பாரதீய ஜனதாக்
கட்சியை எதிர்க்கும் பலமான கட்சிகளைப் பலவீனப்படுத்தி சிதைத்து ஆட்சியை பிடிக்கும்
ராஜதந்திரத்தைக் கனகச்சிதமாக அரங்கேற்றி வருகிறது மோடி, அமித்ஷா கூட்டணி. பாரதீய ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மூக்கை நுழைத்து அங்கு தமது ஆதிக்கத்தை இவர்கள் நிலை நாட்டுகிறார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை வாலாட்டாது அமைதியாக இருந்த மோடி, அவர் இறந்ததும்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை
மூன்றாக உடைத்துள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்ச்செல்வம்,தினகரன் ஆகிய
மூவரின் தலைமையில் இயங்கும் நிர்வாகிகள் தமிழக மக்களைப்பற்றிக் கவலைப்படாது
ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் முயற்சிக்கிறார்கள். மோடி தலைமையிலான மத்திய
அரசு இதற்குத் துணை போகிறது.
காங்கிரஸின் ஆட்சியில் உள்ள புதுவையில் பாரதிய ஜனதாவின்
முகவர் போல் செயற்படும் ஆளுநர் கிரண் பேடி, முதல்வர்
நாராயனசாமிக்குக் குடைச்சல் கொடுக்கிறார்.
பாரதீய ஜனதாக் கட்சி வடமாநிலங்களிலும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. பீகாரில் எதிர்க்கட்சியாக
இருந்த பாரதீய ஜனதா அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. லல்லு பிரசாத்
யாதவ், சோனியா ஆகியோரின் ஆதரவுடன் பீகார்
மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். லல்லுவின் இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வரானார் லல்லுவின்
குடும்பத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிரடிச்சோதனை
நடத்தியது. அவர்களுக்குக் கிடைத்த ஆவணங்களின்
அடிப்படையில் லல்லு, தேஜஸ்வி ஆகியோரின்
மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்த துணை முதல்வர் தேஜஸ்வியைப் பதவி விலகும்படி
முதலமைச்சர் நிதிஷ்குமார் வேண்டுகோள்
விடுத்தார். வெளிப்படையாகப் பார்த்தால் நிதிஷ்குமார் ஊழலுக்கு எதிரானவர் போன்ற
தோற்றம் ஏற்படும்.
நிதிஷ்குமாருடன்
கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்பே
லல்லுகுடும்பத்தின் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதெல்லவற்றையும் தெரிந்து கொண்டுதான்
நிதிஷ்குமார் லல்லுவுடன் கூட்டணி அமைத்து
முதலமைச்சரானார். நிதிஷ்குமாரின் இன்றைய அறிக்கையைப் பார்த்தால் லல்லுவின் மகன் இந்த ஆட்சியில் ஊழல் செய்தது
போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. தனது வேண்டுகோளை
துணை முதலமைச்சர் தேஜஸ்வி ஏற்றுக்கொள்ளாததால் முதலமைச்சர் நிதிஷ்குமார்
இராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் இராஜினாமா செய்த அடுத்த நொடியில் பாரதீய
ஜனதா கைகொடுத்தது. இதன் மூலம்
அவருடைய இராஜினாமா நாடகத்தின் பின்னணியில்
பாரதீய ஜனதா இருப்பது வெளிச்சத்துக்கு
வந்தது. பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதும்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் சோனியாவுடனும் லல்லுவுடனும்
கைகோர்த்து பீகார் சட்டசபைத் தேர்தலில்
வெற்றி பெற்று முதலமைச்சரானார். தான்
எதிர்த்த மோடியின் ஆதரவுடன் இப்போது
மீண்டும் முதலமைச்சராகியுள்ளார்.
பீகார் சட்டசபைத்
தேர்தல் 2015 ஆமாண்டு நடைபெற்றது. அப்போது லல்லுவின் ராஷ்ட்டிய 80 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்
71 தொகுதிகளிலும்,
சோனியா தலைமயிலான காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இக் கூட்டணியை
எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 58 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா 53 தொகுதிகளில் வெற்றி
பெற்று நான்காவது இடத்த்தைப் பெற்றது.
பீகாரில் லல்லுவின் செலவாக்கு இன்னமும் குறையவில்லை. அதிகளவான தொகுதிகளை லல்லுவின் கட்சியே பெற்றது.
என்றாலும் அரசியல் சிக்கல் காரணமாக முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கு அவர்
விட்டுக் கொடுத்தார்.
காங்கிரஸ் கட்சி
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ரயில்வே
அமைச்சராக லல்லு பதவி வகித்தார். அப்போது அவர்
செய்த ஊழல் பற்றிய ஆவணங்களை தூசு தட்டிய பாரதீய ஜனதா அல்லுவின் மீதும்
அவருடைய மகன் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கூவத்தூர் கூத்து,
குட்க விற்பனைக்கான இலஞ்சம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பண விநியோகம் போன்றவை
தமிழகத்தில் நடைபெறுவதை பாரதீய ஜனதா
கண்டுகொள்ளவில்லை. பாரதீய ஜனதாவுக்கு அடிமையான கட்சி தமிழகத்தை ஆட்சி செய்கிறது. பாரதீய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணி பீகாரில் ஆட்சியில்
இருக்கிறது. அங்கும் தான் விரும்பியவாறு பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பீகாரை பாரதீய ஜனதா குறிவைத்ததும், பிரதமர் மோடிக்கும்
முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. நிதிஷ்குமாரின்
மதுவிலக்குக் கொள்கைக்கு மோடி பாராட்டுத் தெரிவித்தார். மோடி அரசின் பணமதிப்பு
கொள்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்தன. நிதிஷ்குமார் அதற்கு
ஆதரவு தெரிவித்தார். துணை ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் எதிர்க்கட்சிகளின் கூடடத்தில்
நிதிஷ்குமார் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியை அனுப்பி வைத்தார்.இதேவேளை லல்லுவுக்கும்
நிதிஷ்குமருக்குமான உறவில் விரிசல் ஆரம்பமானது.
பீகாரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற லல்லுவின் குற்றச்சாட்டு இதில் முதன்மையானது.
பீகாரின் நலன்
கருதியே இந்த முடிவை எடுத்ததாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அவரின் முடிவில்
யாருடைய நலன் மிகுந்திருப்பதென்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ராகுல்காந்தி
காந்தி நிதிஷ்குமாரை அழைத்துப் பேசியும் அவர் மசிந்து கொடுக்கவில்லை. நிதிஷ்குமாரை
முதல்வராக்கிய லல்லுவும் சோனியாவும் எதுவும் செய்ய முடியாத நிலையில் கையைப்
பிசைந்து கொண்டு நிற்கின்றனர். ஜனநாயக முறைப்படி மக்கள் விரும்பி ஆட்சி
அமைப்பார்கள். அரசியல்வாதிகள் தமது விருப்பத்துக்கேற்ப ஆட்சியை மாற்றுவார்கள். தமிழகத்தில் நடைபெறும் அதே கூத்துத் தான் பீகாரிலும் நடைபெறுகிறது.
நிதிஷ்குமார் தனது
விருப்பப்படி பீகாரில் ஆட்சியை மாற்றி அமைத்ததை ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த
தலைவர் சரத் யாதவ் விரும்பவில்லை. நிதிஷ்குமாருக்கு பீகாரில் மட்டும் தான் செல்வாக்கு உள்ளது. அடுத்து வரும்
தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் பலமும் அவருக்கு இல்லை.தேசிய
அளவில் அவருக்கு செல்வாக்கில்லை. பீகாரில் உள்ள கட்சித் தொண்டர்களும் நிதிஷ்குமாரின் அணி மாற்றத்தை விரும்பவில்லை.
அவருக்கு எதிரான போராட்டங்கள் சிறியளவில் நடைபெறுகின்றன.அடுத்த தேர்தல் வரும் வரை
நிதிஷ்குமாரின் பதவிக்கு ஆபத்தில்லை.
சூரன்.ஏ.ரவிவர்மா
No comments:
Post a Comment