Saturday, August 12, 2017

எப்பயமும் எனக்கில்லை


ஐந்து கரங்களில் ஒரு கரத்தில்
அங்குசமும் மறு கரத்தில் பாசமும்
அபயக்கரம் காட்டி அருள்
பாலிக்கும். மறுகரத்தில் லட்டும்
தும்பிக்கையில் குடமும் கொண்டு
நம்பிக்கையாய் வந்தவர்க்கு
தும்பிக்கையால் அருள் பாலிப்பவர் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 1

ஈரேழு உலகமும் ஈன்றெடுத்த 
தாய் தந்தையர் என
உலகுக்கு உணர்த்தியவரும் 
அறுகம்புல்லின் புனிதமான வாசனையிலும் 
சந்தனத்தின் மஞ்சளிலும் பால் 
அபிஷேகத்தில் என்றும் உறைபவரும்
ஆனையின் வடிவமானவர் என்
உடனிருக்கு எப்பயமும் எனக்கில்லை. 2

வான் மதியின் முழு ஒளியையும்
தன் கண்களினுள் அடக்கி
ஆகாயம் போன்ற பரந்த மனதைக் கொண்டவரும்
தீ போன்று அசுரருக்கு கனலாயிருப்பவரும்
காற்றைப்போன்று எங்கும் கரைந்திருப்பவரும்
நிலத்தைப்போன்று நீண்டு வியாபித்திருப்பவரும்
நீரைப்போன்று நித்தியமாயிருப்பவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 3

எழில் கொஞ்சும் சோலையிலே
வண்டுகள் இடும் ரீங்காரத்தில் பிரணவத்தின்
பொருளாய் திகழ்பவரும்
வள்ளியை மணம் புரிய
முருகனுக்கு உதவிய ஆனை முகத்தவரும்
பார்வதியின் பாசத்திற்குரிய
பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 4


வியாசருக்கு தன் தந்தத்தை முறித்து
பார் போற்றும் பாரதம் மகாபாரதமாக
உருவெடுக்க உதவிய
வேத நாயகனாகிய விநாயகரும்
பிரம்மனின் மகள்களாகிய
கமலையையும் வல்லியையும் வல்லீஸ்வரர்
அருளால் கரம் பிடித்த கணபதியும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 5

முதற்படை வீடாகிய திருவண்ணாமலையில்
அருணாச்சலேஸ்வரரோடு திகழும்
அல்லல்போம் விநாயகரும்
இரண்டாம் படைவீட்டிற்குரிய விருத்தாச்சல
விருத்தகிரீஸ்வரருடன் உறையும் ஆழத்துப் பிள்ளையாரும்
எமனை ஈஸ்வரன் உøத்த மூன்றாவது படைவீடான
திருக்கடவூரில் உள்ள கள்ளவாரணப் பிள்ளையாரும்என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 6


நான்காவது படைவீடாகிய மதுரை மீனாட்சியம்மனுடன்
உள்ள முக்குறுணி விநாயகரான
சித்தி விநாயகரும் பிள்ளையார் பட்டி காசியை
ஐந்தாவது படைவீடாக கொண்ட
வலம்புரி விநாயகரும் துண்டி விநாயகரும்
ஆறாவது படைவீடான திருநாரையூரில்
அருள் பாலிக்கும் பொல்லாப் பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமம் எனக்கில்லை. 7

மனிதனைப் போல இரு கரங்களைக்
கொண்ட கற்பக விநாயகரும்
வரங்களை வாரி வழங்கும்
வரதராஜ விநாயகரும்
நம்பியின் மூலம் திருமுறைகளை உலகுக்கு
வெளிப்படுத்திய வலம்புரி விநாயகரும்
தேவர்களுக்கு அமிர்த கலசத்தைக் கொடுத்தவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 8

ஈஸ்வரனின் புதல்வனே இன்பமாக
என்னுள் உறையும் ஐந்து கரத்தோனே
லம்போதர சுதனே உமைக்கு
உண்மையாயிருந்த உத்தமனே
முருகனுக்கு மூத்தவனே
மாயவனுக்கு மருமகனே
மூஷிக வாகனனே மோதகப் பிரியனே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 9

முக்காலமும் ஒரு காலமாய் முற்றாக
உணர்ந்த மூலப் பொருளோனே
எக்காலமும் அடியாருக்கு துணையாக
வருகின்ற சுந்தர விநாயகனே
ஆலமர்ச் செல்வனின் புதல்வனே
பூவற்கரையில் அருள் பாலி¬க்கும்
பூவற்கரைப் பிள்ளையாரே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 10

தாட்ஷா வர்மா

No comments: