Monday, August 28, 2017

ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இந்தியா

கண்டி பலேகல்ல மைதானத்தில் 27 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. ரோஹித்தின் சத்தமும் டோனி ரோஹித் இணையின் நிதானமான துடுப்பாட்டமும் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்றதால் இலங்கைக்கு கடும் நெருக்கடி தோன்றியது.


நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50  ஓவர்களில் 9 விக்கெற்களை   இழந்து  217  ஓட்டங்கள் எடுத்தது. பும்ராவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது இலங்கை வீரர்கள் ஆட்டமிழந்தனர். திரிமானே 80,சண்டிமால்  36,சிரிவர்தன 29  ஓட்டங்கள் எடுத்தனர். மூன்றாவது இணைப்பாட்டமாக விளையாடிய சண்டிமால் ,திரிமானே  ஜோடி 72 எடுத்தது. இந்திய வீரர்களின் ஆதிக்கத்தை இலங்கை வீரர்களால் தகர்க்க முடியவில்லை. இலங்கை துடுப்பெடுத்தாடுடியபோது  47 ஆவது ஓவரில்  7 விக்கெற்களை இழந்து 192   ஓட்டங்கள்  எடுத்த போது மழை பெய்தது. 10 ஓவர்கள் பந்து வீசிய பும்ரா  27ஓட்டங்களைக் கொடுத்து முதல் முறையாக 5 விக்கெற்களை வீழ்த்தினார் 2016  ஆம் ஆண்டு  ஸிம்பாப்வேக்கு எதிராக அதிக பட்சமாக நான்கு விக்கெற்களை வீழ்த்தினார்.   நெஹ்ரா, ஹர்பஜன் ,இர்பான் பதான் ஆகியோருக்குப் பின்னர் இலங்கையில் ஐந்து விக்கெற்களை விழ்த்திய வீரராக விளங்குகிறார்.
 இலங்கை நிர்ணயித்த  218 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 15.1 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து  61 ஓட்டங்கள்  எடுத்ததால் இலங்கை அணி  ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். நான்காவது இணைப்பாட்டமாக விளையாடிய ரோஹித்தும் டோனியும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். ரோஹித் டோனி  ஆகிய இருவரும் ஆட்டமிழக்காது முறையே 124  67  ஓட்டங்கள் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருத்தப் பெற்ற ரோஹித் தனது 12 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இலங்கை மண்ணில் இவரது முதலாவது சதம் இதுவாகும்.. 
 

இந்தியாவுக்கு எதிராக   1997    ஆம் ஆண்டு இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றது.   20  வருடங்களாக இந்தியாவின் கை கேலோங்கு இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற  10தொடர்களில்  8 தொடர்களை இந்தியா வென்றது. இரண்டு தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தன.  இலங்கை துடுப்பெடுத்தாடும் போது பும்ரா வீசிய 17 ஆவது ஓவரில் சண்டிமாலின் வலதுகை கட்டை விரலில் காயமேற்பட்டது.மருத்துவ பரிசோதனையின் போது விரலில் முறிவு ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் இத் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மைதானத்தைநோக்கி தண்ணீர்ப் போத்தல்களையும் வேறுசில பொருட்களையும் எறிந்தனர். இந்திய அணி 44 ஆவது ஓவரில் விக்கெற்களை இழந்து  210  ஓட்டங்கள்  எடுத்தபோது  ஆட்டம் நிறுத்தப்பட்டு ரகளை செய்த ரசிகர்கள் வெளியேற்றப்பட்ட பின் போட்டி  நடைபெற்று இந்திய வெற்றிபெற்றது.

நான்காவது ஒருநாள் போட்டி  எதிர்வரும் 31 திகதி  வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறும்.
 சூரன்.ஏ.ரவிவர்மா






No comments: