Sunday, March 4, 2018

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அழகான மயில் ஸ்ரீதேவி


     

இந்தியத் திரை உலகை சுமார் 20 வருடங்களாகத் தனது   வசீகரச் சிரிப்பால் கட்டிப்போட்ட அழகான மயில் ஸ்ரீதேவி. சிவாஜி- பத்மினி ,சிவாஜி -கே.ஆர்.விஜயா , எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி ,எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா ஜோடிக்குப்பின்னர் கமல் - ஸ்ரீதேவி ஜோடி சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

 துணைவனில் முருகனாக அறிமுகமாகி மூன்று முடிச்சு மூலம் கதாநாயகியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஸ்ரீதேவி 16 வயதினிலே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.16 வயதினிலே படத்தில் பார்த்த அதே அழகுத் தேவதையாகத்தான் இன்றும் அவர் ஜொலித்தார். காந்தப் புன்னகையின் உறைவிடமான ஸ்ரீதேவி காலமாகிவிட்டார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.

சிவாஜி,எம்.ஜி.ஆர், என்ற இரண்டு இமயங்களின் மடியில் விளையாடி, கமல்,ரஜினி ஆகிய இருவருக்கும் ஈடுகொடுத்து தன்னை முன்னிறுத்தியவர்.  ஹிந்தியில் அமிதாப் ஜிதேந்திரா,ஜெயப்பிரதா,ரேகா போன்ற  நட்சத்திரங்களுடன் போட்டிபோட்டு லேடி சுப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் ஸ்ரீதேவி எனும் சிரிப்பழகி.

சிவகாசி,மீனாம்பட்டிக் கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். தகப்பன் ஐயப்பன் வக்கீலாகத் தொழில் பார்த்தவர். தாயார் ராஜேஸ்வரி தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படங்களில் ஜொலித்தபோதும்  தான்  பிறந்த கிராமத்திலேதான் வசித்தார். கதாநாயகியானபின் சென்னையில் குடியேறிய போதும் ஹிந்தியில் ஜொலித்த வேளையிலும் தனது கிராமத்தை மறக்காதவர்.

சாண்டோசின்னப்பா தேவரின் துணைவன் படத்தில்  குழந்தை முருகனாக நடிப்பதற்கு அழகான குழந்தை ஒன்றைத் தேடியபோது, காமராஜரின் சிபார்சில் கண்ணதாசனால் தேவருக்கு அறிமுகமானவர் குழந்தை ஸ்ரீதேவி.  நான்கு வயதான   முருகன் அனைவரையும் கவர்ந்தார் அதன் பின்னர் வெளியான பல படங்களில் சிறுவனாகவும் சிறுமியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வசந்தமாளிகை, பாபு, பாரதவிலாஸ் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் நடித்தார்.. நம்நாடு படத்தில் குழந்தை நட்சத்திரமாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். கனிமுத்து பாப்பா,திருமாங்கல்யம், அகத்தியர், ஆதிபராசக்தி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். 23 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபின்னர் 24 ஆவது படத்தில் கதாநாயகியாகப் பரிணமித்தார்.

குழந்தை நட்சத்திரமான ஸ்ரீதேவியை 1976 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் மூன்று முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார். கமல்,ரஜினி ஆகிய இருவருக்கும் ஈடு கொடுத்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். மூன்று முடிச்சு படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்கு 13 வயது.  அப்போதும் அவர் சிறுமிதான். கமலின் காதலியாகவும் ரஜினியின் சித்தியாகவும் நடித்து முத்திரை பதித்தார். முதல் படத்தியேலே கமலின் நாயகியாகவும் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்தார். கமலையும் ரஜினியையும் பட்டை தீட்டிய பாலசந்தர் ஸ்ரீதேவியையும் ஜொலிக்கவைத்தார்.

மூன்று முடிச்சு நாயகி  செல்வியைப்பற்றி ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருந்த வேளையில் 1977 ஆம் ஆண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே பட நாயகியான மயில் ரசிகர்களின் மனதை மயிலிறகால் வருடினார். கமல்,ரஜினி  போன்றவர்களுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி சில படங்களில் சிவாஜியுடன் ஜோடியாக நடித்தார். கமல்,ரஜினி,சிவாஜி,சிவகுமார் போன்ற பலருடன் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்தபோதும் கமலுடனும் ரஜினியுடனும் நடித்த படங்கள்தான் அதிகமாகப் பேசப்பட்டன.

கமலும் ஸ்ரீதேவியும் இணைந்து  24 படங்களில் நடித்துள்ளனர்.   1976ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சுதான் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த முதல் படம். இதில் வில்லன் என்றாலும் கதாநாயனுக்கு இணையாக மிரட்டியவர் ரஜினி 16 வயதினிலே படத்தில் கமல்,ரஜினி,ஸ்ரீதேவி ஆகிய மூவரின் நடிப்பில் யாருடைய நடிப்பு உச்சத்தைத் தொட்டது என்ற பட்டிமன்றத்துக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா,தாயில்லாமல் நானில்லை போன்றவை உச்சம் தொட்ட படங்கள்.

வெள்ளிவிழா படமான கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு ஆகிய படங்கள் இருவரின் நடிப்பில் புதிய அத்தியாயத்தைப் படைத்தன. குரு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரு வெற்றி பெற்றது. இலங்கையில் ஒருவருடம் ஓடி தமிழ்  மட்டுமல்லாது சிங்கள ரசிகர்களின் மனதிலும் கமலும் ஸ்ரீதேவியும் இடம் பிடித்தனர். மீண்டும் கோகிலா படத்ஹ்டில் கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர்.  சின்னஞ்சிறு வயதில் என்ற பாடல் காட்சி மனதை விட்டு  நீங்காதது.
தேவதாஸ்,வசந்தமாளிகை போன்ற காதல் படங்களுக்கு ஈடாக வெளியான படம் வாழ்வே மாயம். கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்த படம் மூன்றாம் பிறை. கமலுக்கு முதன்  முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். சத்மா என்ற பெயரில் ஹிந்தியிலும் வெற்றிபெற்ற படம்.

ரஜினியுடன் 22 படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். மூன்று முடிச்சில் வில்லத்தனம் காட்டிய ரஜினி 16 வயதினிலேயும் தொடர்ந்தார். சப்பாணி,மயிலு போன்றே பரட்டையும் பட்டையை கிளப்பியது. வணக்கத்துக்குரிய காதலியே,பிரியா, தாயில்லாமல் நானில்லை, தர்மயுத்தம்,ஜானி,ராம் ராபர்ட் ரஹீம், {தெலுங்கு}, ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை ஆகியன வெற்றிப் படங்கள் வரிசையில் முன்னிலை வகிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு வெளியான சோர் கே கார் சோர்னி என்ற ஹிந்திப் படமே இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்கு சான்றாக 'ஆலிங்கனம்' குட்டவும் சிக்ஷையும்' 'ஆத்ய பாடம்' ' நிமிஷம்' போன்ற திரைப்படங்களை கூறலாம்.

1975ம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜுலி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன்' (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட 'மூன்றாம் பிறை' திரைப்படம் ஹிந்தியில் சத்மா' என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

அதன் பின் வெளிவந்த 'ஹிம்மத்வாலா' 'சாந்தினி' திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியும் இணைந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996ம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான           போனிகபூரை மணமுடித்தார்இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஜான்வி சினிமாவில் நடிக்கின்றார்.

  சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்குப் பின் 2012ம் ஆண்டு வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடித்தார்.    இப்படத்தில் அஜித்தும் நடித்துள்ளார்.  மாம் ஸ்ரீதேவியின் கடைசிப்படம்.  2015  ஆம் ஆண்டு   விஜயுடன் நடித்த புலி என்ற படமே இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம்.

   இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் ஸ்ரீதேவி பெற்றுள்ளார்.

ஸ்ரீதேவி பெற்ற விருதுகள் :
  2013 ல் பத்மஸ்ரீ விருது
    சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதுகள். 4 முறை
   பிலிம்ஃபேர் சிறப்பு விருது 2 முறை
  1981 ல் மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது
  2013 ல் இங்கிலீஷ் விங்கிலீஷ்.  படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது.
 2013 ல் என்டிடிவி விருது
  2013 ல் இந்தியா டுடேவின் கலைத்துறையில் சிறந்த பெண் விருது
 2013 ல் இந்திய சினிமாவின் பேரரசி விருது
  2015 ல் புலி படத்திற்காக சிறந்த வில்லி விருது
  இந்திய சினிமாவில் இவர் அளித்த பங்களிப்பிற்காக 1990, 2003, 2009, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கி கெளவிக்க்கப்பட்டுள்ளார்.
  2012 ல் டாப் 10 பாலிவுட் நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்
ஸ்ரீதேவியின் வாழ்வு முடிந்தாலும் அவர் நடித்த பாத்திரங்கள் ரசிகர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்.
வர்மா

No comments: