வருமானத்துக்கு
அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நான்கு வருட சிறைத்தண்டனை பெற்ற சசிகலா இலஞ்சம்
கொடுத்து சிறையில் சலுகைகள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டால் கர்நாடக அரசுக்கு
சிக்கல் எழுந்துள்ளது. காங்கிரஸும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகமும் அரசியலில் இருதுருவங்களாக இருக்கின்றன. கர்நாடக
காங்கிரஸ் சசிகலாவுக்கு உதவி செய்வதில் ஆர்வம்
காட்டுகிறது. அங்கு காங்கிரஸை விழுத்த காத்திருந்த பாரதீய ஜனதாக் கட்சி புகுந்து விளையாடியுள்ளது.
வருமானத்துக்கு
அதிகமான சொத்து குவித்த வழக்கின் முதலாவது எதிரியான ஜெயலலிதா மரணமானதால் அவரது
பெயர் வழக்கில் இருந்து விடுபட்டது இரண்டாம்.மூன்றாம், நான்காம் எதிரிகளான சசிகலா,
இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட
சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. சசிகலா சிறையில் இருந்துகொண்டே அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்த முயற்சிகள்
அனைத்தும் கைநழுவிப் போயின. இப்போது இலஞ்சம் கொடுத்து சலுகை பெற்ற குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமியின்முன்னால் இருந்த முட்டுக்கட்டை
விலகி உள்ளது.
சிறையில் நடைபெறும்
வழமையான சோதனையின் போது சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பற்றிய தகவல் தெரிய
வந்தது எனக் கூறப்பட்டது. கர்நாடக ஆளும் கட்சியான
காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே ரூபா
கர்நாடக சிறைத்துறைக்கு மாற்றப்பட்டதாக
தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. போதைப் பொருள், கைத்தொலைபேசி போன்றவற்றை
சிறையில் பாவிக்க முடியாது. திடீரென நடைபெறும்
சோதனையின்போது தடை செய்யப்பட்ட பொருட்கள்
சிறையில் சிக்குவதும் காலப்போக்கில் அவை மீளவும் பாவனைக்கு வருவதும் புதிய
விடயமல்ல.
பெங்களூர் பரப்பான அக்ரஹார சிறையில் கைதியாக இருக்கும் சசிகலாவின் செல்லுடன்
மேலதிகமாக ஐந்து அறைகள் அவருக்கு வழங்கப்பட்டடு அவற்றுள் குக்கர் சமையல் பாத்திரங்கள் மெத்தை தலையணை
போன்றவை இருப்பதைக் கண்ட டி.ஐ.ஜி ரூபா அதுபற்றிய விபரங்களை மேலிடத்துக்கு அனுப்பினார்.
அந்த இரகசியத் தகவல் கசிந்து செய்தியாக வெளியானதும், ரூபாவின் அறிக்கை பொய்யானது
என டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ரூபா அவை
எல்லாம் உண்மை என்னிடம் ஆதாரம் இருக்கிறது
எனத் தெரிவித்தார்.இரண்டு அதிகாரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கைகளை
வெளியிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கர்நாடக தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான வீடியோக்கள் நிலைமையை
மேலும் சிக்கலாக்கின.
சிறைத்தண்டனைக் கைதியான சசிகலா கைதியின் உடை
இல்லாமல் நைற்ரியுடன் உலாவுவது, சசிகலாவும்
இளவரசியும் சல்வார் உடையுடன் தோழில் பையைத் தூக்கிக்கொண்டு நடப்பது அவர்களுடன்
சிறை காவலர் சீருடையுடன் பெண் ஒருவர்
நிற்பது போன்ற வீடியோக்கள் தொலைக் கட்சியில் ஒளிபரப்பாகி அதிர்ச்சியை
ஏற்படுத்தின. இதைப் போன்று மேலும் இரண்டு வீடியோக்கள்
இருப்பதாக வெளியான செய்தியால் பலர் கலக்கத்தில் உள்ளனர்.அவை சிசிரிவி கமராவில்
பதியப்பட்டவை என்றும் திட்டமிட்டு கைத் தொலைபேசியில் பதியப்பட்டு வெளியிடப்பட்டவை
என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் பாகுபலியை மிஞ்சிய
கிராபிக்ஸ் என சசிகலாவுக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலையின்
விதிகள் அனைத்தும் மீறப்பட்டு சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டிருப்பது
அப்பட்டமாகத் தெரிகிறது. இதற்காக இரண்டு
கோடி ரூபா இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. அது
தவிர சிறைச்சாலையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மாதாந்தம் இலட்சக்கணக்கான பணம்
விநியோகிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம்
திகதி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 13 நாட்கள்
தான் சிறையில் இருந்ததாகவும் மிகுதி நாட்களில் அவர் சொகுசு மனையில்
தங்கியதாகவும் இன்னொரு தகவல்
கசிந்துள்ளது. உயர் அதிகாரியின் காரில் சசிகலாவும் இளவரசியும் அடிக்கடி வெளியில்
சென்று வந்தார்கள். சொப்பிங் சென்றார்கள். என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சிறைக்கைதி ஒருவரை
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் பார்வையாளர்கள் சந்திக்க முடியும் சசிகலாவின்
விடயத்தில் இந்த சிறைச்சாலை விதி மீறப்பட்டுள்ளது. 117 நாட்களில் 82 பார்வையாளர்கள் 32 முறை
சந்தித்திருக்கிறார்கள். சட்டப்படி எட்டுப்பேர்தான் சசிகலாவைப் பார்த்திருக்க
வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம் இது பற்றி விளக்கம் கோரி கர்நாடக டிஜிபிக்கு
நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போயஸ்காடனில் வேலை பார்த்த ரஜினி எனும் பெண் சிறையில் சசிகலாவுக்கு சமைத்துக் கொடுத்ததாகவும் செய்தி
வெளியாகி உள்ளது. சிறைககைதியான சசிகலாவின் அறையில் குக்கர்,சமையல்
பாத்திரங்கள்,பாய்,தலையணை ஆகியன இருக்கும் படங்கள் சமூக அவைத் தளங்களில்
வெளியாகின.
இரட்டை
இலைச்சின்னத்தைப் பெற இலஞ்சம் கொடுத்த
புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டபோது அவருடன்
தொடர்புடைய பலரை டில்லி பொலிஸார்
விசாரணை செய்தனர். மல்லிகார்ஜுனின் நண்பர் பிரகாஷ் என்பவரை விசாரித்த டில்லி
பொலிஸாருக்கு அதிர்ச்சிகரமான புதிய தகவல் ஒன்று கிடைத்தது. கர்நாடக முன்னாள்
உள்துறை அமைச்சர் பரமேஸ்வரனின் உதவியாளரான பிரகாஷ் கொடுத்த அந்தத் தகவலால் கர்நாடக அரசை உலுக்கி உள்ளது. இரட்டை
இலைச்சின்னத்தைப் பெறுவதற்காக பிரகாஷ் மூலம் பணப்பட்டுவாடா எதுவும் நடைபெறவில்லை.
சசிகலவுக்காக கர்நாடகச் சிறையில் பணம் கொடுக்கப்பட்டதை பிரகாஷ் தெரிவித்தார்.
இந்தத்தகவல் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டதும் மத்திய மந்திரி ஒருவரின் சிபார்சில்
சசிகலா இருக்கும் சிறைக்கு டிஜிபியாக ரூபா
அனுப்பபட்டார்.
பெங்களுருவில்
இருந்து சுமார் 300
கிலோ
மீற்றர் தூரத்தில் உள்ள தாவன்கேரே என்ற ஊரைப் பூர்வீகமாகக்கொண்டவர் ரூபா. 2000 ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபது
விருது பெற்றார். கர்நாடக மாநில பிதர் எஸ் பியாகப் பொறுப்பேற்றபின் கனிமவளக்
கொள்ளையைக் கட்டுப்படுத்தினர். அதன் பிரதிபலனாக இஅடமர்ரம் செய்யப்பட்டார்.
துணிச்சல் மிக்க ரூபா அரசியல்வாதி அதிகாரி எனப் பாரபட்சம் கட்டாமல் கைது செய்வார்
அல்லது எச்சரிக்கை விடுப்பார். ரூபாவின் பெயரைக் கேட்டாலே குற்றவாளிகள்
நடுங்குவார்கள். பரப்பன அக்ரஹார சிறைக்கு
ரூபா மாற்றப்பட்டதும் அவரைப்பற்றித் தெரிந்தவர்கள் அதிரடியை எதிர்பார்த்தார்தகள். அவருடைய அறிக்கையால் சசிகலாவுக்கும் அவருக்கு
உதவிய அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுக்கது.
கர்நாடகா உள்துறை செயலர், ஊழல் தடுப்புத் துறை
இயக்குநர், காவல்துறை
ஐ.ஜி ஆர்.கே தத்தா ஆகியோருக்கு, சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ரூபா,ஜூலை 12 ஆம் திகதி புகார் அறிக்கை ஒன்றை
அனுப்பினார்.
அதில், 'சிறைக்குள் இருக்கும் சசிகலாவுக்கு
சிறையில் வழங்கப்படும் உணவு, மருந்துகளைக் கொடுக்காமல், வீட்டிலிருந்து சமைத்து
எடுத்து வருவதற்கும், சிறைக்குள்ளேயே
சமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிறை என்றே அறியாத வண்ணம் ஒரு
சொகுசு வாழ்க்கை வாழ, சிறைத்துறை
டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்கு சசிகலா தரப்பு ஒரு கோடி ரூபாய் லஞ்சம்
கொடுத்துள்ளது. ஏனைய சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்
உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஒரு கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மொத்தம்
இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
"நான் எந்த லஞ்சமும் வாங்கவில்லை.
சசிகலா சாதாரணக் கைதியைப் போலவே நடத்தப்படுகிறார்" என்று பெங்களூரில்
செய்தியாளர்களைச் சந்தித்து
சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயண ராவ், அன்று விளக்கமளித்தார்.
அன்றே, இதற்குப் பதில்
தரும்விதமாக சிறை டி.ஐ.ஜி ரூபா, "என்னிடம் அனைத்துக்கும்
ஆதாரம் உள்ளது. கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி என்ற அடிப்படையில், அவர் மீதான புகாருக்காக
சத்தியநாராயண ராவுக்கும் நான் புகார் கடிதம் அனுப்பியுள்ளேன். என்மீது எந்த
நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. கேட்கும்போது முழு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கத்
தயாராக உள்ளேன்" என்றார்.
இதன் தொடர்ச்சியாக, ஜுலை 17ஆம் திகதி சிறைத்துறை
பொறுப்பில் இருந்து, பெங்களூரு நகர போக்குவரத்துத்
துறைக்கு ரூபாமாற்றப்பட்டார்."ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது
துறை ரீதியிலான நடவடிக்கையே ஆகும்" என்று விளக்கமளித்துள்ளார் கர்நாடகா
முதல்வர் சித்தராமையா. சிறைத்துறைக்
கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரின் பதவி பறிக்கப்பட்டது. டிஜிபி சத்தியநாராயண ராவ்
காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.
பாரதீய
ஜனதாக் கட்சி எறிந்த ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுந்திருக்கின்றன.
அதாவது, சசிகலாவுக்கும்
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் சிறை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கமாக சிறைக்குள் இருக்கும் வி.வி.ஐ.பி.க்களுக்கு இத்தகைய சலுகைகள் என்பது
சர்வசாதாரணம். ஆனால், அதை ரூபா வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் பின்னணியில் ஓர் அரசியல் சதுரங்க
வேட்டை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்குப்பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தில் மாற்றங்கள் இருப்பதற்கான
அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் சசிகலா சிறை விவகாரம் சூடுபிடித்துள்ளது.
சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகம் என்று அந்த அணியினர் சொல்கின்றனர்.
ஏற்கெனவே
இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் டெல்லி பொலிஸார் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில்
டி.டி.வி. தினகரனின் பெயர் இடம் பெறவில்லை. இதை
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், டெல்லி பொலிஸ் , அடுத்த குற்றப்பத்திரிகையில் நிச்சயம்
டி.டி.வி.தினகரன் பெயர் இடம் பெறும் என்று சொல்கின்றனர். டி.டி.வி.தினகரன் மீதான
பிடி விலகுவதாகத் தெரிந்தாலும் அவரும் பாரதீய ஜனதாவின் கண்காணிப்பில் இருப்பதகச்
சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி
விசாரிப்பதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை மூடி
மறைப்பதற்கு தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ரூபா தெரிவித்துள்ளார். முன்னதாக விசாரணை
செய்யும் போது சசிகலா மிரட்டியதாகவும் தெரியவருகிறது. பரப்பான சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார் கொலைக்கதியான கியாத்தே சேட்டனின் பிறந்தநாளன்று பிஸ்ரல்
வடிவிலான கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டதாக படத்துடன் சமூக வலைத்தளத்தில் செய்தி
வெளியாகி உள்ளது.அந்தப் பிறந்தநாள்
கொண்டாட்டத்தில் சிறை அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர். முத்திரை மோசடி
மன்னன் தெல்கிக்கும் சலுகைகள்
வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளைத் திருத்துவதற்கு அமைக்கப்பட்ட
சிறைகளில் செல்வாக்கு உள்ளவர்களும் வசதி உள்ளவர்களும் அவ்வப்போது செய்திகள்
வெளியாவதும் பின்னர் அவை மறுக்கப்படுவதும் வாடிக்கையான சம்பவங்கள். நீதியான விசாரணை நடைபெற்று உண்மை வெளிவரும்போது அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற வாய்ப்புஉள்ளது.
No comments:
Post a Comment