமா என்ற மாய உலகில் யாருமே எட்டமுடியாத உச்சத்தில் இருக்கும் ரஜினி அரசியலிலும் உச்சத்தை எட்ட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம்  தமிழக அரசியலும் சினிமாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன.தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் தமிழக அரசியலிலும் கால்பதித்துள்ளார்கள். அண்ணாத்துரை,கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சரானவர்கள்.தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்கள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழக சட்ட மன்ற  உறுப்பினராகவும் தெரிவாகி மக்களுக்குச் சேவையாற்றினார்கள்.அரசியல் ஆசையில் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் இடையில் காணாமல் போய்விட்டார்கள்.
திரைப் படங்களில் அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மக்களின் அபிமானத்தைப் பெற்ற ரஜினி அரசியலிலும் அதேபோன்று செய்வர் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கருணாநிதி அரசியலில்  கால் பாதித்தபோது பெரியாரின் தலைமையில் அண்ணாவின் தம்பியாகச் செயற்பட்டார். அண்ணா மறைந்ததும் முதலமைச்சரானார். கருணாநிதியின் தலைமையில் அரசியலில் அரசியலில் ஜொலித்த எம்.ஜி.ஆர்,திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து முதலமைச்ரானார்.


எம்.ஜி.ஆரி ஜோடியாக சினிமாவில் அறிமுகமான ஜெயலலிதா, அரசியலில் எம்.ஜி.ஆரின் வழியைப் பின்பற்றினார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசியலின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்  தமிழகத்தின் முதலமைச்சரானார்.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் முதலமைச்சர் கனவுடன் அரசியலுக்கு வரவில்லை.களமும் சூழ்நிலையும் அவர்களை முதலமைச்சராக்கியது. அண்மைக்காலமாக அரசியலுக்கு வருபவர்கள் அனைவரும் முதலமைச்சராவதற்கு ஆசைப்படுகிறார்கள்;. ரஜினியும் இதற்கு விதிவிலக்கல்ல.
கட்சித் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் அரசியல் தலைவர்களாக உருவெடுத்தார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் இதற்கு நேர் மாறானது. முதலமைச்சர் என்ற அந்தஸ்துடன் அவர் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளில் ரஜினியின் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவர்கள் அக்கட்சிகளில் இருந்தது வெளியேறிவிடுவார்கள். ரஜினி ரசிகர்களின்  வெளியேற்றம் அக் கட்சிகளின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்குமா என்பதை உடனடியாகக் கணிக்க முடியாது.


ரஜினியின் ரசிகர்களில் அதிகமானோர் அறுபது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். இன்று ரஜினியை ரசிப்பவர்கள் தேர்தலில் அவருக்காக வேலை ஊக்கத்துடன் செய்வார்களா என்பதை உறுதியாகச்சொல்ல முடியாது. அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கான சகல ஆயத்தங்களையும் செய்தபின்னர்தான் ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்தார்.  ரசிகர்களை அவர் முன்பு சந்தித்தபோது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. கடந்த வாரம் ரசிகர்களைச்சந்தித்த ரஜினி அரசியல் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசி உள்ளார்.

தமிழக அரசியலில் பலமான ஒரு தலைவர் இல்லாத நிலை உள்ளது. இரும்புப்பென்மணி ஜெயலலிதா மறைந்து விட்டார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அரசியல் சாணக்கியர் கருணாநிதியின் குரல் அடங்கி விட்டது. தலைமை இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல தலைவர்களால் வழி நடத்தப்படுகிறது. ஸ்டாலின் மட்டும் அரசியல் களத்தில் பம்பரமகச் சுழல்கிறார். மற்றைய தலைவர்கள் அறிக்கையை வெளியிட்டு விட்டு அமைதியாக இருக்கிறார்கள். இந்த இடை வெளியை நிரப்புவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி   காய் நகர்த்துகிறது. அக் கட்சியால்  வெற்றி பெற முடியவில்லை.
 ரஜினியை வளைப்பதற்கு பாரதீய ஜனதாத்  தலைவர்கள் பல தடவை முயற்சி செய்தனர். ரஜினியின் வீட்டுக்கு பிரதமர் மோடியும் வேறுபல தலைவர்களும் சென்று ரஜினி தமது பக்கம் என்ற மாயையை உருவாக்கப் பார்த்தனர். ரஜினி எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விட பாரதீய ஜனதாக் கட்சியின்  தலைவர்களுடன் ரஜினிக்கு நெருக்கம் அதிகம். தமிழகத்தில் கருணாநிதி, மூப்பனார் ஆகிய இரண்டு தலைவர்கள் மீதும் ரஜினி மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார். அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்த காலம்  சென்ற சோவின் ஆலோசனையையும் ரஜினி வழிநடத்தியது.


திரைப்படங்களில் அரசியல் வசனம் பேசி கைதட்டல் வாங்கிய ரஜினி, பாட்ஷாபட  வெற்றி விழாவில் பகிரங்கமாக அரசியல் பேசி ஜெயலலிதாவின் எதிர்ப்பைச்சம்பாதித்தார். கருணாநிதியும் மூப்பனாரும் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட போது அந்தக் கூட்டணியின் வெற்றிக்காகக் குரல் கொடுத்தார். அந்தத் தேர்தலில் ரஜினி குரல் கொடுத்த கூட்டணி வெற்றி பெற்றது.. அப்போது ரஜினியின் குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவே அந்த வெற்றி கருதப்பட்டது. ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் இருந்து கருணாநிதியும் மூப்பனாரும் ரஜினியைக் காப்பாற்றிய உண்மை மழுங்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் ரஜினியின்  குரல் ஒலித்தது..ஆனால்,அந்தக்குரலுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை.

பாபா படம் வெளியானபோது ராமதாஸின் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தியது. அப்போது நடைபெற்ற  இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாடாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்ததால் ரஜினிகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களித்தார். அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி தமிழகத்தின் சகல தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அப்போதும் ரஜினியின் குரல் மதிப்பிழந்தது.தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்போது அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் ரஜினியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எல்லா வேட்பாளர்களுடனும் சிரித்தபடி போஸ் கொடுப்பார் .கொள்கை அற்ற அரசியல் ஆதரவளராக ரஜினி நோக்கப்படுகிறார். 

தமிழக அரசியலில் இக்கட்டான நேரத்தில் ரஜினி குரல் கொடுத்ததில்லை. இலங்கைத் தமிழர்கள் பற்றிய ரஜினியின் பார்வை வெளிப்படையானதாக இல்லை. முல்லைப்பெரியாறு, கர்நாடகத்துடனான காவிரி நீரப் பங்கீடு போன்ற பிரச்சினைகளில் ரஜினி  அதிகமாக ஆர்வம் காட்டியதில்லை. சென்னையை வெள்ளம் புரட்டியபோது சினிமாவில் உள்ளவர்கள் களத்தின் நின்று உதவி செய்தார்கள். புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்திய மோடியின் அரசாங்கம் பழைய நோட்டுகளை செல்லாது என அறிவித்தபோது. மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதற்கு ஆதரவு தெரிவித்த ரஜினி  புதிய இந்தியா பிறந்துவிட்டது என அறிவித்தார்.


சினிமாப் பிரபலங்கள் தமது ரசிகர்களுக்கும் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். கமல் நற்பணி மன்றம் உடலுறுப்பு தானம் செய்துள்ளது.  நடிகை ஹன்சிகா அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார். .ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகள் அளப்பரியது.அகரம் என்ற அறக்கட்டளையின் மூலம் சிவகுமார், சூர்யா கார்த்திக் ஆகியோர் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். விஜய் தனது ரசிகர்களை அவ்வப்போது ஆச்சரியப்படுத்துகிறார். இந்த வரிசையில் ரஜினி என்ன செய்தார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர்களைக் களம் இறக்கி நோட்டம் பார்த்து கட்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் ரஜினி இருப்பதாகக்கூறப்படுகிறது. கட்சியின் பெயர் இன்றி ரஜினியின் ஆசிபெற்ற  என்ற அறிமுகத்துடன் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தலின் முடிவின் பின்னர் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு  வெளியாகும். இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.

கருணாநிதிக்கும் மூப்பனாருக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்ததை அரசியல் விபத்து எனக் கூறி பிராயச்சித்தம் தேடி உள்ளார் ரஜினி. அந்தச்சம்பவம் நடைபெற்று இரண்டு தசாப்தங்கள் கடந்தபின்னர் ரஜினிக்கு ஞானம்  பிறந்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசியல் பற்றி வெளிப்படையாகப்பேசி  போருக்குத் தயாராகுமாறு ரசிகர்களுக்கு  சமிக்ஞை காட்டியுள்ளார். பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளவர்களை சேர்க்கமாட்டேன் என ரஜினி உறுதியளித்துள்ளார். அரசியல் என்றால் பொதுச்சேவை என்ற எண்ணம் ஒருகாலத்தில் இருந்தது. பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளவர்கள்  இன்று அரசியலை ஆக்கிரமித்துள்ளார்கள். உண்மையான சமூக நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளை ரஜினி எப்படித் தெரிவு செய்வர் எனத் தெரியவில்லை.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சிலர் வரவேற்கிறார்கள். சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். அரசியல் கட்சிகளைச்சேராத நடுநிலையான வாக்களர்களைக் கவர  வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு உள்ளது.  கட்சித் தலைமையால் ஓரங்கட்டப்பட்டவர்கள் ரஜினியின் பக்கம் திரும்பியுள்ளனர்.தமிழருவி மணியன்  ரஜினியைச் சந்தித்ததால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  மாற்றீடாக‌ மக்கள் நலக் கூட்டணியை  அமைப்பதில் பெரும் பங்காற்றிய  தமிழருவி மணியன், ரஜினியைச் சந்தித்ததால் சில கட்சிகள் ரஜினியுடன் சேர வாய்ப்பு உள்ளது.
பச்சைத் தமிழன் என ரஜினி தன்னை அறிவித்ததால் அவரது அவரது அரசியல் ஆசை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வர்மா

No comments: